உருது இலக்கியமும் மலைக்குளிரும்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

இந்த கோடையில் வெள்ளி மலையில் நிலவும் குளிரும், நான்கு நாட்களாக நண்பர்களின் உரையாடலும், உருது வகுப்பும் என வாழ்வின் மேலும் சில மிக இனிய நாட்களாக சென்ற வாரம் அமைந்தது.

வகுப்பில்  ஆசிரியர் ஃபயஸ் காதிரி அவர்களின் சொற்கள் வழியே புதிய தேடல்  களங்கள் திறந்துகொண்டே இருந்தது பரவச அனுபவமாக இருந்தது. உருது மொழியின் தோற்றம் அதன் பரிணாம வளர்ச்சி, காலம் தோறும் அதன் இலக்கிய வளர்ச்சி, அதற்கு பங்களித்த ஆளுமைகள், தமிழ் நிலம் உள்ளிட்டு உலக சூழலில் உருது, என ஒரு அடிப்படை பாட திட்ட கோட்டு சித்திரம் மேல் இந்த வகுப்பு நிகழ்ந்தாலும் இந்த வகுப்பு வெளியே கிடக்கும் செத்துப்போன அகாடமிக் பாட திட்ட வகுப்பாக இல்லாமல், உருது அதன் சாராம்சத்தில் எத்தனை உயிரோட்டம் கொண்டதோ அதே உயிரோட்டதில் இந்த வகுப்பு நிகழ்ந்தது மகிழ்வான கற்றல் அனுபவமாக அமைந்தது.

வகுப்பு நிறைவு அடைந்ததும் ஒட்டு மொத்தமாக இந்த வகுப்பு வழியே என் உள்ளே திரண்ட இந்த வகுப்பின் ஆழ் நதி நீரோட்டமாக அமைந்த விஷயங்கள் மிக முக்கியமானதுகுறிப்பாக மொழியியல் சார்ந்து இந்த வகுப்பு அளித்த பார்வைக் கோணம். மொழி என்பது சமூக உற்பத்தி எனும் தரப்புக்கு நேர் எதிரானவன் நான். மொழி என்பது ஒருவன் உள்ளே உள்ளது. உயிர் போன்றது. அதன் பயன்பாட்டு அலகுகள் மட்டுமே புறவயமானது. உடல் போன்றது. உயிர்தான் ஆதாரம் உயிர் இன்றி உடல் இல்லை.

ஆதி மனிதன் கூடி வாழும் இயல்பு கொண்டவன். தமிழ் போன்ற ஆதி மொழிகள் இந்த கூடி வாழும் இயல்பின் விளை கனியாக இருந்த ஒன்றே. மிக பின்னர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பிற காரணிகள் வழியே தனி மனித நோக்கின்னை அடிப்படையாக வாழ்க்கைப் பார்வை வளர்கையில், இணையாக உலகம் முழுவதும் தனி இன அடையாளம் போன்ற சமூக பார்வைகள் வளர்கயில் உதித்ததேதனித்தமிழ்போன்ற விஷயங்கள்.

நேர் எதிராக மேற்சொன்ன நவீன காலம் உருவாகும் சூழலில் பிறந்து வந்த பண்பாட்டின் விளை கனியாக உருது மொழி இருக்கிறது. அதில் நாங்கள் நீங்கள் என்பதே இல்லை நாம் மட்டுமே இருக்கிறது.

அந்த பண்பாட்டு  நாம் இல் இருந்து முகிழ்ந்த மொழியான உருது, அதன் வரலாறு நெடுக இந்தியாவை இந்தியா என்று  கட்டிவைத்திருக்கும் அடிப்படை அலகான பண்பாட்டு ஒற்றுமையின் பக்கமே எப்போதும் நின்றதயும் அரசியல் ஒவ்வொரு முறையும் இதை கிழித்து எறிந்ததையும் வகுப்பில் ஸ்தூலமாக காண முடிந்தது. மிர்சா காலிப் முதல் மன்ட்டோ வரை இந்த ஒருமைக்கு ஆதவாகவும் பிரிவினை கண்டு துடித்ததன் சாட்சியமாகவும் அவர்களின் ஆக்கங்கள் இலங்குகிறது.

பண்பாட்டு ரீதியாக மொழி என்பது எத்தகையதொரு இணைப்பு கருவி என்பதை காந்தி அறிந்திருந்தார் என்பதையும், சுதந்திர இந்தியாவில் ஒரு வாக்கில் உருது தோற்றதும் வகுப்பு வழியே புதிய பார்வையில் அறிய நேர்ந்ததுஆசிரியர் காதிரி அவர்களும் நீங்களும் வகுப்பின்  அலகுகள் மீது பரஸ்பரம் நிகழ்த்திய  உரையாடல்கள், அரங்கில் நிகழ்ந்த கஸல் பாடல் என முற்றிலும் அறிவுபூர்வமான உணர்வு பூர்வமான மகிழ்ச்சியில் திளைக்க செய்த தினங்கள். ஒட்டு மொத்தமாக நினைவில் மீட்டுகையில் வகுப்பு வெறும் உருது இலக்கிய அறிமுகம் வகுப்பாக மட்டுமே இல்லாமல், இந்திய பண்பாட்டின் கலை வரலாற்றின் சமூக அரசியல் வரலாற்றின் நாம் கவனிக்க தவறிய விஷயங்கள் வழியிலான குறுக்கு வெட்டு தோற்றம் ஒன்றினை வகுப்பு அளித்தது. அனைத்துக்குமாய் நன்றி சார்.

கடலூர் சீனு 

முந்தைய கட்டுரைபனிமலையும் பிரம்மசூத்திரமும்