
அனேகமாக ஓராண்டுக்கு முன்பு நான் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் படம் வெளிவந்தபோது அதைக் கடுமையாகத் தாக்கி எழுதினேன். குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் என அதைக் குறிப்பிட்டேன். காட்டுக்குள் செல்லும் மலையாள இளைஞர்கள் அங்கே இயற்கையைச் சீரழித்து, குடித்துக் கும்மாளமிடுவது வாடிக்கையாக ஆகிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தச் செயல்பாட்டை அந்தப்படம் ‘இயல்பாக்கம்‘ செய்வதைத்தான் கடுமையாக குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன்.
இங்கே எந்த சமூகத் தீமை சுட்டிக்காட்டப்பட்டாலும் உடனே அதை நியாயப்படுத்தி, அதன் தரப்பில் நின்று பேசும் ஒரு குரல் உருவாகும். அவர்கள் தாங்கள் ‘அப்பால் கடந்து‘ சிந்திப்பதாக ஒரு பாவனை கொள்ள அது உதவுகிறது. ஒருவகை மழுமட்டைகள் இவர்கள். இன்னொரு சாரார், இளைஞர்களை எவரேனும் குறைசொன்னால் உடனே இளைஞர் தரப்பை எடுத்துப் பேசும் மீசைநரைக்கு கறுப்பு பூசும் ‘யூத் அங்கிள்கள்‘.
அப்படி பல வசைகள். இன்று அதெல்லாம் எவர் நினைவிலாவது உள்ளனவா என்று தெரியவில்லை.
ஆனால் எனக்கு மிகப்பெரிய ஆதரவு வந்ததே கேரளச்சூழலில்தான். கேரள அமைச்சர்கள் உட்பட பலர் நான் சுட்டிக்காட்டியதை மேற்கோள்காட்டிப் பேசினர். நான் பேசியபின் தொடர்ச்சியாக மலையாள சினிமாவின் போதைச்சூழல் கவனத்துக்கு வந்தது. பலர் கைதாயினர். இன்று பள்ளிகளில் போதைநீக்கத்துக்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இங்கேயும் அப்படி ஒன்று நிகழ்ந்தது. நான் இங்குள்ள அரசுப்பள்ளிச் சூழல்களில் கட்டற்ற செயல்பாடுகள் கொண்ட சிறுவர்கள் பெருகுவதை, ஆசிரியர்களை சட்டம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதைப்பற்றி குறிப்பிட்டேன். உடனே ‘அய்யகோ அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டப்படுத்தப்படுகிறார்கள்‘ என்று கும்பல் ஒன்று கூச்சலிட்டது. வழக்கமான பாவலாக்காரர்கள்தான். அடுத்த வாரமே நான் சொன்னதையே கல்வியமைச்சர் சுட்டிக்காட்டியபோது, பள்ளிகளில் மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டபோது அவர்கள் குரல் அமுங்கி பதுங்கிவிட்டனர்.
நிலைமைகளை சுட்டிக்காட்டிப்பேசும் எழுத்தாளர்களே இங்கே குறைவு. பேசினால் இந்த பகல்வேஷக்கும்பலுடன் மோதவேண்டியுள்ளது. இருந்தாலும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
இன்று நாம் நம் குழந்தைகள் இயற்கையுடன் கொண்டுள்ள உறவு என்ன என்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறோமா? மஞ்ஞும்மல் பாய்ஸ் போலத்தானே நம் குழந்தைகளும் இருக்கிறார்கள். நாம் என்னதான் செய்கிறோம்?
ஒருவருக்கு வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து வரும் உறவு என்பது இயற்கையுடன் இருத்தல். வாழ்க்கையின் எல்லா சிக்கலிலும் ஆறுதல் அதுவே. இயற்கையுடன் இருப்பவருக்கே கலையும் இலக்கியமும் கைவரும். மெய்யான ஆன்மிகம் என்பது இயற்கையுடன் இருத்தல்தான். ஆனால் இயற்கையை நாம் நம் குழந்தைகளுக்கு இளமையிலேயே அறிமுகம் செய்தாகவேண்டும்.
ஏன் நாம் நம் குழந்தைகள் மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற பொறுக்கிகள் ஆகிறார்கள்? இயற்கையின் மடியில் ஏன் அவர்களால் அமைதியாக ஐந்து நிமிடம்கூட இருக்கமுடிவதில்லை? ஏன் அதை சீரழித்து மகிழ்கிறார்கள்? அவர்களுக்கு இளமையிலேயே நாம் கற்பிக்கவேண்டியது என்ன?
ஜெ