அன்புள்ள ஜெ
நீங்கள் ஓர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள். ஆனால் இந்தவகையான அமைப்புகள் வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் பெருவாரியான மக்கள் பங்கேற்பு வேண்டும். மக்களுக்கு தேவையான விஷயங்கள் இருக்கவேண்டும். மக்களுக்கு புரியும் விஷயங்களும் மக்களுக்குப் பிடிக்கும் விஷயங்களும் அங்கே இருக்கவேண்டும். அப்படி எளிமையாக, உபயோகமான விஷயங்களை முன்வைப்பவர்கள்தான் வெற்றி பெற்று பெரிய நிறுவனமாக ஆகிறார்கள். நான் சொல்லவந்தது அதைத்தான்.
எஸ்.ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
அப்படி பெரிய நிறுவனமாக ஆவது என் எண்ணமோ கனவோ அல்ல. நீங்களோ பிறரோ அப்படி எண்ணிக்கொண்டால் நான் பொறுப்பேற்க இயலாது.
பொதுமக்களுக்கு லௌகீகமான பிரச்சினைகள் உள்ளன. அதற்கான எளிமையான தீர்வை நாடுகிறார்கள். அதன்பொருட்டு வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவோ எதையும் கற்கவோ தயாராக இல்லை. தங்களுக்கு உகந்த வாழ்க்கை தொடரவேண்டும் என்றும், தங்களுக்கு தெரிந்ததே மீண்டும் சொல்லப்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அவ்வழிச் செல்லட்டும். எனக்கு பொதுமக்களிடம் எந்தவகை தொடர்பும், உரையாடலும் இல்லை. எனக்கு அதில் ஆர்வமில்லை.
நான் உத்தேசிப்பது ஏதேனும் ஒருவகையில் அறிவியக்க ஆர்வம் கொண்டவர்களை மட்டுமே. அவர்கள் மிகச்சிறுபான்மையினர் என்றும், அவர்களைக்கொண்டு அமைப்புகளை உருவாக்க முடியாதென்றும் அறிவேன். அவர்கள் கற்க விரும்பினால் கற்பிப்பதற்கான அமைப்பு இங்கே இருக்கவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். அதற்காகவே இந்த கல்விநிகழ்வுகள். இவை ஒரே இயக்கமாக திரளவேண்டும் என்றுகூட நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இவற்றுக்கு கொள்கைமையமோ, தலைமையோ இல்லை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆசிரியரால் நிகழ்த்தப்படும் தனிக்கல்விகள்.
கல்கி ஒரு கதை எழுதியிருப்பார், சாரதையின் தந்திரம். எனக்குப்பிடித்த தலைப்பு. சாரதை அறிவின் தேவி. ஞானத்தின் தலைவி. (சரஸ்வதியின் இன்னொரு வடிவம்) ஆனால் காட்டில் உறையும் கரியவள். அவள் தந்திரமானவள், மறைந்திருப்பவள். அவளை தேடிக்கண்டடைபவர்களுக்கு மட்டுமெ தெரிபவள்.
ஜெ