சூஃபி தரிசனம்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மீண்டும் ஒரு நன்றிக்கடிதம்.

இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு அனுபவங்கள் இத்தனை நாட்கள் கடந்த பின்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றது. (உணர்ச்சிகள்  எல்லாம் வடிந்த பின் எழுதலாம் என்று காத்திருந்தேன் என்று ஒரு உருட்டு உருட்டலாம் என்று பார்த்தேன், கண்டுபிடித்துவிடுவீர்கள் , முழுசோம்பல் மட்டுமே காரணம்)

முதன் முதலில் இஸ்லாமிய மெய்யியலில் கவனம் ஏற்பட்டது 10 வருடம் முன் தற்செயலாய் செய்தித்தாளில் பார்த்த ஒரு குர்ஆன்  வசனத்தில் இருந்து.

“(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்🙂 “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.”

அன்றைய சூழல்,மனநிலையில் அது ஆழ சென்று படிந்துவிட்டது. நம்பிக்கை/அவநம்பிக்கையில்  இருந்து உண்மையென இறையை எனக்கு ஆக்கிய வசனம். அங்கிருந்து தொட்டு தாவி இஸ்லாமிய சூஃபி மெய்யியல், கவ்வாலி இசை,குர் ஆன் எல்லாவற்றிலும் ஒரு சிறு ஈடுபாடு உண்டு.

இஸ்லாமிய வகுப்பு அறிவிப்பு வந்தவுடன் உற்சாகம் தொற்றிக்கொண்டது. இஸ்லாமிய இறை தத்துவம் மற்ற சமயங்களுடன் முரண்படுவது literalistகளின்  அற்ப தர்க்கங்களிலும் அகங்காரங்களிலும் மட்டும் தான் என்பது எனதனுபவம். அதில் ஒரு துளி சந்தேகமும் ஏற்பட்டதில்லை. எனது  புரிதல்களை சரியா என சோதித்து பார்க்கவும் ,முறையாக ஒரு ஞானவானிடம் கற்று தெளிவு பெற வேண்டியும் பல இருந்தன.

வகுப்பிற்கு இரு நாட்கள் முன்னரே ஒரு சூஃபியின் சொற்களால் மனம் சிறப்பானதொரு நிலையில் திகழ்ந்தது.

“When the sinner shuts the door, lowers the curtain, closes the window and gets down to sin, the earth will say “O Lord allow me to swallow him up!” and the sky will say “ Allow me to fall upon him!”. The glorious and exalted lord will reply,

“If the servant is your servant, then do with him what you will, but if he is My servant, then leave him alone. For if he comes to Me in the darkest of Night, I’ll accept him and if he comes to me in the brightest of the day, I’ll accept him. There is no gatekeeper or warden blocking My door, And whenever he comes to Me he will find a path, whenever he calls, ‘My Lord’ I answer ‘My servant!’

And whenever he says ” I’ve sinned O Lord” I reply ‘ I’ve forgiven you, My Servant’.

ஈரோட்டில் வந்திறங்கி மலைத்தங்முமிடம் செல்லும் வரையில் இனிய நண்பர் நாராயணகுமாருடன் பேச்சு. இதுவரை உங்கள் தளத்தில் அறிமுகம் இல்லாவிட்டாலும், பார்த்த மாத்திரத்தில் ஈரமான கண்களுடனும், கண்ணியமான சிரிப்புடனும் பேரன்பிற்குரியவரானார்   ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்கள்.

மாலை வகுப்பு தொடங்கியது. 2 நாள் வகுப்பில் பல நிறைவாக நினைவில் நிற்கும் தருணங்கள்/திறப்புகள், சில தருணங்கள் ஜிக்ஸா பஸ்ஸிலின் கடைசி துண்டின் நிறைவை போன்றவை, சில தொலைந்த ஏதோ ஒன்றை தேடி மின்னல் ஒளியில் கண்டு கொண்டது போன்றவை. தெரிந்த பல சொற்கள் புது அர்த்தம் கொண்டன.

இஸ்லாத்தின் அடிப்படைகள் [ ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ] ; நபியின் வரலாறு, சகாபாக்கள், ரஷீதுன் காலிப்கள், அரேபிய தொன்மங்கள் , புராணக்கதைகள், சூபி மரபு/ வழக்கங்கள், தமிழ் இஸ்லாம்/சூபித்துவம், தமிழ் இஸ்லாமிய இலக்கிய மரபு , மருத்துவம் என விரிந்து சென்றது வகுப்பு.

சகாப்பாக்கள்[sahabbas] எனும் சொல்லே ஒரு பிரகடனம். நபித் தோழர்கள் [companions] தான், அவர்களில் மாணவர்கள், தொண்டர்கள் அனைவரும் அடக்கம் ஆனால் மேல் கீழ் ஒன்றும் இல்லை.

இஸ்லாமிய வாழ்வியலில் என்னை பெரிதும் கவர்ந்தவை தொழுகையும் அதற்கான அழைப்பும். எந்த நேரத்தில் Azaan ஒலித்தாலும் அதை கேட்கத்தவறுவதில்லை. பெருங்கருணையுடன் ஒலிக்கும் தக்பீர் எப்பொழுதும் கண்ணீரை வரவழைப்பது. அன்றாடத்தின் சழக்குகள் மத்தியில் இறையை மனதில் நிறுத்திக்கொள்ள அமையும் ஒரு பொழுது. பாலையின் வெட்டவெளியும் கரட்டு மேடும்  பாசாங்கில்லா ஒரு கனிவை இஸ்லாத்திற்கு கொடுத்திருக்கிறது.

தொழுகையின் அகமியங்களும், திக்ர் எனப்படும் தியான முறையைக் கொண்டு ஆசிரியர் நிஷா மன்சூர் கொடுத்த சிறு பயிற்சியும் மகத்தான ஒரு அனுபவம்.

இந்த வகுப்பில் நான் புதிதாய் அணுகி அறிந்தது நபிகளின் வாழ்க்கையும் மாண்பும். மலையை பிளக்க கூடிய இறை சொல் வந்திறங்கியதை சலனமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் வல்லமை கொண்டவர் அதே நேரத்தில் நெகிழ்வுடையவர். குழந்தைக்காக கதறி அழுதவர் , விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனையை  அந்த பெண் கேட்டும் தள்ளி போட்டு கொண்டு சென்றவர், பசியில் ஒட்டி போன வயிர் வெளியே தெரியாமல் இருக்க கல்லை கட்டிக் கொண்டிருந்தவர், பகைவனுக்கும் நியாயம் செய்பவர், நட்பில் கொடுத்த/கோர்த்த கையை முதலில் விலக்காதவர், zammiluni என கதீஜா அண்ணை மடி நோக்கி ஒடி வந்தவர், சிரிப்பவர் , பெண்களையும் நறுமணங்களையும் விரும்புபவர்.

ஆசிரியர் நிஷா சொன்னார்நபியை சந்திக்க எவர்  வந்தாலும் செல்லும் போது இரண்டு முடிவுகளுடன் செல்வர் ஒன்று எனக்கு உலகிலேயே மிக பிடித்தவர் நபி தான், அவருக்கு மிக பிடித்தவர் நான்தான்” . எனக்கும் அப்படியே தான் தோன்றியது.

நபிகள் ஒரே நேரத்தில் ஒரு நிர்வாகியாகவும், அரசராகவும் , பொதுமக்களிடம் அன்றாடம் புழங்கியதால் பொதுவில் வழங்கப்படும் குர்ரான் மற்றும் ஹதீஷ்கள் LCM [ Least Common Multiple ] ஆக வழங்கப்பெற்று பொது  உரையாடலில் HCF[ Highest common Factor] வரையே கொண்டு செல்லும். அதற்கு மேல் மெய் ஞானம் வேண்டி செல்லவேண்டுமென்றால் ‘Suffa’வில் இருந்த நபியின் 313 திண்ணை தோழர்களின் கரம் பற்ற வேண்டும்.

நபிகள், இதயத்தின்பால் நின்று இறைகண்டிப்புக்காளான நிகழ்வு சூபித்துவம் நபிகளிடமே தொடங்கியதற்கு சாட்சி. மன்னத் எப்பொழுதும் ஷரியத்தை விடப்பெரியது.

இஸ்லாத்தில் தக்பீர் முதல் குர்ரானின் கடைசி வசனம் வரை தியானம் மூலம் கண்டெடுக்கப்பட வேண்டியவை.[ நபிகள் முதல் வசனம் கிடைக்கப்பெறும் முன் 22 வருடம் தவம் செய்துள்ளார்.]   இந்த வகுப்பு ஒரு சிறப்பான தொடக்கத்தையும் வரைவையும் அளித்துள்ளது.

குர்ரானின் கவித்துவமே அதை எல்லாருக்கும் உரியதாக்குகிறது. சூஃபி கூறுகிறார் கடவுள் குழந்தைகளுக்கு வெகுளியாகவும், உணர்ச்சிகரமானவர்க்கு மனசாட்சியாகவும், மதவாதிகளுக்கு செப்பிடுவித்தைகாரனாகவும், ஞானியர்க்கு சூனியமாகவும் இருக்கிறான்.

Wahdad Al Ujud மற்றும் Wahdad Al Sujud  வைத்து வேதாந்ததிற்கு ஒப்பான ஒரு ontological மாடலை உருவாக்கலாம். அது மற்றொரு நாளிற்கு.

உபநிஷத்களின் உவமைகளும் சூபியரின் கவிகளும் உள்ளபடி ஒன்றாகவே இருக்கின்றன. எங்கள் ஆச்சார்யன் முதல் விசிஷ்டாத்வைத வகுப்பில் ஆரம்பிதது ஸ்வேதகேது உத்தாலக விவாதத்தின் களிமண்ணிலிருந்துஎதை ஒன்றை தெரிந்து கொண்டால் அனைத்தையும் அறிந்தவனாவாய்”. அதே ரூமியின்

Khud kooza o, khud kooza garo, khud gil e kooza

(himself the vessel, himself maker-of-it, himself material-of-it)

khud rind o subu kush.

(himself the one who drinks)

khud bar sar e aan kooza kharidaar bar amad

(himself it is as vessel’s buyer manifests)

ba shikast ravan shud

(and breaks and lets flow/spill)

https://www.youtube.com/watch?v=NoHCQEUja4Y

இசை அனுபவமாக இதையே பேராசான் பரீத் ஆயாஸின் கவ்வாலியில் 5.30 நிமிடம் முதல் கேட்கலாம்.

இங்கிருந்து அங்கு சென்றதா அங்கிருந்து இங்கு வந்ததா, உரையாடலில் வந்ததா என்பதை  சாகா வரமும் , வறட்டு அறிவும் உடையவர்கள் மேற்கொண்டு கண்டடையட்டும்.  

இஸ்லாம் என்றாலே பெரிதும் பேசப்படும் மறுமையே கூட சூஃபியருக்கு இரண்டாம் பட்சமே. “ நான் சொர்கத்திற்காக உன்னை வணங்கினால் எனக்கு அந்த சொர்க்கமே வேண்டாம், நரகத்திற்கு பயந்து உன்னிடம் வந்தால் அங்கேயே என்னை கிடத்திவிடுஎன்கிறார் சுஃபி. சரணாகதியான இறையனுபவமே பிரதானம்.

ஆசிரியர் ஒரு சுவரஸ்யமான நிகழ்வை சொன்னார். தனது பிரார்த்தனையின் பலனாய் ஒரு மௌலானா கடல் அலையில் தொழுகை செய்தார் , அதை பார்த்து ஒரு சூஃபி, வெறுங்காற்றில் தொழுகை செய்து காட்டி, இதுவெல்லாம் ஒரு சிறப்பு என்றால் ஒரு மீன் உன்னை விட சிறப்பான தொழுகையை செய்யும், ஒரு ஈ என்னை விட சிறப்பான தொழுகையை செய்யும். அதுவல்ல ஆண்டவன் சொல்வது.

சுவாமி சித்பவானந்தரின் ஒரு குறிப்பில் அவர் அனுபவங்களின் ஒருமையை சொல்ல மாணிக்கவாசகரும், புனித பிரான்ஸிசும் , சூபி ராபியாவும் ,சைதன்ய மஹாபிரபுவும் அடைந்த அனுபூதி ஒன்றுதான் என்கிறார். திரும்பி செல்லும் வழியில் நண்பர் சிவக்குமார் ஒரு பெர்சிய கவிதையை பகிர்ந்தார்.

தற்செயலாக, சூஃபி ராபியா எழுதியது

திறந்துகொடு திறந்துகொடுவென்று

எத்தனை காலம்தான் தட்டுவீர்கள்

திறந்து கிடக்கும் கதவை

அது அங்கேயே தான் இருக்கிறது. நாம் தான் விலகிச்செல்கிறோம்.

இனிய நட்பு, சானித்யமுள்ள வனம், அழகிய இரு நாட்கள். ஒரு இம்மியளவு குறையில்லாமல் நிகழ்வை நடத்தி அதே வேளையில் வகுப்பையும் கவனித்து பங்கேற்கும் அண்ணன் மணிக்கு அன்பும் மரியாதையும். அடுத்த வகுப்பிற்காக காத்திருக்கிறேன்.

நன்றிகளுடன்,

ரவிக்குமார்.

முந்தைய கட்டுரைஆன்மிகமும் கவிதையும்
அடுத்த கட்டுரைதியானமும் வழிமுறைகளும்