அன்புள்ள ஜெ அவர்களுக்கு வணக்கம்,
நான், இந்த மே மாதம், ஆலயக்கலை பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தேன்.
இதற்கு தூண்டுகோலாக இருந்தது, தாங்கள் தினசரி பதிவு செய்யும் அற்புதமான காணொளிகள். தங்களை பற்றி ஓரளவே நான் இதற்கு முன்னால் தெரிந்து வைத்திருந்தேன். தாங்கள் ஆற்றும் பணி மகத்தானது.பாரதி இன்று பாடி இருந்தால் “வெள்ளிமலையின் ” மீதுலாவுவோம் என்று கூட பாடி இருக்கலாம்.
காரணம், சரி சரி என்று போய்க்கொண்டிருக்கும் சராசரி மனிதர்களை தட்டி எழுப்பி, அவர்களின் பாதை எங்கே ? பயணம் எங்கே? என்ற ஒரு கேள்வியை கேட்கச் செய்து , இங்கே வர வைப்பது, ஒரு பெரிய தவம் போன்ற செயல்.
நித்தியவனம் எனக்கு ஒரு நந்தவனம் போல காட்சியளித்தது. இந்த இடத்தில் வந்து அமர்வதே ஒரு த்யானம் போன்ற உணர்வை கொடுத்தது. மயில்களின் இடைவிடாத சிணுங்கல். டேப் ரெகார்ட் செய்யப்படாத பறவைகளின் அதிகாலை ஒலி, நிஜமான சாக்லெட் கலர் மண். தண்ணீரின் தேக்கம், சிறு ஓடைகளின் அசைவுகள், மாசு இல்லாத புத்தம் புதிய காற்று, டீ கடையில் சந்தித்த புதிதாய் பிறந்த மனிதர்கள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
“ஆலயக் கலையை“, அழகாக அறிமுகம் செய்த திரு.ஜெயகுமார், பாடி, பேசி, அபிநயங்கள் பிடித்து தனது நீண்ட கால அனுபவ முத்திரையை நம் மீது ரசனையோடு பதித்தார். அவரது அனுபவம் நமக்கு புதுமையாக மட்டுமல்லாமல் , பெருமையாகவும் இருந்தது.
இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தும் தங்களுக்கும் , உதவிக் கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.
இப்படிக்கு
ப.ராமநாதன்