யோகம் அளித்த மீட்பு

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு…,

எனது பெயர் விஷ்வா வயது 22 திருவாரூர் இருப்பிடம் ஆகும். தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயந்திரவியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறேன்.

  இந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது நிறுவனத்தின் மூலமாக மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு தில்லை செந்தில் பிரபு ஐயா அவர்களின் ஆனந்த சைதன்யா தியான மையத்தின் இரண்டு நாள் உளக்குவிப்பு யோகா மற்றும் தியான  வகுப்புகளில் பங்கேற்க எனக்கு  வாய்த்தருளியது. சற்றும் யோசிக்காமல் பங்கேற்பாளராக சென்றேன். முதல் நாள் யோக வகுப்பில் யோகா அறிமுகமும், பிராணாயமங்களும், யோக பயிற்சிகளும்  கற்றுக் கொண்டேன்.

அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும், வெளியுலகில் சிறந்து விளங்கவும், தனிப்பட்ட வாழ்வில் ஆகச்சிறந்த மனத்தெளிவுடனும், ஆற்றலுடனும் சிறந்து விளங்க அன்றாடம் நம்மிடத்திலும்  வெளியுலகிலும் பயன்படுத்தக்கூடிய பல வாழ்க்கைக் கருவிகளை வகுப்பில் கற்றுக் கொண்டேன் புதிய மனிதர்களை அணுகுதல் ,கவனச் சிதறல் இல்லாமை போன்ற பல சாராம்சத்தில் பல தரவுகளுடன் கூடிய கருவியை சிறந்த முறையில்  அன்றாட செயல்களில் பயன்படுத்தும் வழிமுறையை வகுப்பில் கற்றுக் கொண்டேன். இந்தக் கருவிகளை பயன்படுத்தி நான் அன்றாட வாழ்வில் பெற்ற பயன்கள் பல அதில் ஒரு சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்

தினம் தினம்  கருவிகளை பயன்படுத்துவதில் என்னிடம் மாற்றத்தை உணர தொடங்கினேன் முன்பெல்லாம் நான் ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினால் இரண்டு வரிகள் படித்து  புரிந்துவிட்டு மீதமுள்ள நான்கு வரிகளைப் படிக்கும் பொழுது கவனச்சிதறலால் அதன் அர்த்தத்தை உள்வாங்க முடியாத ஒரு நிலை இருக்கும்  அதனால் அதனை மீண்டும் படிக்க வேண்டி இருக்கும், தற்போதெல்லாம் அந்த நிலையில் இருந்து முற்றிலும் வெளியேறிவிட்டேன், முழுமையான கருத்துக்களை கவனச் சிதறல் இல்லாமல் உள்வாங்க முடிகிறது

  முன்பெல்லாம் ஓர் புதிய மனிதர்களை  அணுகும் போது அவர்களின் ஆடை அலங்காரத்தினாலும் வாய்மொழியை வைத்து ஓரிரு நிமிடங்களில் அவர்களின் எண்ணத்தைக் கணிக்கக் கூடிய ஒரு சூழலில் இருந்தேன். தற்போதெல்லாம் முன் முடிவு இல்லாமல்  ஒருவரை அணுகும் போது அவர்களின் முழுமையான கருத்துக்களை உள்வாங்க முடிகிறது அவர்களின் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கும் நடைமுறைப்படுத்திக் கொள்வதற்குமான சாத்தியங்கள் மிகவும் எளிதாக உருவாகிறது.

  நம் அன்றாட வாழ்க்கையில்  மனதளவில் விழிப்புடன் இருப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கும் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் விழிப்புடன்   இருப்பதற்காக பயன்படுத்தும் கருவியையும் பயன்படுத்தும் வழிமுறையையும் வகுப்பறையில் கற்றுக் கொண்டுதன் பலனாக  ஒரு வேலையை அணுகும் போது அந்த வேலையில் துல்லியமான நுணுக்கங்களை கற்க முடிகிறது மற்றும் எளிதில் முடிப்பதற்கான ஆற்றலும் வருவதை உணர்கிறேன்.

அவ்வாறான தருணத்தில் நான் அந்த செயலில் என்னை எங்கெல்லாம்  மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்கிறேன். இந்த அனைத்து கருவிகளும் ஆரம்ப நாட்களில் தினம் தினம்  முயற்சி எடுத்து என் அன்றாட வாழ்வில் புகுத்திக் கொண்டு பயன்படுத்தி வந்தேன் ஆனால் நாட்கள் செல்ல செல்ல அன்றாட வாழ்வில் கருவிகள் ஒரு அங்கமாக மாறுவதை  உணர்ந்தேன் தற்போதெல்லாம் ஒரு முயற்சி எடுத்து கருவிகளை பயன்படுத்தாமல் என்னுள் இயல்பாகவே கருவிகள் என்றும்  செயலாற்றுவதை உணர்கிறேன்.  

கடந்த ஆறு மாதங்களாக தினமும் காலை வேளையில் பிராணாயாமங்களும் யோக பயிற்சிகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன் இந்த பயிற்சிகளின் மூலம் பெற்ற பலன்கள் இதுவரையில் வேறு எதன் மூலமாகவும் பெறாதவையே ; இந்த பயிற்சிகளை எல்லாம் முடித்துவிட்டு வரும் அன்றைய பொழுது என்பது ஆழ்மனது அமைதியாகவும் எந்தவித தேவையற்ற எண்ண ஓட்டங்கள் இல்லாத ஒரு மனதாக அந்த நாள் முழுக்க இருப்பதை உணர்ந்தேன், நாள் முழுவதும் மிகுந்த ஆற்றலோடும் புத்துணர்ச்சியோடும் இருந்தது

முன்பெல்லாம் உளச்சோர்வை உடல் சோர்வு என்று தவறாக எண்ணியிருந்தேன் இப்பொழுதெல்லாம் உளச்சோர்வு என்பது முற்றிலுமாக இல்லை தேவையற்ற பேச்சுக்கள், செயல்கள், தேவையற்ற எண்ணங்கள் தவிர்க்கும் ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் வெளிப்புற சூழலால் உருவாகும் சிறிய விஷயத்தை கூட மனதளவில் குழப்பிக் கொண்டு பெரியதாக என்னை நானே துன்புறுத்திக் கொண்டதை இப்போது உணர்கிறேன் தற்போதெல்லாம் எந்த விஷயத்தையும் மனதளவில் துன்புறுத்திக் கொள்ள முற்படுவதில்லை

குறிப்பாக நான் ஆசிரியரிடம் பயின்ற தியானங்கள் மிகவும் சக்தி வாய்ந்த வகையாக அன்றாட வாழ்வில் அமைகிறது நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் வெளிப்புறத்தில் இருந்தோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலோ பொருளாகவோ செய்தியாகவோ நமக்கு வந்தால் மகிழ்ச்சி கொள்வோம் ஆனால் தியானம் செய்து முடித்த பின்பு அடுத்து வருகின்ற இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் எந்த ஒரு காரணமும் இல்லாமல் அளவற்ற மகிழ்ச்சியை உணர்கிறேன். என்னவென்று தெளிவுபடுத்த முடியாமல் மிகவும் மகிழ்ச்சியான ஒரு  ஆற்றலும் இருக்கிறது அந்த நாள் முழுவதுமே மனம் இதமாகவும் அமைதியாகவும் உளச்சோர்வு இல்லாமலும் இருப்பதை உணர்கிறேன்.

 இவையெல்லாம் அடுத்து எனது  ஆரோக்கியத்தில் நான் முன்னேறியது விலைமதிப்பற்றது நான் கல்லூரியில் படித்த பொழுது விடுதியில் தங்கி பயின்றேன் அப்போது எனது உணவு முறை மிகப்பெரிய மாறுதலுக்கு உள்ளானது வெளிப்புற உணவக உணவை எடுக்கத் தொடங்கிய போது வயிற்றுப்புண் கூடவே தொடங்கியது. காலப்போக்கில் ஓர் ஆண்டுக்குப் பிறகு வயிற்றுப்புண் ஆறாமல் அடுத்த நிலைக்கு சென்றது உணவுக் குழாய் வால்வு தளர்ச்சி என்று மருத்துவர்களால் எனக்கு நிரூபணம் ஆனது ஆங்கிலத்தில் ஜி இ ஆர் டி என்பார்கள் இதன் பாதிப்புகளால் மூன்று வேலையும் உணவு எதுக்களிப்பு ,நெஞ்சு எரிச்சல் போன்ற இன்னல்களுக்கு ஆளானேன் 

ஓராண்டு முழுவதும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டேன், இதிலிருந்து குணமடையாமல் அடுத்த நிலையான மூச்சு திணறலுக்கு ஆளானேன். கல்லூரி காலத்தில் எனது துறையில் பல மேடைகளில் பேசுவது வழக்கம் ஆனால் இந்த மூச்சு திணறலுக்கு பிறகு  இயல்பான தொடர் பேச்சு என்பது சாத்தியமில்லாமல் போனது பேசும்பொழுது மூச்சுத் திணறல் இருப்பதால் கடந்த 2024 ஆம் ஆண்டில் கல்லூரியில் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன் மருத்துவர்களின்  மருந்துகளை மட்டுமே வழக்கமாக எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையில் இருந்தேன், ஆனால் மருத்துவர்கள் நிரந்தர தீர்வு இல்லை என்று உணர்த்திவிட்டார்கள் இந்த சமயத்தில் தான் இந்த யோக பயிற்சிக்கான வாய்ப்பு நல்கியது வகுப்பின் முதல் நாளில்  நெஞ்சு எரிச்சல் போன்ற உணவுக் குழாய் சம்பந்தமான பிரச்சனை தீரும் என்று ஆசிரியர் சொன்னபோது எனக்காகவே வகுப்பு தொடங்கியது போல் இருந்தது.

நானும் பிரணாயமங்களையும் தியானத்தையும் சரிவர காலை வேலையில் செய்து வந்தேன் ஒரு 50 நாட்களில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டது முதலில் மூச்சு திணறல் நின்றது பல மாதங்களுக்குப் பிறகு நெஞ்சு எரிச்சல் போன்ற ஒன்று படிப்படியாக குறைவதை உணர்ந்தேன். தற்போது முற்றிலுமாக மூச்சு திணறலில்   இருந்து விடுபட்டு சரியான உணவு முறைகளை கடைப்பிடித்து வருகிறேன் இந்த மாற்றம் என்பது எனது வாழ்வில் விலைமதிப்பற்றது தற்போது என்னால் இயல்பாக மேடைப்பேச்சுகளிலும் தொடர்ந்து இயல்பாக பேச முடிகிறது கடந்த மாதம் கோவையில் கவியன்புத்தூர் தமிழ்ச் சங்கத்தில் நாயன்மார்களைப் பற்றி அரை மணி நேரத்திற்கு மேல் நான் பேசிய உரை ஓராண்டு கனவு நிறைவேறியதாகவே இருந்தது

இதனின் பல்வேறு பலன்களை ருசித்த பின் நித்தியவனம் மலை தங்குமிடத்தில் உயர்நிலை தியான வகுப்பு பங்கேற்க வாய்ப்பு நல்கியது அந்த மலைத்தங்குமிடத்தில் நான் பயின்ற உயர்நிலைப் பிராணாயாமங்கள் எண்ணற்ற அனுபவங்களையும் பயன்களையும் தந்து கொண்டே இருக்கிறது ஆசிரியரின் நேரடி பார்வையின் கீழ் கற்ற அந்த வகுப்புகள் மிகச்சிறந்த   அனுபவத்தை தந்தருளியது.தொடர்ந்து பயிற்சியை முடித்து அனைத்து மாதங்களிலும் பயிற்சியை மேம்படுத்திக் கொள்ள நடைபெறும் வகுப்புகளும் கேள்வி பதில் நிகழ்வுகளும் எங்களை மீண்டும் இந்த பயணத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது

வகுப்பில் நான் பயின்ற தியானங்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கருவிகளும்  வாழ்க்கைக்கு சக்தி வாய்ந்த பலன்களை தருவதை இந்த ஆறு மாதத்தில் உணர்ந்தேன், வகுப்பு யோக பயிற்சிகளை மட்டும் சார்ந்து இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் மேம்படுவதற்கான பல வாழ்க்கைக்  கருவிகளையும் சேர்த்து கற்றுக் கொள்வதால் மனதிற்கும் உடலுக்கும் தேவையான ஒரு முழுமையான பலனை அடைவதை உணர முடிகிறது

இத்தகைய வாய்ப்பை நல்கிய ஆசிரியர் திரு தில்லை செந்தில் பிரபு ஐயா அவர்களுக்கும் இதற்கான மிகச் சிறந்த சூழலை நித்திய வனத்தில் அமைத்த தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்,

விஷ்வா.,

கோயம்புத்தூர்.

முந்தைய கட்டுரைஞானமரபை அறிய…