அன்புள்ள ஜெயமோகனுக்கு…
நலமோடு இருக்கிறீர்களா…இன்று சொல்வளர்காடு படித்துக்கொண்டிருந்தேன். அனைத்து வேதக்காடுகளுக்கும் சென்று மீண்ட பாண்டவர்கள் பிரகதாரண்ய கல்விச் சாலைக்குத் திரும்புகின்ற பகுதி. கல்விச்சாலையில் பெண் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் இருப்பதைப் பாண்டவர்கள் பார்க்கிறார்கள். அப்போது வைரோசனன் சொல்கிறான் ‘நால்வர்ணத்தினரும் தமக்குரிய வேதத்தைத் தன் வீட்டு மகளிருக்கும் கற்றுத் தந்திருக்கிறார்கள். யாக்ஞவல்கியரே தன் மனைவிக்கு வேதம் பயிற்று வித்தார்’ என்றும் விளக்குகிறான்.
நான் இங்கே வெண்டி டோனிக்கரின் ‘இந்துக்கள்‘ நூலை நினைவுபடுத்த விரும்புகிறேன் ( நீங்கள் வெண்டியையும் அவர் நூலையும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். எனக்குமே அவரிடம் பல மறுப்புகளுண்டு). வேத காலத்துப் பெண்களின் நிலை குறித்து வெண்டி எழுதியவற்றைச் சொல்லுகிறேன் ‘சமஸ்கிருதத்தை அவர்கள் நாவால் உச்சரிக்கக் கூட பெண்களுக்கு அனுமதி இல்லை. தன் கணவனோடு ஒரு பெண் பேசவேண்டுமென்றாலும் கூட பிராகிருதத்தில்தான் பேச வேண்டும் ’ என்று வெண்டி கூறி அதற்கு ஆதாரமாக சமஸ்கிருத பனுவல்களையே எடுத்துக் காண்பிக்கிறார்.
இதை எப்படி புரிந்துகொள்வது. வெண்டியின் கருத்தென்பது ஆழ நோக்காமையின் வெளிபாடா? அல்லது பெண்கள் வேதம் கற்றார்கள் என்பதை ஒரு புனைவின் பகுதியாக வெண்முரசில் நீங்கள் சேர்த்தீர்களா…? விளக்கினால் தெளிந்து கொள்வேன்.
– அன்புடன்
மு.சாகுல் ஹமீது
அன்புள்ள சாகுல்
வெண்டி டானிகரின் நூல் ஆய்வுநூல் அல்ல. நான் வாசித்தவரை வெண்டி, அவரே சொல்லிக்கொள்வதுபோல, சம்ஸ்கிருத அறிஞரெல்லாம் அல்ல. அது ஐரோப்பாவின் பொதுவான வாசகர்களுக்குரிய ஒரு மேலோட்டமான நூல்.
நாம் வேதமரபை புறவயமாக ஆராய்ந்தறிவது மோனியர் வில்யம்ஸ், புளூம்ஃபீல்ட், குந்தர், ஷெர்பாட்ஸ்கி, மாக்ஸ் முல்லர் முன்னோடியான ஐரோப்பிய ஆய்வாளர்கள் வழியாகவே. அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நான் அவர்களைச் சொல்லாத ஒரு கட்டுரை கூட கிடையாது. ஐரோப்பிய புறவய ஆய்வும், சார்பில்லாத பார்வையும் வேதங்களின் வரலாறு, உள்ளடக்கம் ஆகியவற்றை அறிய மிக அடிப்படையானவை. ஆனால் வேதங்களை ஆன்மிகமாகவும், அழகியல் சார்ந்தும் அணுக அவர்களை நாம் சார்ந்திருக்கலாகாது. அவர்கள் நமக்களிப்பது தரவுகளை மட்டுமே
வேதகாலம் பற்றி ஆய்வுசெய்வதற்கு வேதங்கள் அன்றி நமக்கு ஆதாரங்கள் இல்லை. அவை பெரும்பாலும் தோத்திரங்கள் மற்றும் தத்துவக்கவிதைகள் என்பதனால் அவற்றில் நேரடியான வரலாறு – சமூகச் செய்திகள் இல்லை. ஆகவே சொற்களை வைத்துக்கொண்டு கடந்த காலத்திலும் ஏராளமான ஊகங்களைச் செய்துள்ளனர். இதில் அவரவர் தரப்பை எளிதில் புகுத்தலாம். அந்தந்த கால அரசியலுக்கு ஏற்ப எண்ணற்ற மூளைவித்தைகள் இதில் இதுவரை நடைபெற்றுள்ளன. பல முடிவுகளும் ஊகங்களும் காலப்போக்கில் தானாகவே உதிர்ந்துவிட்டன. அவற்றை ஒவ்வொன்றாகப் பகுப்பாய்வு செய்வது அறிவை வீணடிப்பது.
வேதம் மருவிய காலம் எனப்படும் உபநிடத காலகட்டத்தில் இன்னும் தெளிவான செய்திகள் உள்ளன. அவற்றைக் கொண்டு வேதகாலத்தை நாம் ஒருவாறாக ஊகிக்கலாம். ஏனென்றால் வேதங்கள் உபநிடத காலத்திலும் எழுதப்பட்டன என மகாபாரதக் குறிப்புகள் உள்ளன. உபநிடதங்களில் பெண்கள் வேதம் பயின்றது – வேள்வி இயற்றியது ஆகியவற்றுக்கான சான்றுகள் உள்ளன. வேத அவைகளில் பெண்கள் பங்குபெற்றமைக்கும் சான்றுகள் உள்ளன. வேத அறிஞரான மகள் பிறக்க என்ன செய்யவேண்டும் என்றுகூட பிருஹதாரண்யக உபநிடதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றை முன்னோடியான வேத ஆய்வாளர்கள் விரிவாகவே எழுதியுள்ளனர்.
மிகச்சிறந்த உதாரணமாக முன்வைக்கப்படுவது கார்கி, மைத்ரேயி போன்ற வேதப்பேரறிஞர்களான பெண்கள். மைத்ரேயி என மூவர் குறிப்பிடப்படுகின்றனர். முதல் மைத்ரேயி மைத்ரி முனிவரின் மகள், சுலபா மைத்ரேயி என்பது அவர் பெயர். அவரை பிரம்மஞானம் அடையப்பெற்ற வேத அறிஞர் என அஸ்வலாயன சூத்ரம் சொல்கிறது. மைத்ரேயிகளில் புகழ்பெற்றவர் பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஆசிரியரான யக்ஞவல்கியரின் மனைவி. பிரஹதாரண்யக உபநிடதம் அவருக்கும் மைத்ரேயிக்குமான உரையாடல்தான். ஆகவே அவர் பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஆசிரியர்களில் ஒருவர். இன்னொரு மைத்ரேயி மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பிரம்மவாதியாகிய யோகினி.
வாசக்னு முனிவரின் மகளாகிய கார்கியை பற்றி வேதம் மருவிய காலகட்டக் குறிப்புகள் உள்ளன. அவர் வேத அறிஞர், வேதாந்தி. யக்ஞவல்கியருடன் வேதாந்த விவாதத்தில் ஈடுபட்டார். ரிக்வேதத்தின் பல பாடல்கள் கார்கியால் எழுதப்பட்டவை என சில நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை வேறு கார்கி எழுதியவை என்றும் சொல்லப்படுகின்றன. எப்படியாயினும் பல வேத –வேதாந்த அறிஞர்களாகிய பெண்கள் மரபில் உள்ளனர். அவர்களே நான் எழுதிய மகாபாரத மறு ஆக்க நாவல் வரிசையில் ஒன்றாகிய சொல்வளர்காடு நாவலில் குறிப்பிடப்படுகின்றனர். வேதாந்தத்தில் இந்த மரபு சங்கரர் காலம் வரைக்கும் நீடிக்கிறது. சங்கரருக்கும் மண்டனமிஸ்ரரின் மனைவிக்கும் இடையிலான வேதாந்த உரையாடல் புகழ்பெற்றது.
ஆனால் வேதமோதுவது என்பது ஒரே வகையான செயல்பாடல்ல. வேதங்களை வேள்விச் சடங்குகள் சார்ந்து மட்டுமே அணுகும் பூர்வமீமாம்சர்கள் ஒரு தரப்பு. வேதங்களை அறிவார்ந்து ஆய்ந்தறியும் உத்தர மீமாம்சகர்கள் இன்னொரு தரப்பு. பூர்வமீமாம்சகர்கள் பெண்களுக்கு எந்த அளவுக்கு இடமளித்தனர் என்பது விவாதிக்கத்தக்கது. அவர்கள் அரசர்களுக்காகவும் பிறருக்காகவும் நடத்திய பெரிய வேள்விகளில் பெண்கள் இடம் பெறவில்லை. மீமாம்சகர்களில் வேத அறிஞர்கள் இருக்கவில்லை என்றே சொல்லலாம். நாம் அறியும் வேதஞானிகளான பெண்கள் எல்லாருமே பிரம்மவாதிகள், அதாவது வேதாந்திகள். வேதாந்த மரபில் எப்போதும் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.ஆனால் சில நூல்களில் வீட்டில் பெண்கள் கணவனுடன் அமர்ந்து வேதம் ஓதியதாகவும் குறிப்புகள் உள்ளன.
இவற்றை விரிவான நூலாதாரங்களுடன் நான் எழுத முடியும் . இது ஓர் எளிய கேள்விபதில்தான். மேலும் இந்தவகையான ஆய்வுகள் ஒருவகையில் என்னுடைய ஆன்மிக– அழகியல் தேடலுக்கு நேர் எதிரானவை என்பதனால் சலிப்பூட்டுபவையும்கூட.
வேள்விச்சடங்குகளை முன்வைக்கும் பிராமணங்கள் மற்றும் சில சூத்திரங்கள் பூர்வமீமாம்சையின் மூலநூல்கள். அவற்றில் பெண்கள் வேள்விகளில் இடம்பெறலாகாது என்னும் குறிப்புகள் உள்ளன. வெண்டி போன்றவர்கள் எடுப்பது இந்த ஆதாரங்களையே. ஆனால் வேதகாலம் என்பது மீமாம்சை மரபு மட்டும் அல்ல, வேதாந்த மரபும்கூடத்தான். வேதாந்தக் களத்தில் பெண்கள் வேதவிவாதங்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன.
சூத்ரங்களிலும் உபநிடதங்களிலும் குறிப்பிடப்படும் வேத, வேதாந்த அறிஞர்களான பெண்கள் எல்லாருக்குமே சம்ஸ்கிருதம் கற்கவும், உரையாடவும் தடை இருந்தது என்றும், அவர்கள் பேசியதெல்லாம் பிராகிருதம்தான் என்றும் வெண்டி சொல்கிறார் என்றால் அது அவருடைய முன்முடிவு மட்டுமே.
வெண்டி போன்ற ஐரோப்பிர்களின் இத்தகைய முன்முடிவுகள்கொண்ட பிரச்சாரம் உண்மையில் நேரடியாக தாக்குவது என்னைப்போன்ற மதம் சாராத, அறிவார்ந்த ஆய்வுநோக்கு கொண்ட வேதாந்த மரபினரைத்தான். சடங்குவாதிகளால் மூர்க்கமாக எதிர்க்கப்படும் எங்கள் தரப்பு இந்த பிரச்சாரகர்களால் மறுபக்கம் தாக்கப்படுகிறது. சடங்குவாதிகள் எங்களை ஐரோப்பிய ஆதரவாளர்கள் என்பார்கள், ஐரோப்பியக் காழ்ப்புவாதிகள் எங்களைப் போன்றவர்களை மதவாதிகள் என முத்திரைகுத்துவார்கள்.
இந்த இரு முள்முனைகள் நடுவே இன்றைய வேதாந்தி செல்லவேண்டியிருக்கிறது. சரியான ஒரு ‘சவரக்கத்திநடை’
ஜெ