பங்கேற்பு அரசியல் -திறல் சங்கர்

அன்புள்ள  ஜெ,

தாங்கள் சமீபத்தில் விஜயின் அரசியல் வருகையை முன் வைத்து பதிவு செய்திருந்த “விஜய் அரசியலும் மெய்யான அரசியலும்” எனும் கட்டுரை மிக முக்கியமான ஒரு கட்டுரையாகவும், மெய்யான அரசியலை நாம் மக்களுக்கு எடுத்து செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.வெவ்வேறு தளங்களில் தங்களுடைய அரசியல் பார்வையை நீங்கள் பதிவு செய்திருந்தாலும், இந்த காணொளியில் நீங்கள் பதிவு செய்திருந்த “இங்குள்ள அரசியல்/அரசு என்பது பல்வேறு அதிகார குழுக்களுக்கிடையில் இயங்கும் ஒரு சமரச அமைப்பு” என்ற உங்களுடைய கூற்று ஒரு மிகப்பெரிய திறவு. ஒரு பேருண்மையை மிக எளிமையாகவும்,  வீரியமான பாய்ச்சலுடனும் விளக்கி விட்டீர்கள். என்னால் அந்த சிந்தனையிலிருந்து மீள முடியவில்லை. பல அரசியல் புத்தகங்கள் தராத தெளிவு அது.
இந்த பின்புலத்தில், 2021ம் ஆண்டில் தங்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலை நினைவு கூர விரும்புகிறேன்.
——————-
“இந்தியா போன்றதொரு மாபெரும் தேசத்தில், மக்களாட்சி என்ற அரசியல் முறையை சாத்தியமாக்கியதே மிகப்பெரும் சாதனை என்று கருதுகிறேன். ஆனால் காலத்தின் போக்கில் எதன் பொருட்டு மக்களாட்சி உருவாகி வந்ததோ, எதன் பொருட்டு அது கொண்டாடப்பட்டதோ அவை அனைத்தும் பாழாகி கொண்டிருப்பதை கண் கூடாக பார்க்க வேண்டியிருக்கிறது.பங்கேற்பு  அரசியல் எனும் மகத்தான அரசியல் தத்துவத்திலிருந்து விலகி அது ஒரு வெற்று பாவனையாக மாறி விட்டிருக்கிறது. வாக்களிக்கும் நாளன்று மட்டுமே அரசியல் அதிகாரம் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் பொருள் நிலையிலும், சாதிய நிலையிலும் அடி நிலையில் இருக்கும் மக்களுக்கு வாக்கதிகாரம் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், அவர்களை எவ்வித இரக்கமுமின்றி கொன்றழிக்கவும் இன்றைய அதிகாரிகளும், அரசியலாளர்களும் தயங்கப் போவதில்லை.
இன்றைய மக்களாட்சி முறை ஒரு வகையில் சர்வாதிகார முறையின் நீட்சியாகவே இருக்கிறது.தங்களது சர்வாதிகாரியை தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் அது மக்களுக்கு வழங்கியிருக்கிறது. வார்டு மெம்பர்கள், கவுன்சிலர்கள், சட்டமன்ற பிரதிநிதிகள், அமைச்சர்கள் என அனைவரும் அவரவர் எல்லைக்கு உட்பட்ட அதிகார மையங்களாகவே செயல்படுகின்றனர். கட்டற்ற அதிகாரம் இவர்களிடம் குவிக்கப்படுகின்றன.
இன்றைய மக்களாட்சி முறையை நாம் ஏன் ஆய்வுக்கு உட்படுத்த கூடாது? அல்லது உலகில் வேறு எங்கேனும் மக்களாட்சி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதனை விட சிறப்பான அரசியல் முறை நடைமுறையில் உள்ளதா? பொது வெளியில் விவாதித்து, மக்களாட்சியிளுள்ள குறைகளை களைந்து, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் வெகு தொலைவில் இல்லை என நம்புகிறேன். சிறந்த அறிவியல் முறையும், சமூக புரிதலும் கொண்டு இன்றைய மக்களாட்சியின் விதிகளை ஆய்வு செய்து, விவாதித்து, தேவையான மாற்றங்களுடன் இந்த மகத்தான பங்கேற்பு அரசியல் எனும் மாபெரும் அரசியல் தத்துவத்தை பரிணமிக்க வைப்பதே நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு நாம் அளித்து செல்லும் கொடை என நம்புகிறேன். உங்களும் கருத்தையும், நோக்கையும் அறிய விழைகிறேன்.”
—————-
நான் உங்களுக்கு அப்பொழுது எழுதிய மின்னஞ்சலுக்கு மிக தெளிவானதொரு புரிதலை இப்பொழுது நான் அடைந்திருக்கிறேன்.அரசியல் மாற்றம் என்பது அடிப்படையில் வெகுஜன மக்களிடமிருந்து தொடங்க வேண்டும். மெய்யான அரசியலை பற்றிய புரிதல் அவர்களிடம் சென்று சேராத வரையில் இங்கு நாம் விவாதிப்பது எல்லாம் வெறும் அதிகார அரசியலே.
நன்றி,
திறல் சங்கர்
முந்தைய கட்டுரைகரூர் சாவுகள், இளைஞர்கள்