ஆலயக்கலை பயிற்சி முகாம் ஆகஸ்ட் 29, 30, 31 தேதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்கள் ஈரோடு, வெள்ளிமலை, குருநித்யா அரங்கில் நடைபெற்றது. இசைக்கலைஞரும் ஆய்வாளருமான சு. ஜெயக்குமார் ஆசிரியராக இருந்து பயிற்சி அளித்தார்.பயிற்சியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
பயிற்சி எப்படி இருந்தது என்பதை அவர்களே கூறக் கேட்போம்.
பயிற்சியில் கலந்து கொண்ட சீதா வாசுதேவன் கூறுகிறார்,
” இதைப் பற்றி எப்படிச் சொல்வது ? வழக்கமாக நான் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன்.ஆனால் இந்த பயிற்சி பற்றிய என் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று சொல்லி விளக்குவதற்கு,என்னிடம் வார்த்தைகள் கிடையாது. எனக்குப் பேச்சு வரவில்லை.ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது.
என் உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கிறது? அது நன்றியுணர்வு, பிரமிப்பு, உத்வேகம், மகிழ்ச்சி, பணிவு மற்றும் நம்பிக்கை எல்லாமும் கலந்ததாக இருக்கிறது.
அருமையான இந்த நிகழ்ச்சியை அனுபவித்ததில் நாங்கள் அனைவரும் பாக்கியவான்கள், இந்த நிகழ்ச்சிக்காக எங்கள் ஆசிரியர் ஜெயக்குமார் ஐயாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். சிறப்பான உள்ளடக்க கருத்துகள் மட்டுமல்ல, அத்துடன் தாராளமாக நகைச்சுவையையும் கலந்து ஊக்கத்துடன் வழங்கப்பட்ட விதம் இதம்.
ஒரு முறை கூட தன் பொறுமையை இழக்காமல் குழுவினரை இலக்கை நோக்கி நகர்த்திச் சென்று எங்களை நிர்வகித்த விதம் அருமை. இது ஒரு அதிசயம் என்றே சொல்ல வேண்டும்” என்கிறார்
.
சென்னையிலிருந்து வந்து கலந்து கொண்ட டாக்டர் தங்கவேல் கூறும்போது,
“இந்த அருமையான வகுப்பில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நீண்டு கொண்டிருந்த ஆசை இந்த மூன்று நாட்களில் நிறைவேறியது. என் மகன் அமுதன் பங்கேற்க முடிந்ததால் இது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறிவிட்டது. அவன் பெற்ற இந்த அனுபவம் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது அவனுக்கு ஆர்வத்தை வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்” என்கிறார்.
திருப்பூர் அகிலா கூறும்போது,
“நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் நீங்கள் அதை எவ்வளவு சிறப்பாக வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.”
ஜே.கே. ஐயாவின் சொற்பொழிவின் மூலம் இந்த மேற்கோள் எனக்கானதாக மாறி என்னை உயிர்ப்பித்தது. இவ்வளவு நன்கு படித்த மற்றும் ஞானமுள்ளவர்கள் கூட்டத்தில் இருந்ததில் நான் உண்மையிலேயே பாக்கியசாலியாக உணர்கிறேன்.
இதுவரை, நான் ஆன்மீகம் அல்லது மதத்தின் மீது நாட்டம் கொண்ட ஒரு வட்டத்தில் இருந்ததில்லை, முதல் நாளிலேயே எனக்கு நிறைய பயம் இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
உண்மையில், இந்தப் பயிற்சி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கூட இந்தப் பயிற்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
என் நண்பரிடமிருந்த வந்த ஒரு வார்த்தையும், சில்பசாஸ்திரம் மற்றும் கோயில் கட்டிடக்கலை பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற எனது சொந்த விருப்பமும் என்னை ஒரு திடீர் முடிவுக்குத் தள்ளியது. அவர் பேசுவதைக் கேட்பதற்கு முன்பு, அந்த ஒரு கணம், என் தேர்வை, நாம் எடுத்த முடிவு சரிதானா என்று கூட சந்தேகித்தேன்.
ஆனால் என் சந்தேகம் சில நிமிடங்களில் கரைந்தது. எனக்குக் கிடைத்தது ஓர் அமுதம்.
எண்ணற்ற கோட்பாடுகள் மற்றும் ஆதாரங்களால் நிரம்பிய இவ்வளவு பரந்த விஷயத்தை அணுகுவதும், அதை இவ்வளவு தெளிவான முறையில், ஊக்கமளிக்கும் வகையில் விளக்குவதும் சாதாரண காரியமல்ல. ஜேகே சார் பார்வையாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் திறமை, அவரது இடைவிடாத அர்ப்பணிப்பையும் பல்லாண்டு கடின உழைப்பையும் காட்டியது.
இந்த மூன்று நாட்கள் சில்பசாஸ்திரத்தைத் தாண்டி இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் மற்றும் மதம் ஆகியவற்றின் மீதான எனது ஆர்வத்தை விரிவுபடுத்தியுள்ளன.
இந்த மாற்றத்தை ஏற்படுத்திய அனுபவத்திற்காக ஜே.கே. சாருக்கும், இவ்வளவு அமைதியான மற்றும் தூய்மையான கற்றல் இடத்தை எங்களுக்கு வழங்கியதற்காக ஜெய மோகன் சாருக்கும், சுவையான உணவு மற்றும் சிறப்புமிக்க ஏற்பாடுகளுக்காக மணி அண்ணா மற்றும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
முழு குழுவிற்கும் நன்றி. விரைவில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்“என்கிறார் .
வியாசர்பாடி வி.பி. ராஜசேகரன் பேசும் போது,
” ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளும் போது, ஒரு புதிய விஷயத்தைச் செய்யும்போது அழித்து அழித்து மீண்டும் மீண்டும் செய்வோம். ஏதோ ஒரு பயிற்சி செய்யும்போது தடங்கல் வந்து கொண்டிருக்கும். நான் இதைச்
சில சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் போது நினைத்துப் பார்ப்பேன்,
நான் கதைகள் படிக்கும் போது கதையில் வரும் அந்தக் கதாபாத்திரங்களில் நம்மில் நம்மையே பார்க்கிற மாதிரி ஏதாவது கதாபாத்திரம் இருக்கிறதா ? என்று பார்ப்பேன்.
நம் வாழ்க்கையில் வெளிப்பட்ட தருணங்களை நினைவூட்டுகிற மாதிரியான சிறுகதைகள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கையில் சந்தித்த தருணங்களைக் கதைகளில்
அடையாளம் கண்டுபிடிப்பது எனக்கு ஒரு பழக்கமாகவே இருக்கிறது.
முக்கியமாக ஜெயகாந்தன், அசோக மித்ரன், மால்குடி டேஸ் கதைகள் போன்றவற்றில் அப்படிப் பார்த்திருக்கிறேன். இதைப் பற்றிப் பல பேர் சொல்லியும் நான் கேட்டிருக்கிறேன்.
இது போன்ற வகுப்புகளில் கலந்து கொள்ளும் போதும், ஏதாவது புதிதாக கற்றுக் கொள்ளும் போதும் இந்த மாதிரி ஒரு தருணத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று இரண்டு சிறுகதைகள் வழியாகச் சொல்லியும் கொடுத்திருக்கிறார்கள்.
அதில் முக்கியமானதாக ஒன்று அசோகமித்ரனுடைய ‘திருப்பம்‘, இன்னொன்று ஜெயமோகனுடைய ‘சிறகு‘.
‘திருப்பம்‘ கதையில் ஒரு பையன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறான். அவனால் அந்த கிளட்ச் பிடித்து முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு மாற்றிவிடும்போது வண்டி ஆஃப் ஆகிவிடும்.கொஞ்ச தூரம் போகும்போது அந்த மோஷன் சரியாக வராது ,காரை நகர்த்த முடியாது .கியர் மாற்றும்போது அது சரியாக அமையாது, தடைபட்டு தடைப்பட்டு கார் நின்றுவிடும்.
கிளட்ச் வித் கியர் சிங்க்ரனைசேஷன், அந்த ஒத்திசைவு அவனுக்குக் கிடைக்காது.
ஆனால் எந்தத் தருணத்தில் அவர் கற்றுக் கொள்கிறான் என்று தெரியாது, ஆனால் அழகாக ஒரு தருணத்தில் பிடிபட்டு விடும். கார் ஓட்ட ஆரம்பிக்கிறான்.அப்படித்தான் ‘சிறகு‘ கதையில் ஒரு பெண் சைக்கிள் கற்றுக் கொள்வாள்.அந்தப் பெண் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது அதுவரை இருந்த உலகம் கற்றுக் கொண்ட பிறகு எப்படி விரிகிறது என்பதைக் கூறியிருப்பார்.
இதை எப்படி நான் இந்த ஆலயக்கலை பயிற்சி வகுப்புக்கு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றால், ஒன்றரை நாள் வரை எனக்கு இந்தப் பயிற்சி பிடிபடவில்லை.
ஒரே ஒரு வார்த்தையைக் கேட்ட பிறகுதான் அந்த பேச்சு எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அந்த வார்த்தை எவல்யூஷன். அதாவது படிப்படியான பரிணாம வளர்ச்சி.
குகைக்கோயில்களில் இருந்து அது எப்படி கோபுரங்கள், விமானங்கள் என்று வந்தது என்பதை நீங்கள் ஒரு எவல்யூஷன் ஆகப் பார்க்க வேண்டும் என்று சொன்னபோதுதான். புரிபட ஆரம்பித்தது.
ஜெயமோகனின் ‘அரு உரு உருவரு‘ கட்டண உரையைக் கேட்டேன்.கோவில்களில் உள்ள சித்திரங்கள் பற்றி அதில் பேசி, சுட்டிக் காட்டியிருப்பார்.குகையில் இருந்து குகைக் கோயில்கள், ஆலயங்கள், கோபுரங்கள் வரை நடந்திருக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடிந்தது.
அந்தக் கால குகை ஓவியங்களைப் பார்க்கும் போது, சுற்றிலுமுள்ள மலை, பாறை போன்றவற்றை ஒதுக்கிவிட்டு அங்குள்ள சித்திரங்கள் மட்டும் இங்குள்ள கோவிலுக்குள் இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
காலமாற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டபோது இந்த வகுப்பு ஒட்டு மொத்தமாக புல்லரிக்க வைத்த அனுபவமாக மாறியது” என்கிறார்.
ரவிச்சந்திரன் கூறும்போது ,
“ஜே.கே. அவர்கள் வழங்கியது அசாதாரணமான நிகழ்ச்சி. கோயில் கட்டிடக்கலை பற்றிய எங்கள் அறிவைக் கவனித்த பிறகு, அவரது மனக்குரலைக் கேட்க முடிந்தது, “கோவிலைக் கட்டினவங்கல்லாம் மனுஷங்க தான், ஆனா நீங்கள் எல்லாந்தான் ஏலியன்ஸ்ன்னு தோணுது.”
உங்களுடன் கோயில் வருகைக்காக நாங்கள் காத்திருப்போம். இதற்கிடையில், அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று ரசிக்கத் தொடங்குவோம்” என்கிறார்.
உமா விஜய் கூறும் போது,
“மூன்று அற்புதமான நாட்களில் எங்களை ஒரு கண்கவர் பயணத்தில் அழைத்துச் சென்ற ஜெயக்குமார் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்!
பயிற்சியில் எனக்குப் பிடித்த அம்சங்கள் பலவுண்டு.
முதலில்,ஒத்த எண்ணம் கொண்டவர்களைச் சந்தித்தது முழுமையான மகிழ்ச்சியாக இருந்தது.
ஒருவரின் ஆர்வங்களைத் தொடரவோ அல்லது புதியதை முயற்சிக்கவோ ஒருபோதும் தாமதமாக்கக் கூடாது என்பதை அந்தக் கூட்டம் எனக்கு மீண்டும் வலியுறுத்தியது.
இந்த அமர்வை வழங்குவதில் ஜேகே கைக்கொண்ட முழுமையான அணுகுமுறை சிறப்பு. அனைத்து கலை வடிவங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, அவற்றை ஒருபோதும் தனித் தனியாகப் பார்க்க முடியாது. என்னைப் போன்ற முற்றிலும் புதியவர்களுக்குச் சிக்கலான கருத்துகளை விளக்க புராணங்கள், இலக்கியம் மற்றும் இசையை வழங்கியதற்கு நன்றி கூற வேண்டும்.
நாங்கள் தேடிக்கண்டு களிக்க காத்திருக்கும் ஒரு புதிய உலகத்தை திறந்து விட்டதற்கு நன்றி!
அடுத்து பயிற்சி நடந்த அந்த மூன்று நாட்களும் எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்ட மணி அண்ணா மற்றும் அவரது அற்புதமான சமையல்காரர்கள் குழுவுக்கும் நன்றி” என்கிறார்.
சென்னையைச் சேர்ந்த உண்ணாமலை கூறும் போது,
“இந்தப் பயிற்சி பற்றி என் கணவர் மூலம் இப்போதுதான் தெரிந்துகொண்டு இங்கே வந்தேன்.
2015 முதல் என் நண்பர்களுடன் கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது, கோயில்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றி எந்த யோசனையும் இல்லை. அவர்கள் சொன்ன இடமெல்லாம் நான் அவர்களுடன் சென்று, பூஜை செய்வது, பிரஹாரங்களைச் சுற்றுவது திரும்புவது என்று இருந்தேன். இதுவரை நான் அடிப்படை ஸ்லோகங்களையோ அல்லது கதைப்புத்தகங்களையோ படித்ததில்லை.
வகுப்பில் சொல்லப்பட்ட எதையும் நான் கவனித்ததில்லை. பார்க்க, கேட்க, படிக்க ஏராளமான விஷயங்கள் இருப்பதை இங்கே வந்து அறிந்து நான் வியந்தேன்.
நீங்கள் என் கண்களைத் திறந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி” என்கிறார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து கலந்து கொண்ட பங்கேற்பாளர் விஜய் கூறும்போது,
“முழுமையறிவு வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு நீண்ட நாள் கனவு. இப்போதுதான் விடுமுறை சரியாக அமைந்தது நானும் என் மனைவியும் கலந்து கொண்டோம்.
எங்கள் ஊர் காஞ்சிபுரமாக இருந்தாலும் கைலாசநாதர் கோயிலுக்குப் பல முறை சென்று வந்திருந்தாலும் அடுத்த முறை நான் செல்லும்போது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நான் என் கண்களைத் திறந்து மேலும் ஆராய்வேன்.
எங்களுக்கு ஒரு புதிய ஆய்வு உலகத்தைத் திறந்துவிட்டிருக்கிறீர்கள்.
குறிப்பிடத்தக்க ஆலயக் கட்டிடக்கலை, கவிதை, புராணங்கள், வரலாறு மற்றும் இசை போன்றவற்றை இன்னும் முழுமையான முறையில் ரசிக்க வேண்டும் என்பதை நாங்கள் நினைவில் கொள்வோம்.
எங்களுடன் பொறுமையாக இருந்ததற்கும், பல குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், கலைக்காகத் தங்கள் வாழ்நாளை செலவிட்டு அறிந்த , பல புராணக்கதைகளை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.
இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர் பங்கேற்று மிகுந்த ஆர்வம் காட்டியதைப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்கள் அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஆர்வமாக உள்ளோம்” என்கிறார்.
பாண்டிச்சேரி, அமுர்தவள்ளி பேசும்போது,
“சொல்வதற்கு நிறைய இருக்கிறது, எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் என்னைப் பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அழகான நினைவுகளில் வாழ வைத்தீர்கள். நமது கடந்த காலத்தை அடையும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருத்தி என்பதை நான் அறிவேன், மேலும் அவர்களின் அற்புதமான உணர்வுகளையும் நுட்பமான வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு நான் என்னாலான முயற்சிகளை எடுப்பேன் .எங்களுக்காக இந்த அற்புத கதவைத் திறந்ததற்கு மிக்க நன்றி.
என் மனம் இன்னும் 9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது, ஆனால் எனது வாழ்க்கைச் சூழல் என்னை 2025 காலத்திற்கு அழைக்கிறது. காலப் பயணத்தில் அதிலிருந்து மீண்டு வர, நான் சிரமப்படுகிறேன்” என்கிறார் .
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டி.எம். ரூபஸ்ரீ கூறும்போது,
“கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்ய மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள தெய்வீக சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றி எங்கள் மனதைத் திறக்கவும் சொல்லிக் கொடுத்து வழி நடத்தியதற்கு நன்றி.
என் மகளின் பத்தாவது பிறந்தநாளில் உண்மையிலேயே அர்த்தமுள்ள ஒன்றைப் பரிசளித்ததற்கு நான் மிகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.அதற்காகப் பெரிய நன்றி. இந்த உணர்வு பொருளாதார பலன் சார்ந்ததல்ல. நுண்ணுணர்வு, விழிப்புணர்வின் ஒரு தருணம் சார்ந்தது.
அத்தகைய ஞான ஆழத்தை ஒரு குழந்தையால் உள்வாங்க முடியுமா என்று பலர் யோசித்தாலும், உங்கள் எளிமையான – ஆனால் ஆழமான கற்பித்தல் முறை ஒவ்வொரு கருத்தையும் ஜீவன் உள்ளதாக மாற்றியது.
உங்கள் அமர்வுக்குப் பிறகு அவள் கவனித்து, சிந்தித்து, கோவிலுடன் ஆழமான தொடர்பை உருவாக்குவதைப் பார்ப்பது மனதைத் தொடும் வகையில் இருந்தது.உங்கள் பொறுமையான வழிகாட்டுதல் – அழகியல் ஞானத்தின் அழகான பிரதிபலிப்பு அது.
நீங்கள் விதைத்த விதைக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்த அனுபவம் என்கிற ஒரு நினைவை விட பெரிது என்பது, அவள் அவளுக்குள் சுமந்து செல்லும் ஓர் ஒளி” என்கிறார் நெகிழ்வுடன்.
சென்னை, ரமேஷ் கூறும்போது,
“அந்த வகுப்பை, ஒரு மாஸ்டர் கிளாஸ் வகுப்பு என்று சொல்வேன். ஜெயக்குமார் . சார் அவரை உள்ளிருந்து உந்தும் ஆர்வத்தின் ஒரு பக்கத்தை எங்களுக்குக் காட்டினார், இளம் வயதிலேயே கோவில்கள் மற்றும் கலை பற்றிய இவ்வளவு தகவல்களைச் சேகரிக்க அவர் எடுத்திருந்த முயற்சிகளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். தமிழ் இலக்கியம் மற்றும் இசை பற்றிய அவரது ஆழ்ந்த அறிவு மேலும் கூடுதல் சிறப்பைத் தந்தது .
இவ்வகுப்பிற்காக அவர் திட்டமிட்டவற்றை நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஒரு நாள் இருந்திருந்தால் கூட போதாது என்று தோன்றியது . கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, ஆனால் நேரம் குறைவாக இருக்கிறது என அனைவரும் உணர்ந்தோம். இந்த பட்டறையைப் பற்றி நம்மில் பலரும் சுவாரஸ்யமாகவும் முழுமையாகவும் எழுதுவதைப் பார்த்து, நான் மெலிதாகப் பொறாமைப்படுகிறேன். மூன்று நாட்கள் போதவில்லை என்று இப்போதே என்னை ஏங்க வைத்துவிட்டதற்கு நன்றி. இப்பயிற்சி பற்றிச் சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரைகள்,குறிப்புகள், ஜெ .கே. மட்டுமின்றி ஜெ எம்.மும் நம் அகத்தில் கலந்துள்ளார் (கவர்ந்துள்ளார்) என்பதைக் காட்டுகின்றன” என்கிறார்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் கூறும்போது,
“இப்பயிற்சியில் மூன்று நாட்களாக ஜே.கே. சாருடன் இருந்தது ஓர் அற்புதமான பயணம்.
தினமும் காலையில் ஜே.கே. தனது தெய்வீகக் குரலில் பாடிய பிரார்த்தனைப் பாடல் மிகவும் இனிமையான மற்றும் அமைதியான தருணங்களை வழங்கியது.
இந்திய கோயில் கலாச்சாரத்தின் மகாசமுத்திரத்தில், நாங்கள் ஒரு டீஸ்பூன் அளவு கற்றுக்கொண்டோம். ஆனால் ஜே. சார் சொன்னது போல் இது ஒரு கண் திறப்பு. ஜெயமோகன் சார், ஜே.கே. சார் மற்றும் மணி சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வணக்கங்கள்” என்கிறார்.
சென்னையைச் சேர்ந்த சிவதர்ஷினி கூறும்போது,
“கோயில் கட்டிடக்கலை குறித்த பயிற்சி எனது இரண்டு ஆர்வங்களையும் – நடனம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை – இணைத்து ஒரே திரைச்சீலையாக நெய்தது போல் இருந்தது.
ஒரு பரதநாட்டிய மாணவியாக, நான் வசிக்கும் இடத்தையும், அந்த இடம் கலையை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதையும் – வெவ்வேறு ஹஸ்தங்கள் முதல் முத்திரைகள் , சிற்பங்கள் வரை புரிந்துகொண்டேன்.
புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் மூலம் எங்களுக்கு வழிகாட்டி, மிக முக்கியமாக, கோயில்களைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் பலவற்றைப் பற்றியும் மேலும் மேலும் கற்றுக்கொள்ள எங்களைத் தூண்டும்படி நன்கு பயிற்சியளித்த ஜெயக்குமார் ஐயாவுக்கு நன்றி! உங்கள் முன்னால் நிகழ்ச்சி நடத்த எனக்கு வாய்ப்பளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே நன்றி” என்கிறார்.
பயிற்சியின் முன்னும் பின்னுமாக வகைப்படுத்தி தன் உணர்வு பற்றி உமா மஹேஸ்வரி கூறும்போது,
“ஆலயக்கலைக்கு முன்பு – கோயில்களைப் பற்றிய எனது பார்வை பெரும்பாலும் ஒரு பரிமாணத் தோற்றம் கொண்டதாக இருந்தது. எனக்கு, அவை அழகான, பழமையான, பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள், அவை புகைப்படம் எடுக்கப்பட வேண்டிய வரலாற்று அடையாளங்கள் என்றிருந்தன.
அவற்றின் பிரமாண்டத்தை நான் வியந்து ரசித்தேன், ஆனால் நான் என்னவெல்லாம் பார்க்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளும் மொழியும் அறிவும் இல்லாமல் இருந்தேன். சிக்கலான சிற்பங்கள் எனக்கு மிகவும் ‘நுட்பமாக‘ இருந்தன, கோபுரங்கள் ‘உயரமாக‘ இருந்தன, இருப்பினும் அதை ரசித்து அனுபவிப்பதில் ஒரு போதாமை இருந்தது.
ஆலயக்கலைக்குப் பிறகு – என் கண்களில் ஒரு கூடுதல் லென்ஸ் இருப்பது போல் உணர்ந்தேன், மேலும் கோயில் கட்டிடக்கலை உலகம் ஒரு புதிய மற்றும் உருமாற்றப்பட்ட வழியில் எனக்கு வெளிப்பட்டது.
அஞ்சலி ஹஸ்தத்துடன் நான் உங்களை வணங்குகிறேன் – (அஞ்சலி ஹஸ்தம் என்பது இருகரம் கூப்பி வணங்கி மரியாதை செய்வதைக் குறிக்கும் ஒரு முத்திரை என்பது அங்கே வந்தவர்களுக்குத் தெரியும்) இந்த வணக்கம் கோயில் கட்டிடக்கலை இசை, புராணங்கள் மற்றும் பலவற்றில் உள்ள உங்கள் ஆழ்ந்த அறிவுக்கு மட்டுமல்ல – இந்த விஷயங்களை எங்கள் தலையில் ஏற்றி உயிர்ப்பித்து, பல நூற்றாண்டுகளின் கட்டிடக்கலை கண்டுபிடிப்புகள் வழியாக ஒரு கண்கவர் பயணத்தின் மூலம் எங்களை அழைத்துச் செல்லும் உங்கள் அசாதாரண திறனுக்காகவும் தான்.
அஞ்சலி ஹஸ்தத்துடன் நான் உங்களை வணங்குகிறேன்.
நான் என் கணவருடன் கலந்து கொண்டதால் இந்த அனுபவம் எனக்கு மேலும் கூடுதலாகி இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.வீடு திரும்பும் வழியில் நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.அவரால் விரிவாக விவாதித்து வினாடி வினாவுக்குப் பதிலளிக்க முடிந்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது
அது ஒரு புதிய புரிதல் உலகத்தை நோக்கிய பயணமாக இருந்தது.
நாங்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கவில்லை, இப்போது நாங்கள் அறிவுள்ள ஆர்வலர்களாக மாறி இருந்தோம்!
வகுப்பின் அழகு என்னவென்றால் – அது நிச்சயமாக நமது லென்ஸைக் துலக்கி விரிவுபடுத்தியது,
இதன் மூலம் பல்லவர்களின் பாறையில் செதுக்கப்பட்ட கோயில்கள் முதல் சோழர்களின் பிரமாண்டமான கோயில்கள் வரை ஒவ்வொரு சகாப்தத்தின் கலையையும் நாங்கள் அனுபவிப்போம், பின்னர் அதை வியந்து பாராட்ட விஸ்மய ஹஸ்தத்தைப் பயன்படுத்துவோம். (விஸ்மய ஹஸ்தம் என்பது வியந்து பாராட்டும் போது தலைக்கு மேல் கைகளை உயர்த்தி விரல்களை விரித்து வெளிப்படுத்தும் குறியீடாகும்)
மகாபலிபுரத்தில் அர்ஜுனனும் பகீரதனும் தவம் செய்ததைப் பற்றிய குருவான உங்கள் பார்வையை எங்களுக்கு வழங்கியது உண்மையிலேயே மனக் கிளர்ச்சி ஊட்டியது.கடந்த இரண்டு நாட்களாக என் கனவுகளை நான் முழுவதுமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் – பூனைகளின் தவம், மகிஷாசுர யுத்தம், இசைக் கானங்கள் போன்றவற்றால் உறைந்து கிடக்கும் மனத்துடன் . காலையில் எழுந்த போது சிரிக்கும் முகபாவத்தில் கீர்த்தி முகன் எப்படித் தன்னையே தின்று கொண்டிருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
வேசரா, நாகரா, திராவிடம் மற்றும் ஹஸ்தம் போன்ற சுச்சி– ஆலிங்கனா – அர்த்த சந்திரா – பல்லவ ஹஸ்தம் என ஏராளமாக எங்களுக்கு வழங்கப்பட்ட மகத்தான அறிவுக்கு ஜேகே ஐயாவுக்கு மிக்க நன்றி.கற்றலை மிகச்சிறந்த அனுபவமாக மாற்றும் மகத்துவங்களைக் காண உங்களுடனும் மற்ற உங்கள் மாணவர்களுடனும் பயணிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அஞ்சலி ஹஸ்தம் !” என்கிறார்.
– அருள்செல்வன்