அன்புள்ள ஜெயமோகன் ,
நான் உங்களுடைய கட்டுரைகளையும் காணொளிகளையும் இப்போது தொடர்ந்து வாசித்தும் பார்த்தும் வருகிறேன். முதலில் உங்கள் மீதான வசைகளை வழியாகத்தான் உங்களை நான் வந்தடைந்தேன் .ஏனெனில் தொடர்ந்து இணையம் முழுக்க ஜெயமோகன் என்ற வார்த்தையுடன் அந்த வசைகள்தான் காணக் கிடைக்கின்றன. ஒரு சாதாரண திமுக அரசியல் பிரச்சாரகர் மிக ஆக்ரோஷமாகவும் விடம்பனத்தில் இருந்தும் பேசுவார். அவர் உங்களை பற்றி மிகக கடுமையாக அவன் இவன் என்று பேசிய ஒரு காணொளி வழியாகத்தான் உங்களுடைய பெயர் எனக்கு தெரியவந்தது. அதன் பிறகு உங்களைப் பற்றிய பிறருடைய வசைகள் தொடர்ந்து எனக்கு வர ஆரம்பித்தன. அதன்பிறகுதான் உங்களுடைய கட்டுரைகளை நான் படித்தேன் .உங்கள் படைப்புகளை படித்தேன். இப்போது உங்களுடைய மூன்று நாவல்களை படித்திருக்கிறேன். இன்றைக்கு உங்களுடைய மாணவன் என்றுதான் என்னை உணர்கிறேன்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் இந்த சாதாரண திராவிட இயக்க, கம்யூனிஸ்ட் இயக்க, அல்லது இந்துத்துவ இயக்க நபர்களுக்கு இருக்கக்கூடிய அபாரமான தன்னம்பிக்கையை பற்றித்தான். எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் எவ்வளவு ஆக்ரோஷமாக இவர்களால் கருத்து சொல்ல முடிகிறது! எவ்வளவு தன்னம்பிக்கையுடைய நக்கலும் நையாண்டியை செய்யமுடிகிறது! ஒருவர் உங்களுடைய ஒரு நாவலை எடுத்துக்கொண்டு மிக முட்டாள்தனமான பகுப்பாய்வு செய்து அங்கு இங்கும் பிய்த்தெடுத்த தப்பான மேற்கோளைக் காட்டி அதை தகர்த்து விட்டதாகவும் இனி அதை எவரும் படிக்க மாட்டார்கள் என்றும் சொல்லி,அவ்வளவுதான் முடித்து விட்டேன் என்று கொக்கரிப்பதை இணையத்தில் பார்த்தேன்.
இந்த தன்னம்பிக்கையை பார்க்கும் போது இப்படி ஒரு தன்னம்பிக்கை கொண்ட மூடனாக நான் ஆகிவிடக்கூடாது என்று எச்சரிக்கையைத்தான் அடைகிறேன் . அதுதான் எனக்கு இன்று அறிவியக்கத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பதாக இருக்கிறது. உயிரோடு கூட இல்லாமல் போகலாம், ஆனால் இந்த அரசியல் மூடர்கள் போன்று எந்த அடிப்படைஅறிவும் அற்ற மடையர்களாக ஒருபோதும் ஆகி விடக்கூடாது என்பதைத்தான் இன்றைய இளைஞர் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தங்களை சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன் .நன்றி
செல்வ அரங்கரசன்











