வியாபாரிகளுக்கான காணொளிகள் போடுங்கள்!

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வரும் ஒரு பார்வையாளன் நான் ஒரு சிறிய வியாபாரியாக இருந்து வருகிறேன் வியாபாரம் சார்ந்து உங்களுடைய ஆலோசனைகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இன்றைக்கு மிக அதிகமாக நடைமுறை ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் வியாபாரமோ தொழிலோ செய்பவர்கள் தான். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அந்த வகையான எந்த ஆலோசனைகளும் இன்றைக்கு தேவையாக இல்லை.

ஏனென்றால் வியாபாரம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது .ஒவ்வொரு நாளும் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு சாமானியர் இன்றைக்கு வெற்றிகரமாக வியாபாரத்தை செய்துவிட முடியாது. பல வகையான சிக்கல்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு சிக்கலையும் இன்றைக்கு ஒரு வியாபாரி அவருடைய சொந்த மூளைத்திறனாலும் உழைப்பாலும் கவனத்தாலும்தான் சமாளிக்க வேண்டி இருக்கிறது .ஆகவே ஆளுமை மேம்பாடு சார்ந்த பயிற்சிகள் வியாபாரிக்கும் தொழில் செய்பவர்களுக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது.

இந்த இடத்தை நிரப்பும் கொண்டிருப்பவர்கள் தொழில்முறை ஆலோசகர்கள் அல்லது ஆளுமைப் பயிற்சியாளர்கள் .இவர்கள் அனைவருமே ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லுகிறார்கள். அவர்களிடம் ஒரு டெம்ப்ளேட் உள்ளது .அதை எல்லா இடத்திலும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். நிறைய நடைமுறை டிப்ஸ் கொடுக்கிறார்கள். கூடவே நிறைய ஜோக் சொல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை அவர்களால் உருவாக்க முடியவில்லை. இவர்களால் பயனில்லை என்று சொல்ல மாட்டேன். எனக்கு இவர்களுடைய ஆலோசனைகளால் நிறைய பயன்கள் விளைந்திருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இவ்வளவுதான் என்று தெரிந்து விடுகிறது. அதற்கு மேல் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் எங்கிருந்தோ படித்தவற்றை ஒரு வகையில் சுருக்கி நமக்கு சொல்கிறார்கள். அந்த நூல்களை நாம் படிக்காத போது அவை நமக்கு பயன்படுகின்றன .ஆனால் அந்த எல்லைக்கு அப்பால் புதிய விஷயங்கள் நிறைய தேவைப்படுகின்றன.

ஒரு வியாபாரி ஆகிய நான் நீண்ட நாட்கள் வெவ்வேறு வகுப்புகளுக்கு நிறைய பணம் செலவு செய்து சென்றவன். ஆனால் உங்களுடைய காணொளிகளுக்கு மிக தற்செயலாக தான் வந்தேன். அதில் உள்ள பல காணொளிகள் எனக்கு மிகப் புதியவையாக இருந்தன. இதுவரைக்கும் நான் சென்ற எந்த வகுப்பிலும் இல்லாத அளவுக்கு அவை நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கவனத்தை அளிப்பவையாக இருந்தன. ஆகவே நீங்கள் வியாபாரிகளுக்கு மட்டுமான நிறைய ஆலோசனை சொல்லும் காணொளிகளையும் போடலாம் என்று நினைக்கிறேன்.

சி.கிருஷ்ணராஜ்

முந்தைய கட்டுரைஅவரவர் இடம்
அடுத்த கட்டுரைதத்துவக்கல்வியின் களிப்பு, கடிதம்