தத்துவக்கல்வியின் களிப்பு, கடிதம்

அன்புள்ள ஜெ,

பூன் முகாம் முடிந்து உங்களிடம் விடைபெற்றுத் திரும்பி ஒரு வாரம் ஆகிறது. வட கரோலினாவின் பூன் குன்றிலிருந்து கீழிறங்கி 2500 மைல்கள் தாண்டி கலிபோர்னியாவில் என் வீடிருக்கும் சான் ஹ்வாக்கின் சமவெளிக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் மனம் இன்னும் உங்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்திருந்த பொழுதுகளிலேயே திளைத்திருக்கிறது. ஏதோ நேற்றுதான் முடிந்தது போலவும், என்றோ வெகுநாட்களுக்கு முன்னர் நடந்தது போலவும் ஒரே நேரத்தில் இருவிதமாகவும் தோற்றமயக்கம் தருகின்றன அவ்வழகிய நினைவுகள்

பூனிலிருந்து திரும்பிவந்தபின் அங்கு எடுத்த புகைப்படங்களைக் காட்டி, நடந்த நிகழ்வுகளைப் பற்றி விஜிக்கும் மதுராவுக்கும் சொல்லிக்கொண்டிருந்தேன்

தத்துவ வகுப்புனா எல்லாரும் தாடியோட சோகமும் சிந்தனையுமா இருப்பீங்கனு நினைச்சேன். ஆனா எல்லார் முகமும் சிரிப்பும் பிரகாசமுமா இருக்கே?” என்றாள் விஜி.

எங்களுக்கென்ன காதல் தோல்வியா தாடியோட திரிய? நாங்க போனது ஒரு பயிற்சி வகுப்பு”.

இல்ல உங்க மூஞ்சில கூட சிரிப்பெல்லாம் வருதே. எப்பவும் இஞ்சி தின்ன குதிரை மாதிரி தான இருப்பீங்கஎன்றவளை முறைத்துஒரு பழமொழி சரியா தெரியுதா? அது குதிரையில்ல குரங்குஎன்றேன்.

என் வாயால சொல்லவேண்டாம்னு பார்த்தேன்என்று தோள்களைக் குலுக்கியபடியே சாவகாசமாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றவளுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று நான் திணறிக்கொண்டிருந்தபோது  மதுராவும் சேர்ந்துகொண்டாள்

ஆமாப்பா, இந்த போட்டோல எல்லாம் கொஞ்சம் நல்லா சிரிச்சுருக்க. குட் ஜாப்.”   என்று கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடிவிட்டாள். எப்படி சிரிக்க வேண்டும் என்று தினமும் எனக்குச் சொல்லிக்கொடுப்பது அவள்தான். இந்தமுறை நான் பாஸ் ஆகிவிட்டதில் அவளுக்கு நிம்மதி

பயிற்சி முகாமிற்கு கிளம்பும் முன்னர், “தத்துவம்னா என்ன, நீங்க அங்க போய் என்ன கத்துக்க போறீங்கஎன்று கொஞ்சம் விளையாட்டாகவும் நிறைய உண்மையாகவும் விஜி கேட்டபோது மனதில் அதற்கான பதில் இருந்தபோதும், அதைத் தெளிவான வார்த்தைகளால் ஒரு கோர்வையாக என்னால் சொல்லமுடியவில்லை. எப்படியோ சொல்ல முயற்சித்து அது முடியாமல் போகவே அதை அவள்மேல் கோபமாகக் காட்டத்தான் முடிந்ததுமுகாமிற்கு பின்னர் மீண்டும் அதே கேள்வி வந்தபோது இம்முறை ஓரளவிற்கு தெளிவுடனும் நிதானமாகவும் பதில் சொல்ல முடிந்தது

தத்துவ வகுப்பில் எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த பலவற்றில் சில விஷயங்களை உங்கள் எழுத்துக்கள் மற்றும் உரைகள் வழியாக நாங்கள் முன்னரே அறிந்திருக்கக் கூடும். சிலருக்கு அவர்கள் வளர்ந்து வந்த குடும்ப சமூகச் சூழல் காரணமாக அந்த குறிச்சொற்களோ சில பெயர்களோ முன்னரே அறிமுகமாகியிருக்கவும் கூடும். என்னளவில் இந்தக் கல்வியின் மிகச்சிறந்த கொடை என நான் நினைப்பது, தத்துவக் கல்வியின் அடிப்படையையும் தேவையையும் விளக்கி  ஒரு விரிந்த வரலாற்றுப் பின்புலத்தில் இந்தியத் தத்துவ தரிசனங்களை நீங்கள் பொருத்திக் காட்டியதும், உலகின் பிற வேதங்கள் மற்றும் தரிசனங்களோடு எந்த வகையில் நாம் உடன்பட்டும் முரண்பட்டும் தனித்து நிற்கிறோம் என்பதை விளக்கியதும் தான்

தொல்வேதங்கள், வேதங்கள், உபநிடதங்கள், ஆறு இந்திய தரிசனங்கள் மற்றும் ஆறு இந்திய மதங்களின் அடிப்படையில் தொடங்கி, வேதாந்த தரிசன மரபுகள், தொடக்கம் முதல் நவ வேதாந்த தரிசனங்கள் வரையான அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு என நீங்கள் அந்த நான்கு நாட்களில் எங்களுக்குக்  கற்று தந்தவை ஏராளம். ஆனால் இது இந்தியத் தத்துவத்திற்கான ஒரு தொடக்கநிலை அறிமுகம் மட்டுமே  என்று அறிவேன். இங்கிருந்து நாங்கள் அடுத்த நிலை கல்விக்குச் செல்வதற்கான ஒரு திறப்பாகவும், எங்கள் மனதையும் அறிவையும் விரித்தெடுப்பதற்கான ஒரு பயிற்சியாகவுமே இதை நான் உருவகித்துக்கொள்கிறேன்

நம் மூத்தோரையும் சுற்றத்தையும் எப்படிப் புரிந்துகொள்வது என்பது இளவயது முதல் எனக்கிருக்கும் குழப்பங்களில் ஒன்று. என்மேல் எப்போதும் அன்பும் பாசமும் கொண்ட அவர்கள் கடும் உழைப்பாளிகள். எத்தனை வறுமையிலும்  தாங்கள் ஏற்றுகொண்ட தர்மத்தைக் கைவிடாதவர்கள். ஆனால் உயிர்நண்பனை கூட்டிவந்து அறிமுகம் செய்யும்போதும் முதலில் குலம் குறித்தே கேள்விகேட்டு என்னைச் கூசச்செய்பவர்களும் அவர்கள் தான். வரலாற்றில் அத்தகைய மனிதர்களின் இடம் என்ன, அவர்களிடமிருந்து எதை நாம் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், எவற்றிற்காக வெட்கித் தலைகுனிய வேண்டுமென வகுப்பில் நீங்கள் ஆற்றிய உரை என்னளவில் மிகமுக்கியமான ஒன்று. அதை மேலும் விரிவாக்கிக்கொண்டு நம் தொல்மரபை எப்படிப் புரிந்துகொள்வது, அதிலிருந்து நம் சமகால அறப்பார்வைக்கு ஏற்றவாறு எதைத் தொடர்வது, எதைத் துண்டித்து எறிவது எனச் சிந்திக்க முயல்கிறேன்.

நவவேதாந்த தரிசனங்களுக்கான அமர்வில் விவேகானந்தர் குறித்து நீங்கள் ஆற்றிய உரை இன்னொரு உச்சம். விவேகானந்தர் சிகாகோவிற்கு வந்து சகோதர சகோதரிகளே என்று புகழ்பெற்ற உரையாற்றினார் என்ற ஒற்றை வரி வரலாற்றை மட்டுமே கேட்டுப் பழகிய எனக்கு, அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் எங்கெங்கோ கப்பலில் சுற்றியலைந்து அமெரிக்கா வந்து சேர்ந்ததும், உணவும் உறைவிடமும் இன்றி பனிக்காலம் முழுவதும் போராடி வாழ்ந்ததும் முற்றிலும் புதிய செய்திகள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய சிந்தனையில், ஆன்மிக தரிசனத்தில், விடுதலைப் போராட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அந்த புகழ்பெற்ற சொற்பொழிவு கடைசி நிமிடத்தில் அவர் எழுதிப் பேசிய ஏழு நிமிட உரை மட்டுமே என்பதை இன்னும் கூட நம்பமுடியவில்லை. வகுப்பு முடிந்த பின் அன்று இரவு சிகாகோ உரையைத் தான் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். எண்ணி அளவெடுத்துச் செதுக்கியதைப் போல் அத்தனை கச்சிதமான, செறிவான உரை. நம் தேசமும், மரபும் அன்றிருந்த நிலையில் நின்றுகொண்டு, உலகத்தின் தொன்மையான மரபின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன் என அனைவருக்கும் அளிக்கும் இடத்திலிருந்து உரையாற்றிய அவரது ஆன்மபலம் எத்தனை உச்சத்தைத் தொட்டிருக்கும்

வேதம் என்பது வான்சொல் என்று எத்தனையோ முறை முன்னரும் கேட்டதுண்டு. “ஸ்ரஎன்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியஸ்ருதிஅல்லது வேதம் என்பதுஸ்ரவ்யஎன்னும் வான்சொல்லிலிருந்து முளைத்தது என்று மட்டுமே சொல்லியிருந்தால் அது வெறும் ஒரு தகவலாக மட்டுமே நின்றிருக்கும். விண்ணிலிருந்து முழங்கும் இடியோசைதத்த, தய, தமஎன்று முழங்கியதைக் கேட்ட வேதகாலத்து முனி ஒருவன் அதையேகொடு, கருணையோடு, பொறுமையோடு”  என வேதமந்திரமாக்கியதை நீங்கள் கவித்துவமாக விளக்கியபோது மனம் மிகுந்த எழுச்சியடைந்தது. மூடிய வகுப்பறைக்குள்ளிருந்து நீங்கள் இதை விளக்கிய அந்தத் தருணங்களில், ஓடும் நதியில் நீரென வானில் விரைந்து சென்றுகொண்டிருந்த மேகங்கள் வெளியே சூரியனை மறைத்தும் காட்டியும் விளையாடிக்கொண்டிருந்தனமேகங்களின் அந்த வெளி விளையாட்டில் வகுப்பறையின் ஜன்னல் இடைவெளிகள் வழியாக ஒளியும் நிழலும் மாறி மாறி உங்கள் மேல் விழ, நீங்கள் கற்றுக்கொடுத்த அந்தக் காட்சி அழியாச்சித்திரமாக எப்போதும் எங்களுடன் இருக்கட்டும்

சாரதி

முந்தைய கட்டுரைவியாபாரிகளுக்கான காணொளிகள் போடுங்கள்!