சாமானியனும் தத்துவமும்

அன்புள்ள ஆசிரியருக்கு

தத்துவக் கல்வி பற்றிய உங்கள் காணொளியைக் கண்டேன். தத்துவம் ஏன் கற்கவேண்டும் என புரிந்துகொண்டேன். ஒரு சாமானியனுக்கு தத்துவம் ஏன் தேவை என சொல்லமுடியுமா?

ரத்னகுமார்

அன்புள்ள ரத்னகுமார்

தத்துவம் இல்லாமல் எவரும் வாழமுடியாது. ஒரு இழப்பின்போது நாம் நம்மை தத்துவார்த்தமாகத்தான் தேற்றிக்கொள்கிறோம், இன்னொருவரை தேற்றுகிறோம். ஓர் உளச்சோர்வின்போது நம்மை தத்துவார்த்தமாகவே தேற்றிக்கொள்கிறோம். நம் நீதியுணர்வு அடிப்படையில் தத்துவம் சார்ந்தது. நம் மதநம்பிக்கையின் அடியில் தத்துவம்தான் உள்ளது. நம் அரசியலின் சாரமும் தத்துவமே

ஆனால் அவையெல்லாம் மதம் அளிக்கும் தத்துவங்கள். அல்லது அரசியல் அளிக்கும் தத்துவம். ஒன்றுமே தெரியாதவர்களுக்குக் கூட பொதுவான பேச்சுக்கள் வழியாக கிடைக்கும் மிகப்பொதுவான தத்துவங்கள். மிக எளிமையான வரிகளாக அவை இருக்கும். ‘வாழ்க்கையிலே எதுவுமே நிரந்தரமில்லை’ என்று ஒருவர் சொல்வதுகூட எளிமையான ஒரு தத்துவம்தான்.

அந்தத்தத்துவங்களால் ஒருவர் நிறைவடைவார் என்றால் அவர் மேற்கொண்டு தத்துவம் கற்கவேண்டிய தேவை இல்லை. அவர் ஒரு சாமானியர். ஆனால் அறிவுக்கூர்மை கொண்டவர்களால் அவ்வாறு நிறைவடைய முடியாது. அவருக்கு மேலும் கேள்விகள் வரும். அவருடைய தேடல் முன்னால் செல்லும்.

அவ்வாறு கேள்விகள் வருபவர் தத்துவம் பயிலவேண்டும். தனக்கான விடைகளை கண்டடையவேண்டும். இல்லாவிட்டால் அவர் கசப்பும் எதிர்மறை மனநிலையும் கொண்டவராக ஆவார்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஆலயங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
அடுத்த கட்டுரைமருத்துவம், கடிதம்