பறவை பார்த்தல் -கடிதம்

 

பறவை பார்த்தல் வகுப்பு, கடிதம்

பறவை பார்த்தல், கடிதம்

பறவை பார்த்தல், கடிதம்

அன்புள்ள ஆசானுக்கு,

சிறு வயது முதலே பறவைகள் பற்றிய ஆர்வம் அதிகம் எனக்கு. நானாகவே பார்க்கும் பறவைகளின் பெயர்களை அறிய முயற்சி செய்து கொண்டே இருப்பேன். ஆனால் பல சமயம் கண்டறிய முடிந்ததில்லை. புத்தகங்களில் படித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் நான் பிழை செய்து கொண்டே இருப்பதை அறிந்தே இருந்தேன்.

ஆசிரியர் என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒரு கட்டமைப்பிற்குள் கல்வி நிகழும் போது மட்டுமே அறிதல் நம்மை வந்தடையும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்த இரு நாட்களும் என்னுள் இருக்கும் சிறுமிக்கான வரம் என்றே சொல்வேன்.
ஆசிரியர் ஈஸ்வரமூர்த்தி , ஆசிரியர் விஜய பாரதி அவர்கள் இருவரும் மிக மிக பொறுமையாக குழந்தைகள் அனைவருக்கும் புரியும்படி மெல்லவே ஆனால் அனைத்தையும் கற்பித்தார்கள்.

நான் என்னுடன் அழைத்து சென்றது 10 வயதான என் அண்ணனின் மகள் பவதாரிணி. அவளுக்கு விருப்பமோ இல்லையோ, எனக்கு இந்த வகுப்பில் பங்கெடுக்க மிக விருப்பம்.

ஒரே தடை என் 3 வயது மகன் தான். அவனை என்ன தான் செய்ய இயலும். அவன் அப்பாவிடம் தனியாக விட்டு செல்ல முடியாததால் அவனும் அவன் அப்பாவும் உடன் வந்தனர்.

தொடக்கம் முதலே வகுப்பு மிக சுவாரஸ்யமாக சென்றது. இரண்டு நாட்களும் சென்ற வேகம் தெரியவில்லை.

காலையில் அறிமுக வகுப்பு. ஒரு அருமையான காணொளியுடன். ஆனால் அதில் வந்த ஒரு பறவையை கூட எனக்கு அறிமுகமே இல்லை. பின் ஆசிரியர்கள் பறவைகளை பற்றியும், அதன் சத்தங்களை பற்றியும் வகுப்பெடுத்தனர். மதிய உணவிற்குப் பின் பறவைகள் பார்க்க யானை குழியெல்லாம் தாண்டி சென்றோம். ஆட்காட்டி பறவை வந்து எங்களை அறிவித்த உடனே மழை வந்துவிட்டது. ஒருவழியாக ஓடி, நனைந்து பயிற்சிக் கூடம் வந்தோம். மழையிலேயே அமர்ந்து ஆசிரியர் கொண்டு வந்த புத்தகம் ஒன்றை படித்தேன்.

மழை நின்றபின் யானை குடிலுக்கு சென்றோம். பூச்சிகள் பிடிக்க அத்தனை பறவைகளும் வந்தன. உண்மையில் போட்டி போட்டுக்கொண்டு வந்து எங்களை பார்த்து சென்றன. மாங்குயில், பச்சை சிட்டு, கருப்பு கரிச்சான், சாம்பல் கரிச்சான்,வல்லூறு, பனை உழவாரன், மயில், மீன்கொத்தி என இன்னும் இன்னும் வந்து கொண்டே இருந்தன. உண்மையில் எனக்கு மந்திரவாதியின் மந்திர கோலை சுற்றுவதால் வருபவை போல இருந்தன.

குழந்தைகள் அனைவருமே நான் பார்த்தேன் , நான் பார்த்தேன் என கூச்சலிட்ட படியே இருந்தனர்.பின் சிறு ஓய்வு முடிந்து கதை வகுப்பு ஆரம்பிக்கும் பொழுது நான் ஆதித்யாவிடம் மாட்டிக் கொண்டேன். வகுப்பிற்கு செல்ல முடியவில்லை.  இருந்ததிலேயே குட்டி பையன் ஆதித்யா தான். எல்லா குழந்தைகளுடனும் அவன் பேசிக் கொண்டே இருந்தான். பெரியவர்களிடமும் தான்.

மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் கிளம்ப செய்த முயற்சியும் பலிக்கவில்லை. ஆனால் அதன் பிறகான வகுப்பை நான் தவற விடவே இல்லை. மதியம் வரை அதிவேகத்தில் சென்றது. சின்ன பரீட்சை கூட எழுதினோம்.முடிவில் மீண்டும் அந்த காணொளி. இப்பொழுது பல பறவைகளை அடையாளம் காண முடிந்தது அவ்வளவு மகிழ்ச்சி.

கிளம்பி அந்தியுர் வந்த உடனே Merlin & ebird App download செய்து விட்டேன். அந்தியூர் பேருந்து நிலையம் அருகே சுடலை குயில் இரண்டு கம்பி மேல் அமர்ந்து இருந்தது. விஜய பாரதி ஆசிரியர் சொன்னார். திருநீறு போல இருக்கும் அந்த குயில் அதனால் அது சுடலை குயில் என. பார்த்த உடனே நான் கண்டு பிடித்துவிட்டேன். ebird ல் பதிவும் செய்து விட்டேன்.

ஆசானே, என்ன சொல்லியும் அதன் மகிழ்ச்சியை விளக்க முடியாது. நம்முடன் இருக்கும் ஒரு உயிரை நம்மால் அடையாளம் காண முடியும் என்பது மிகச் சிறந்த ஒரு உணர்வு. இன்று வரை 33 பறவைகளை பார்த்து பதிவு செய்துள்ளேன். எங்கேனும் ஒரு பறவை ஒலியினை கேட்டாலும் யாராக இருக்கும் என மனம் சென்று விடுகிறது.

என் மகனும் என்னுடன் வந்து குயில் குயில் என சொல்லிக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு எல்லா பறவைகளுமே குயில் தான்.

அறிதலை தந்தமைக்கு அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றி

பிரியமுடன்
சரண்யா

முந்தைய கட்டுரைவேதாந்தக் கல்வி எதற்காக?
அடுத்த கட்டுரைகாணொளிகள்- கடிதம்