காலைநடை சென்றிருந்தேன். இப்போதெல்லாம் காலைநடை வழக்கம். முன்பு இரவு 12 மணிக்குத் தூங்கி காலையில் ஆறரை மணிக்கு எழுவேன். வெயிலொளி வந்துவிட்டிருக்கும். அதன்பின் நடைசென்றால் களைப்பு, வியர்வை. வேலை ஏதும் நடக்காது. இப்போது இரவு 10 மணிக்கே தூங்கி காலையில் ஐந்து மணிக்கு எழுவதனால் காலைநடை ஆறு மணிக்கெல்லாம் முடிந்துவிடும்.
நேராக கருப்பட்டி காபிக்கடையில் சீனி இல்லாத ஒரு டீ. சும்மா அப்படியே ஒரு இருபது நிமிட நடை. உடனே திரும்பிவிடுவேன். உடம்பை கொஞ்சம் உதறிக்கொள்வதுதான் அது. ஒரு காலைச்சுறுசுறுப்புக்காக.
இன்று ஒருவர் உடன்வந்தார். தான் காலைநடை செல்வதைப்பற்றிய பெருமை முகமெங்கும். “இந்த ஏரியாவிலே வாக்கிங் வாறியளோ”
“ஆமா, சும்மா இப்டியே…” நான் ஏன் தப்பு நடந்துபோச்சு மொதலாளி பாவனையில் அதைச் சொன்னேன் என எனக்கே புரியவில்லை.
அவர் ஆலோசனைகளை ஆரம்பித்தார். “இப்டி போவப்பிடாது. நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வேணும்…இல்லேன்னா காலுக்கு ஆபத்து”
“நான் இருபது நிமிசம்தான்…”
“இருபது நிமிசமா…வெளங்கும் போங்க….ஒரு மணிக்கூறாவது போகணும்…அதான் வாக்கிங்”
“ஆனா டயர்ட் ஆயிடுது, அதான்”
“ரெஸ்ட் எடுத்துக்கிடணும்…போயி குளிச்சிட்டு ஒரு அரைமணிநேரம் உறங்கினாக்கூட நல்லதுதான்”
“நான் போனதுமே எளுதுவேன், படிப்பேன்…நெறைய வேலை இருக்கு”
“என்ன மயிரு வேலை? சார் நம்ம உடம்பு நமக்கு முக்கியம். எதுக்குச் சொல்றேன்னாக்கா…”
நான் கடுப்பானேன். “நீங்க உடம்புக்கு மட்டும்தான் எக்ஸஸைஸ் குடுக்கிறிய இல்ல?’
“யோகாவச் சொல்றியளோ?”
“இல்ல…மூளைக்கு… மூளைக்கு பயிற்சி வேணும்லா?”
“பிரீத்திங்கா? நான் சிலசமயம் பிராணா பண்ணுறதுண்டு”
“அதும் உடம்புக்குத்தான்…நான் சொல்றது மூளைக்கு….நம்ம மூளை காலம்பற நல்லா எக்ஸஸைஸ் செய்யணும்…அதாவது நல்லா கடுமையா உளைக்கணும்…அதுக்குத்தான் நான் புக்கு படிக்கிறது…”
“நான் கூட தந்தி பேப்பரை…”
“என்ன சார் வெளையாடுறீங்களா? தந்தியெல்லாம் மூளைக்கு எம்மாத்திரம்? அது அம்பதுகிராம் டம்பல்ஸை தூக்குறது மாதிரி…அம்பது ஸ்டெப் நடக்குறது மாதிரி…ஹெவி எக்ஸஸைஸ் வேணும்சார்…நான்லாம் ஒரு ரெண்டு மணிநேரம் நல்ல ஃபிலாசபியா படிப்பேன்”
“ஓ”
“இப்ப உள்ள டாக்டர்ஸ் என்ன சொல்றாகன்னாக்க மூளைக்கு வாக்கிங் வேணும்சார். “
“வாக்கிங்கா?”
“டிரெடில்ல கூட பண்ணலாம்….வெயிட் லிப்டிங்கூட குடுக்கலாம்”
“ஓ”
“மூளைக்கு எக்ஸஸைஸ் இல்லேன்னாக்க அப்டியே மறதி வர ஆரம்பிச்சிரும்…உங்களுக்குக்கூட கொஞ்சம் மறதி வர ஆரம்பிச்சிருக்குமே”
“அப்டி பெரிசா இல்லை….”
“கொஞ்சமாட்டுதான் ஆரம்பிக்கும்…அப்டியே ஜாஸ்தியாட்டு ஆவும்…அதான் டிமென்ஷியா, அம்னீஷியா, அல்ஷைமர், பார்க்கின்ஸன்னு பல நோய்களா மாறிடுது”
“ஓகோ”
“சிலபேருக்கு ஸ்கிஸோப்ரினியா கூட வந்திருது கேட்டியளா?”
அவர் முகம் வெளிறிவிட்டது. குரல் எழவில்லை
இன்றைக்கு இந்த நல்லகாரியம்போதும். கருப்பட்டி காபிக்கடையில் இன்னொரு டீபோட்டுவிட்டு திரும்பவேண்டியதுதான்.