மேலைத்தத்துவ அனுபவம்- ரம்யா

அன்பு ஜெ,

”மேலைதத்துவம் என்பது தர்க்கம் மூலம் விடைகாணமுடியும் என்ற நம்பிக்கையை சாரமாகக் கொண்டது.” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுருப்பீர்கள். அஜிதனின் மேலைதத்துவ வகுப்பு அந்த தர்க்கத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைச் சிந்தனைகளை, சிந்தனையாளர்களை பெரும் வரலாற்றுப் பரப்பில் வைத்துப் பார்ப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தது.

மேலைத்தத்துவ வகுப்பு மார்ச் 14,15,16 ஆகிய தேதிகளில் நித்யவனத்தில் நிகழ்ந்தது. முழுமதிக்குப் பிந்தைய நாட்கள் அவை. வெள்ளிமலையில் இரவில் ரசிக்கும்படியான குளிரும், சற்றே வளரும் கரியனுடன் பிரகாசமான மதியனும் நிறைந்திருந்த நாட்கள். அஜிதன் இதை மேலைத்தத்துவ வகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் ஜெர்மானிய தத்துவ வகுப்பு என்று சொல்வது சரியாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் என்வரையில் இது மேலைதத்துவ வகுப்பு என்று இருப்பதே சரியாக இருக்கும். அஜிதன் கலைஞராக தன்னுடைய தேடலைப் பொறுத்து ஜெர்மானிய தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அது ஒட்டுமொத்த மேலைதத்துவத்தில் வகிக்கும் இடத்தையும் திட்டவட்டமாக முன்வைத்தார். ஆனால் அங்கிருந்து நாம் மேலைதத்துவத்தின் பிற கிளைகளுக்குள் செல்வதற்கான ஒரு வழித்தடத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்த மூன்று நாள் தத்துவ வகுப்பை அவர் கட்டமைத்திருந்த விதம் பெரும் உழைப்பைக் காட்டியது.

மூன்று நாட்களையும் தொகுத்துப் பார்க்கும்போது அஜிதன் எந்த சிந்தனையின் மேலும் சிந்தனையாளர்கள் மேலும் கனத்தை ஏற்றவில்லை என்று தோன்றுகிறது. அவருக்கு பிடித்த சில சிந்தனையாளர்கள் வரும்போது அதை பகிர்ந்து கொண்டதும் எழுச்சியடைந்ததையும் பார்க்க முடிந்தாலும் அனைவரையும் சமமாக அவரவர் அறிவுத்தேடலைப் பொருத்து சரியாக அறிமுகப்படுத்தியிருந்தார்.

வரலாற்று ரீதியாக மேலை தத்துவ சிந்தனையாளர்களின் அறிமுகம்; ஏற்கனவே மேலை தத்துவத்தில் விவாதிக்கப்பட்ட கேள்விகள்; அதற்கான முக்கியமான அறிஞர்களின் பதில்கள்/பார்வைகள்; நாம் நம் வாழ்க்கை அனுபவத்தின் வழியாக ஏற்கனவே அறிந்தவற்றை தர்க்க ரீதியாக அடுக்கிக் கொள்வதற்கான சட்டகம்; அறிவார்ந்த உரையாடலுக்கான தர்க்க முறைகள் ஆகியவற்றை வழங்கியது என ஒட்டுமொத்தமாக இந்த வகுப்பை தொகுத்துக் கொள்கிறேன்.

*

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த “மேலே திறந்து கிடக்கிறது” சிறுகதை வழியாக பெரிய அளவில் மனித அறிவுக்கு இருக்கும் எல்லைகள் மற்றும் மனித அறிவுக்கு அப்பாலான நோக்கம் பற்றிய சிந்தனைகளை ஒட்டிய கேள்விகள் உருவானது. அஜிதனின் மேலைத்தத்துவ வகுப்பு அவ்வாறே அறிபவருக்கு இருக்கும் அறிவின் எல்லைகளிலிருந்தே ஆரம்பித்தது ’என்’ தேடலை ஒட்டி முக்கியமானதாக இருந்தது. இப்போது இந்த வகுப்பப் பற்றி எழுதும்போதும் ’என் பார்வைக்கோணம்’ என்பதைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதுகிறேன். அறிபடுபொருள், அறிபவர் பற்றிய விசாலமான பார்வைக் கோணத்தை வகுப்பு அளித்ததுடன் அறிபவருக்கு இருக்கும் எல்லைகள் பற்றிய போதத்தையும் வகுப்பு அளித்ததே அதற்கான முதன்மைக் காரணம். சில வார்த்தைகளைப் உபயோகிக்கும்போது தயக்கம் ஏற்படுகிறது. கவனம் கூடியுள்ளது.

’ஒளியின் தன்மை’ பார்ப்பவர் இருக்கும்போதும், பார்ப்பவர் இல்லாதபோது மாறுபடும் தன்மையுடையதாக இருப்பதையும், வெளவாலைப்பற்றிய அறிவை இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தாலும் நாம் ஒரு போதும் வெளவ்வாலாகவே இருந்து அறிந்து கொள்ளும் அறிவை அடைய இயலாது என்பதன் வழியாக அறிபவராக இருக்கும் மனிதருக்கு இருக்கும் எல்லைகளிலிருந்து வகுப்பு தொடங்கியது முதலில் என்னை இலகுவாக்கியது. நாம் கற்கப்போவது பூதாகரமாக இல்லாமல் தன் பலவீனங்களையும் வெளிப்படுத்தியவாறு திறந்து கொள்வது ஒரு வித இலகுதன்மையும், கூர்மையையும் அளிக்கிறது.

தத்துவத்திற்கும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அறிவியல் துறைக்கும், மிகக் குறைந்த அளவிலேனும் மதத்திற்கும் (Christian Philosophy) இடையிலான உரையாடல், முரண் ஆகியவற்றையும் தொட்டுக் காட்டினார். வகுப்பின் பல இடங்களில் அதற்கு இணையான பெளத்த தத்துவம் மற்றும் இந்திய தத்துவ மரபுகளை குறிப்பிட்டுக் காட்டியது முக்கியமானதாக, சில சமயம் எழுச்சியாக இருந்தது. உதாரணமாக ஷோப்பனோவர் வகுப்பின் இறுதியில் “He has woken up the divine within and sees the inner light. His vision is an eye turned inward. He is at peace. He is a king. He has risen above good and evil…” என்ற வரிகளும் புத்தரின் அழ்ந்த கனவிலாழ்ந்த கண்களும் அந்த வகுப்பின் எழுச்சியைக் கூட்டியது. 

எனக்கு மிகவும் பிடித்த நபரைப் பற்றி வகுப்பில் பகிர்ந்து கொள்ளச்சொன்னபோது நான் ஷோப்பனோவரையே சொன்னேன். “veil of maya” பற்றிய படிமம் மிகப்பிடித்ததாகச் சொன்னேன். குறிப்பிட்ட கால – வெளிக்கு இடைப்பட்டு நிகழும் நிகழும் நிகழ்வுகளை அடைப்பானுக்குள் குறிப்பிட்டு அதன் எல்லையைக் காண்பித்து அதற்கு அப்பால் நின்று நோக்கும் ஒன்றின் (pure subject, pure object) சித்திரம் எனக்கு வெண்முரசில் இளைய யாதவன் கர்ணனை நோக்கும் இடத்தை நினைவூட்டியது. வகுப்பில் பல இடங்களில் விஷ்ணுபுரமும், வெண்முரசும் அதன் தருணங்களும் நினைவில் வந்தபடியே இருந்தன. அவை இரண்டும் நின்றிருக்கும் தத்துவ அடிக்கட்டுமானத்தின் ஆழத்தை யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றைப் பற்றிய ஓர் முழுமையான நோக்கு உருவான பின் அளிக்கும் இலக்கியத்தில் உருவாகி வரும் செவ்வியல்தன்மை பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

முதல் நாள் முழுவதும் சாக்ரடீஸுக்கு முன்னும் பின்னுமான தத்துவ உரையாடல்கள் பற்றிய விரிவான பார்வை கிடைத்தது. இரண்டாம் நாள் மதியம் ஷோப்பனோவரால் மிகுந்த உணர்வுப்பெருக்கிற்கு உள்ளாகி இரவு நீட்சேவில் உச்சமடைந்தது. ஷோப்பனோவர் அமர்வுக்குப்பின் சில மணித்துளிகள் தனியாகச் சென்று இவற்றை அறியச் செய்த அந்த ஒன்றுக்காக கண்ணீர் பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொண்டேன். இரண்டாம் நாள் மதிய வேளை அது. அந்த தருணத்தை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஆனால் நீட்சேவின் அமர்வு முடிந்தபோது “போர்! போர்!” என நெஞ்சு புடைத்து எழுந்து செல்லும் போர் வீரர்களைப் போல ஆகியிருக்க வேண்டும். ஆனால் வகுப்பில் சில சலசலப்புகள். அஜிதன் மேலும் உணர்வுகளை எதிர்பார்த்ததாகச் சொன்னார். ஒரு இடைவேளை விட்டபோது புகழ்பெற்ற கடைசி பெஞ்ச் மாணவர்களான V.S. செந்தில்குமார் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவருக்கும் நீட்சே பற்றிய பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. என்னை அதற்கு கருத்து தெரிவிக்க அழைத்தபோது செந்தில் அண்ணா சொன்னது ஏற்புடையதாக இருந்தது. அவர் நீட்சேவிடம் ஒரு பெண் தன்மை குறைவதை சிக்கலாகச் சொன்னது பெருமிதமாக இருந்தது. நண்பர்கள் நீட்சேவின் வகுப்பில் கலந்து கொண்டு அந்த பெருமிதத்திற்கான காரணத்தை அவர்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதன்பின் அஜிதன் நீட்சேவின் இறுதி நாட்களைப் பற்றி நம்பப்படுவதாகச் சொன்ன நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். முதலில் எனக்கு நீட்சேவின் மேல் முதிர்ச்சியின் மறுப்பு இருந்தாலும், இளமையில் நீட்சே தேவைப்படுபவராகத் தோன்றியது. எந்த நிலையிலும் உயிரின் விழைவு நீட்சேவியனாகத் துடிக்கும் ஒன்றாகவே இருக்கும் என்று கூட தோன்றியது. சில மறுப்புகளுடன் நீட்சேவையும் ஏற்றுக் கொண்டேன். எந்த சிந்தனையாளர்களையும் முழுவதும் ஏற்க முடியாமல் இருப்பதும் தவிர்க்க முடியாமல் இருப்பதும் உள்ளுக்குள் மேலும் உரையாடலையே தூண்டியது. 

இறுதி நாள் ஃப்ராய்டுடன் வகுப்பு முடிந்தது. நனவிலி மனம் பற்றிய ஒரு விரிவான பார்வைக்கோணத்தை அளித்தது. நனவிலி மனத்தின் ஆழத்தின் உச்சம் வரை சென்று தொடுபவர்களாலேயே ஒன்றை சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது என்று தோன்றியது. அதன் அடுக்குகளை அறிந்து கொள்வது என்பது வெவ்வேறு நிலையில் வெளிப்படும் மனிதர்களை அறிந்து கொள்வதும் தான். உணர்வு எத்தனை ஆழமாக அறிந்து கொள்ளும் இடத்திலிருந்தாலும் எதுவும் சரியாக உள்ளே செல்லாத மனிதர்களைப் பற்றிய விசாரணை எனக்கு உண்டு. இலக்கியம் என்பதன் அடிப்படைகளில் ஒன்று உணர்வுகள் பற்றிய சரியான போதம் தான். ஆனாலும் எல்லோரும் செவ்வியல் படைப்பாளிகளின் உணர்வாழத்தை சென்று தொடுவதில்லை. நான் வாசித்திருக்கிறேன் என்பது பெரிய விஷயமல்ல. மாறாக எத்தனை ஆழமாக. அல்லது ஓர் செவ்வியல் படைப்பாளி எந்த ஆழத்திலிருந்து எழுதினாரோ அதிலிருந்து எத்தனை தொலைவுக்கு நெருக்கமாக அந்த மொழியை பொருளை உணர்ந்து கொண்டோம் என்பது முக்கியம். அப்படி ரசிப்பவர்களின் ரசனையையே நாம் மதிக்கிறோம் என்றும் தோன்றியது. இதை யதார்த்தத்தில் மனிதர்களை அணுகுவதோடும் ஒப்பிடலாம். மனிதர்களுக்கிடையேயான வேறுபாடுகளை புரிந்து, ஏற்றுக் கொள்ளும் அறிவை இந்த அறிவு அளிக்கலாம். வீட்டிற்கு வந்து ஃபிராய்டை தான் விரிவாக வாசிக்க வேண்டி எடுத்து வைத்தேன். என் தேடல் அது/அவரைச் சுற்றியே பெரும்பாலும் இருப்பதை உணர முடிந்தது. 

வகுப்பிற்கு முன்னதாக கதேயின் காதலின் துயரம் நூலை வாசித்திருந்தேன். எம்.கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு. கதே எனக்கு மிகவும் பரிட்சயமான ஆன்மா என்று தோன்றியதாக அவரிடம் பகிர்ந்து கொண்டு நன்றி தெரிவித்தேன். கதேக்கு ஒரு தமிழ்விக்கி பதிவு போடுவதன் வழி அவரை முழுமையாகப் பார்க்கலாம் என்று மூன்று நாட்களாக அதில் உழன்றிருந்தேன். கதே வீமரையே ஓர் அறிவுஜீவிகளின் கூடாரமாக மாற்றியவர். ஐரோப்பாவின் ஒரு நூற்றாண்டின் அனைத்து அறிவுத்துறைகளின் போக்கையும் தீர்மானித்த மேதை. அஜிதன் கதேயையும் ஷில்லரையும் கற்பனாவாத காலகட்டத்தின் உச்சப்புள்ளிகளாக வரலாறு மற்றும் தத்துவப் பார்வையுடன் முன்வைத்தது எனக்கு இன்னும் விசாலமான பார்வையை அளித்தது. அதன் வழியாக ஒட்டுமொத்த கற்பனாவாத காலகட்ட எழுத்தாளர்களையும் தொகுத்துக் கொள்ள முடியும் என்று தோன்றியது. வாசிக்க வேண்டும்.

*

இந்த வகுப்பில் கவிஞர் வேணு வேட்ராயனின் இருப்பு முக்கியமானதாக எனக்கு இருந்தது. அவர் வகுப்பில் மூன்று முறை பேசினார். அஜிதன் முதல் நாள் முதல் அமர்வில் அறிவியலின் அடிப்படைகள் பற்றி விளக்குவதற்காக ஒளியின் தன்மை, பருப்பொருள் வெளியில் விரிவடைவதைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது வேணு “அப்படியானால் இது எண்ணங்களுக்கும் பொருந்தும் இல்லயா” என்று கேட்டார். ”இதற்குத்தான் வகுப்பில் ஒரு கவிஞன் தேவைப்படுகிறார்” என்று அஜிதன் சொன்னார். அவர் அந்த பதிலுக்கு ஏற்போ மறுப்போ சொல்லவில்லை. “இருக்கலாம்” என்று எடுத்துக் கொண்டேன். வெளியில் எண்ணங்களின் இருப்பை முன்பே கற்பனை செய்திருக்கிறேன். அது பருப்பொருள் போல விரிவடைவதை, சுருங்குவதை, இல்லாமலாவதை கற்பனை செய்து பார்த்தேன்.

இரண்டாவது நாள் ஷோப்பனோவர் அமர்வில் “veyil of maya” -ல் “veil” பற்றி அதன் மெல்லிய தன்மை பற்றி வகுப்பிலேயே சிலாகித்தார். விழைவை ரத்து செய்வதன் (suspension of will) வழியாக அறிபவர் (pure subject), அறிபடுபொருளை (pure object) சரியாக பார்க்க முடிவதற்கு தேவைப்படும் ஒரு செயல் அத்தனை மெல்லியது ஆனால் அதற்கு பெரிய துணிவு தேவை என்று சொன்னார்.

இந்த மூன்று நாட்களில் வேணுவிடமே அதிக நேரம் உரையாடியிருக்கிறேன் என்று இப்போது எழுதும்போது தோன்றுகிறது. அவரை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அவருக்கு இளம் தேவதேவன் போல சாயல். ஆழமான குரல். அதே ஆழம் கொண்ட மொழியும் பார்வைக்கோணங்களும். அவர் முன் இலகுவாக உரையாடுவதற்கு ஏதுவாக எளிமையாக இருந்தார். அதுவே யாவற்றிலும் முதன்மை என்று தோன்றுகிறது.

வகுப்பு முடிந்து வீட்டிற்கு புறப்படுவதற்கு முன் வேணுவிடம் நீண்ட விடைபெறுதலின் போது அவர் பேசியவற்றில் இரண்டு வார்த்தைகளை வீட்டிற்கு சுமந்து வந்தேன். ஒன்று Dare to Know (அறிந்திடு துணிந்திடு!). நான் இதை ’அறிவதற்குத் துணி’ என்றே மொழிபெயர்க்க விரும்புகிறேன். ஏனெனில் Dare என்பது கட்டளையிடுகிறது. Know அமைதியாக உட்கார்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. வேணு அதை ‘sapere aude’ என்று குறிப்பதையே விரும்பியதைப் பார்க்க முடிந்தது. இரண்டு “ஒளியின் விழைவு”. 

முதலாவது அன்றாடத்தை நோக்கி “veil of maya” வைக் களைந்து நிற்பதற்குத்தான் அத்தனை பிரயத்தனமும் துணிவும் தேவை என்ற பொருளிலும், ஒட்டுமொத்தமாக இந்த வகுப்பையே அவ்வாறு தொகுத்துக் கொண்டதாகச் சொன்னதும் அழகாக இருந்தது. இரண்டாவது அஜிதன் வகுப்பில் எடுத்த “cave allegory” யை குறிப்பிட்டுச் சொன்னது. அந்தப் படத்தில் இருளில்/அறியாமையில் இருப்பவர்களை வெளியில் கொண்டுவந்தது ’ஏற்கனவே அறிந்தவர்களின்’ விழைவு அல்ல என்றார். 

“அந்த அறிதலின் விழைவா?” என்றேன்.

“அதற்கும் அப்பால் இருந்த அந்த ஒளியின் விழைவு” என்றார்.

சொற்கள் உள்ளுக்குள் முட்டி “அதை உணர்ந்திருக்கிறேன்” என்று மட்டும் சொன்னேன். 

நம்மை நாம் ஆழமாக உள்நோக்கி பயணம் செய்யத் தேவையான சில நல்ல கருவிகளை வகுப்பு அளித்தது. இங்கிருந்து என்னால் என் வாழ்க்கை நோக்கு சார்ந்து மேலும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவும், ஏற்கனவே இருக்கும் கேள்விகளுக்கான விடைகளுக்கான ஒரு பார்வைக்கோணத்தை, பரிமாணத்தைப் பெற முடியும் என்றும் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் அறிந்து விட இயலுமா? எனில் சாத்தியமில்லை. ஆனால் நமக்கான ஒன்று அல்லது நமக்காக அது விழைந்த ஒன்றை சென்று தொட்டு நிறைவடைய முடியும் என்று ’இப்போது’ நினைக்கிறேன். 

*

டால்ஸ்டாயின் டெவில்(devil )என்ற குறுநாவலில் வரும் கதாநாயகன் யுஜீன் தன்  “மண்டைக்குள் நுழைந்த புழு”வாக கதாநாயகியை சித்தரிப்பான். அந்த குறுநாவல் வழியாக புத்துயிர்ப்பு, அன்னா கரினீனா ஆகியவற்றின் ஆன்மாவை தரிசிக்க முடியும். மண்டைக்குள் ஒரு புழு நுழைவதால் உந்தப்பட்டு குடைச்சலில் எழுதும் புனைவுகள் பற்றிய ஆழமான விசாரணை என அதை சிந்தித்துப் பார்த்தேன். சென்ற வாரம் ”மண்டைக்குள் பூ மலர்தல்” என்ற படிமத்தை எழுதியிருந்தீர்கள். எனக்கு ஏன் புத்துயிர்ப்பும், அன்னா கரினினாவும், தஸ்தாயெவ்ஸ்கியும் அத்தனை ஈர்க்கவில்லை என்பது அப்போது விளங்கியது. ஒருவேளை  டால்ஸ்டாய் மட்டும் அந்த மலர்தலை போரும் வாழ்வும் வழியாக அடைந்திருக்கலாம். 

 அறிதலின் வழியாக அந்த மலர்வை அடைய முடியும் என்று தோன்றுகிறது. இப்போதைக்கு எனக்கு மண்டைக்குள் சில புழுக்கள் குடைந்து கொண்டிருக்கின்றன. அவை அகன்று அங்கு பூ மலர்வதற்காக விழைகிறேன். அல்லது வேணு வேட்ராயன் குறிப்பிடுவது போல அந்தப் பூ விழைகிறது. அதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்த வகுப்புகள் எனக்கு அந்த தயாரிப்புக்கான வாயிலாக இருக்கின்றன என்பதை பகிர்ந்து கொள்கிறேன் ஜெ.

ஆசிரியராக இந்த மூன்று நாட்களும் உடனிருந்த அஜிதனுக்கு நன்றி. முழுமையறிவு என உங்களில் துளிர்விட்ட எண்ணத்தை இத்தனை விசையுடன் செயல்படுத்தும் உங்களுக்கும் அன்பு.

 

ரம்யா.

முந்தைய கட்டுரைமொழி, கடிதம்
அடுத்த கட்டுரைபக்தி இயக்கம் தத்துவத்திற்கு எதிரானதா?