அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
பல மொழிகள் கற்பதைவிட அந்த மொழி குறித்தான சிந்தனைத் திறன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். மொழிகளின் அறிவுத் திறன் வேறு ஒவ்வொரு பாட மொழிக்கான அறிவுத் திறன் வேறு என்பதை நுட்பமாக விளக்கியிருப்பதும் சிறப்பு.
இன்றைய கல்வி நிலையில் இந்த மொழித்திறன் குறித்தான சிக்கல்கள் மாணவர்களிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
குறைந்தது பதினெட்டு வருடங்களாக இந்த சிக்கல்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நான் பார்க்கும்போது இந்திய நாட்டின் கல்விமுறை மீதுதான் கடுங்கோபம் வருகிறது.
தேசத்தில் உள்ள கல்வி முறை, அறியாமையை அப்பட்டமாகக் கற்றுக் கொடுக்கிறது. இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மதங்களும் சாதிகளும் அந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்களின் நலன், கல்வி சார்ந்துதான் இயங்குகிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கான முறையைப் பள்ளிகளில், கல்லூரிகளில் நடைமுறைப் படுத்த வேண்டும்.
இல்லையெனில், இத்தனை மொழிகள்தான் கற்க வேண்டும் என்று எந்தெந்த கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறதோ அந்தந்த கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது அவர்களுக்குப் பிடித்த அரசுப் பள்ளியைத் தெரிவு செய்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழியை அவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பிறகு அங்குள்ள மொழித்திறன் குறித்தான சிக்கல்களைப் புரிந்துகொண்டு பேசுங்கள் என்று வெளிப்படையாக ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரும் அவர்களிடம் பேச வேண்டும்.
நீங்கள் பேசியிருப்பது நல்லதே. ஒவ்வொரு துறையிலும் இருக்கக் கூடியவர்கள் களத்தில் இறங்கி இதுபோன்ற மொழித்திறன் குறித்தான நிலையில் மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர அறியாமையில் அல்ல என்று உரக்கச் சொல்ல வேண்டும். இது தொடர்பான சிக்கல்களை மக்களும் புரிந்துகொண்டு பேச வேண்டும். மும்மொழி அல்ல மூவாயிரம் மொழிகள் கூட கற்க மாணவர்கள் தயார். ஆனால் அது தேர்வு மதிப்பெண் நோக்கி இருக்கும் பட்சத்தில் தோல்வி அடைந்து, மேலும் அறியாமையே புகுத்தப்படும். இந்தியாவில் வகுப்பறைகள் இருக்கும். மாணவர்கள் இருப்பார்கள். பல மொழிகளும் இருக்கும். ஆனால் மொழித்திறன் அறியாமைக்குள் கட்டுண்டு கிடக்கும். இந்த நிலையை உடைக்க வேண்டும் என்றால் மொழித்திறன் அதன் வழி சிந்தனை ஒன்றே சரியானது என்பதைப் பதிவிட்டமைக்கு நன்றி.
ஜெயந்தி கார்த்திக்