வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே,
வரும் காலங்களில் வேதம் கற்றுத்தர வகுப்புக்கள் தொடங்கும் எண்ணம் ஏதேனும் இருக்கிறதா ?
எனக்கு வயது அறுபத்தி ஐந்து ஆகிவிட்டதால் பாரம்பரிய முறையில் கற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. மேலும் கற்றுத்தரவும் மாட்டார்கள்.
தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்
ஒரு சிறு வாசகன்
சுந்தரராஜன் ( தாம்பரத்திலிருந்து )
அன்புள்ள சுந்தரராஜன்
வேதம் கற்றுக்கொள்வது என்பது இரண்டு தளங்கள் கொண்டது.
ஒன்று, வேள்விச்சடங்குகளுக்காக வேதம் கற்றுக்கொள்வது. பொதுவாக மதச்சடங்குகள் எங்களுக்கு ஏற்புடையவை அல்ல. ஆகவே அந்தவகையான எந்தக் கல்வியும் நாங்கள் அளிப்பதில்லை. வேதக்கல்வியானாலும் சரி குர் ஆன் ஓதும் கல்வியானாலும் சரி.
வேதங்களை வேள்விகளுக்காகப் பயில்வது என்பது அதை அப்படியே மனப்பாடமாக ஓதக் கற்பதுதான். ஒலிபிசகாமல், சொல் தவறாமல் அப்படியே ஒப்பிப்பது அது. அதற்கு கூடவே சைகைகள் உண்டு. சடங்குகளையும் கூடவே கற்கவேண்டும். எந்தச் சடங்குக்கு எந்த வேதமந்திரம் என்பதும், அது எந்த ஓசையுடன் ஓதப்படவேண்டும் என்பதும் , கூடவே என்னென்ன செய்யப்படவேண்டும் என்பதும் எல்லாமே அறுதியாக வகுக்கப்பட்டுள்ளன. குறைந்தது நாலாயிரமாண்டுகளாக அவை மாற்றமில்லாமல் அப்படியே கடைப்பிடிக்கப்படுகின்றன.
அவ்வாறு வகுக்கப்பட்டு, அது பிடிவாதமாகப் பேணப்பட்டமையால்தான் வேதங்கள் இன்று நிலைத்திருக்கும் ஒரே தொல்பிரதித்தொகுயாக உள்ளன. வேதங்களின் காலகட்டத்தைச் சேர்ந்த பிற தொல்பிரதிகள் (உதாரணமாக எகிப்திய நூல்கள்) தொல்லியல் சின்னங்களாகவே உள்ளன. அவற்றின் ஒலியமைப்பு என்பது ஊகிக்கப்படுவதே ஒழிய உண்மையில் என்ன என்று எவருக்கும் தெரியாது. அவற்றுடன் இணைந்த சடங்குகள் மறைந்துவிட்டமையால் பொருளும் பெரும்பாலும் ஊகிக்கப்படுவதாகவே உள்ளது.
ஆகவே ஒருவர் முழுவாழ்க்கையையும் அதற்கென அளித்து, இளமையில் இருந்தே பல ஆண்டுகள் முறைப்படி முயன்று அதைக் கற்பதுதான் அவசியமானது. அவரது வாழ்க்கையே அதனுடன் இணைந்திருப்பதே சரியானது. அதற்கான மரபான அமைப்புகள் அப்படியே நீடிப்பதும் அவசியம்.
வெறும் ஆர்வத்தால் அதைக் கற்பது என ஆரம்பித்தால் காலப்போக்கில் அக்கல்விமுறை சிதையும். குறைபட்ட கல்விகொண்ட பலநூறுபேர் உருவாவார்கள். அவ்வாறு ஒரு பெருந்திரள் உருவானால் அதன்பின் இத்தனைகாலம் நீடித்த வேத உச்சரிப்பும், முறைமைகளும் அழிந்துவிடும். போலி வேத அறிஞர்கள் அசல்களை விட பெரும்புகழ்பெறவும் வாய்ப்புண்டு. ஏற்கனவே யோகம் போன்றவை அப்படி திரிபடைந்துவிட்டன.
கடந்தகாலத்தில் சாதிமுறையே வேதங்களை பேணியது என்பது உண்மை. சாதிமுறை என்றுகூட சொல்லமுடியாது, சம்பிரதாயங்கள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் எல்லா அந்தணர்களும் எல்லா வேதங்களையும் கற்பதில்லை, கற்கமுடியாது. வழிவழியாக ஒரு மரபு எந்த வேதப்பகுதிகளைக் கற்கிறதோ அந்த மரபைச்சேர்ந்தவர்கள் மட்டும் அந்த மரபை மட்டும் கற்கமுடியும் என்பதே நெறியாக இருந்தது. இப்போதும் நீடிக்கிறது.
இப்போது, அந்தணர் அல்லாத பிறரும் வேதம் கற்கிறார்கள். ஆரியசமாஜம் வேதபாடசாலைகளை நடத்துகிறது. பிற அமைப்புகளும் நடத்துகின்றன. வேதங்களை அங்கும் திட்டவட்டமாக வகுக்கப்பட்ட முறைப்படி, இளமையில் இருந்தே நீண்டகால பயிற்சியாகக் கற்பிக்கிறார்கள். கற்பவர் வேதத்துக்கென வாழ்வை அளிப்பவராகவும் உள்ளனர்.
வேதச்சடங்குகளைச் செய்யாத ஒருவர் வேதங்களை ‘சும்மா’ கற்கவேண்டிய தேவை இல்லை. வேதங்களை அப்படி அரைகுறைக் கவனத்துடன், ஓய்வுநேரத்தில், கற்பது பிழைகளை பெருக்கும். பிழையான கல்வி பயனற்றது, தீங்கானதும்கூட.
இரண்டாவது கல்வி என்பது வேதங்களை அறிவார்ந்து, பொருளுணர்ந்து கற்பது. இதற்கு வேதத்தின் ஒலியமைப்பு, அதனுடன் இணைந்த சடங்குகள் தேவை இல்லை. வேதங்கள் ஆங்கிலம், தமிழ் என எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. அசல்பாடல்களும் மொழிபெயர்ப்பும் மற்றும் உரைகளும் அவற்றில் உள்ளன. அவற்றைக்கொண்டே வேதங்களைப் பயிலலாம். கற்கும் வேதங்களின் ஒலியை கேட்கவேண்டும் என்றால் இணையத்திலேயே அவை ஒலிப்பதிவாக உள்ளன.
ஆனால் வெறுமே வேதங்களை எடுத்து ‘வாசிக்க’ முடியாது. வேதங்களை மட்டும் படித்து முழுமையாகப் பொருள் அறியவும் முடியாது. அந்தவகை வாசிப்பால் குழப்பங்களே மிகும். ஏனென்றால் அவை நாம் வாழும் இந்த வாழ்க்கை எந்தவகையிலும் உருவாவதற்கு முந்தைய நூல்கள். நாம் கற்காலத்தில் இருந்து பழங்குடி வாழ்க்கையை நோக்கி வந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. கற்காலம் முதல் இருந்துவரும் மெய்யியலும் சிந்தனைகளும் படிமங்களும் அவற்றில் நீடிக்கின்றன
ஆகவே அவை உருவான பின்னணி, அவற்றின் அமைப்பு, அவற்றின் தொடர்ச்சி ஆகியவற்றுடன் முழுமையான தத்துவக் கல்வியாகவே வேதங்களை அறிந்துகொள்ள முடியும். வேதங்களின் பொருள் அல்லது தத்துவத்தின் தொடர்ச்சியே உபநிடதங்கள். அவற்றையும் கற்றாகவேண்டும். அது பல ஆண்டுகள் நீடிக்கும் ஒரு தொடர் கல்வி.
அத்தகைய கல்வியையே நாங்கள் இந்திய தத்துவ அறிமுகம் என்னும் தலைப்பில் நடத்தி வருகிறோம்.
ஜெ