அன்புள்ள ஜெ
மார்ச் 8-10 2024 தேதிகளில் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சி செய்யத் தொடங்கி 11 மார்ச் 2025தோடு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்தது (மார்ச் 12 2024ல் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன்). இந்த ஒரு வருடத்தில் 15ல் இருந்து 20 (அதிகபட்சம்) நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பயிற்சியை விடாமல் செந்திருக்கிறேன். இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள், கிட்டத்தட்ட எல்லா மாதங்களிலும் வெளியூர் பயணங்களுக்கு இடையிலும் தவறாமல் பயிற்சி செய்ய முடிந்திருப்பதே பெரும் நிறைவைத் தருகிறது.
சுவாசச் சிக்கல்கள், முகுகு வலி உள்ளிட்ட உடல் சார்ந்த சிக்கல்கள், தூக்கப் பிரச்சினைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. ஒருநாளின் பெரும்பகுதியை உற்சாத்துடனும், உடல் சோர்வில்லாமலும் கழிக்க முடிகிறது. அலுவலக மீட்டிங்குகளில், வாசிப்பில், நண்பர்களுடனான உரையாடல் என பெரும்பாலான நேரங்களில் கவனத்துடனும், முழு ஈடுபாட்டுடனும், விழிப்புடனும் செயல்பட முடிகிறது.
எந்த வேலை செய்யும் போதும் அவ்வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே ஒருவித விலக்கத்துடன் உள்ளே நிகழும் எண்ணவோட்டங்களை கவனிக்க முடிகிறது. அலுவலக வேலைகளில் செயல்திறன் கூடி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பதற்றம், கோபம் வெகுவாகக் குறைந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு வருடம் ஒரு செயலைச் செய்ய முடிந்திருக்கிறது என்பதே பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.
வகுப்பிற்குப் பிறகு பல புதிய செயல்களைத் தொடங்கி தொடர்ந்து செய்து வருகிறேன். வெண்முரசு குழு வாசிப்பு, இரண்டு குழுக்களில் 100 மணி நேர வாசிப்பு சவால், இசைக்கருவி பயிற்சி, சிலப்பதிகார வகுப்பு என பட்டியலின் நீளம் கூடிக் கொண்டே போகிறது. இவை அனைத்திற்கும் அடிப்படை தியானப் பயிற்சியே. வாழ்வு இனியதாக ஆகி உள்ளது.
எப்போதும் மகிழ்வாக இருக்க வேண்டும் எனும் குறிக்கோள் எல்லோருக்கும் உள்ளது. அதற்கான வழிமுறைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. தொடர் செயல்பாடுகளின் மூலம் நிறைவாக இருப்பதே நிரந்தர மகிழ்விற்கான பாதை என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். அதைக் கச்சிதமாக செயல்படுத்தும் வழிமுறைகளை உருவாக்கிக் கொடுத்திருப்பவர் குருஜி செந்தில் அவர்கள். அவருக்கும், இவை நிகழக் காரணமாக உள்ள உங்களுக்கும் நன்றி ஜெ.
இப்படிக்கு,
சு. சூரிய நாராயணன்
பி.கு:இதோ பல வருடமாக எழுத முயன்ற கடிதத்தைக் கூட எழுதி விட்டேன்!