அன்புள்ள ஜெ,
மேடையுரை பயிற்சி முதலில் அறிவித்த போது எனக்கு அதில் ஆர்வம் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை, பிறகு நீங்கள் அது ஒரு சிந்தனை பயிற்சி என்றவுடன் ஆர்வம் வந்தது, நீங்கள் அதை பயன்படுத்தி பொன்னியில் செல்வன் திரைப்பட விழாவில் பேசியது பற்றியும் தெரிந்தது. ஆனால் நீங்கள் போதிய எண்ணிக்கையில் நண்பர்கள் கலந்துகொள்ளாததால், நிறுத்திவிட்டீர்கள் என்று அறிவித்ததும் ஏமாற்றம். பிறகு நண்பர் சுந்தர பாண்டியனின் முயற்சியால் 35 பேர் உறுதி அளித்ததும் நீங்கள் இணையத்தில் அறிவித்ததும் உற்சாகமாக இருந்தது. அதே சமயம் ஒரு தயக்கமும் வந்தது, நீங்கள் எல்லோரையும் பேச சொல்லுவீர்கள் என்று தெரியும், என்ன தலைப்பில் தயாரித்து பேச சொல்லுவீர்கள், என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற பதட்டம் இருந்தது. சரி இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு பார்த்துவிடுவோம் என்று கலந்துகொண்டேன்.
முதலில் வணிக உரைக்கும், அறிவார்ந்த உரைக்கும் உள்ள வித்தியாசங்களை தெளிவுப்படுத்தி சொன்னீர்கள். இப்பொழுது உள்ள வணிக உரை அறிவார்ந்தவர்களுக்கு குறிப்பாக உங்களுக்கு ஏன் விலகலை அளிக்கிறது, அதனால் ஏற்படும் நேர விரயத்ததையும் திரும்ப திரும்ப சொல்லி வலியுறுத்தி அதை நாம் செய்யக்கூடாது என்றீர்கள். நீங்கள் தந்த சிற்றுரை மற்றும் பேருரைக்கான வடிவம் மற்றும் நேர அளவு (5, 7, 20, 40, 90 நிமிடம்) அவை உலகம் முழுவதும் பரவலாக ஏற்கப்பட்ட ஒன்று என்பதும் அதன் முக்கியத்துவத்தை சொன்னது. நம்மை ஆழ்ந்து யோசிக்க வைத்து, கச்சிதமாகவும், தொடக்கமே கேட்பவர்களை நம்மை நோக்கி இழுத்து, இதுவரை கேட்டிருக்காதவகையிலும், கடைசியாக நாம் சொன்னதைவிட ஒரு படி அவர்களை மேலே சிந்திக்க வைக்கவேண்டும் என்றும் சொன்னீர்கள். எப்படி பேச வேண்டும், பேசக்கூடாது, உள்ளடக்கத்தின் முக்கியம் அதில் எவை இருக்க வேண்டும், இருக்ககூடாது என்று விரிவாக சொன்னீர்கள்.
நான் அலுவலகத்தில் பேசியிருக்கிறேன், ஆனால் அவை குறைந்தது 20-30 நிமிடங்களுக்கு இருக்கும், 5-20 பேர் இருப்பார்கள், இப்பொழுது எல்லாமே இணைய சந்திப்பு தான். என்னுடைய துறை சம்பந்தமாக என்பதால் தயக்கம்/சிக்கல் இருந்ததில்லை. இருந்தாலும் ஆரம்பிக்கும் பொழுதும் ஒரு பதட்டம் இருக்கும், தயாரிக்க ஆரம்பித்ததும் பதட்டம் குறைந்து கடைசில் முடிக்கும் பொழுது அது ஒரு வகையில் மூழமையாக வந்திருப்பது நிறைவை தரும். ஆனால் நீங்கள் சொன்னபடி ஒரே ஒரு ஐடியாவை சில மணி நேரங்களுக்குள் 5 அல்லது 7 நிமிடங்களுக்குள் நமக்கு முன் உட்கார்ந்து இருப்பவர்களை ஆரம்பத்தில் நம்முள் இழுத்து, புதியதாக இருக்கும் வகையில் அதே சமயம் ஆர்வமோடு கேட்க வைத்து முடிவில் அவர்களை மேலும் சிந்திக்க ஒரு தாவல் நிகழ வேண்டும் என்பதும் ஒரு வித பதட்டத்தை தந்தது.
ஆனால் நான் மிகவும் நிறைவாக உணர்ந்த நாட்கள், முதல் 5 நிமிட உரைக்கு தயார் செய்ய ஆரம்பித்தவுடன் இருந்த தயக்கம், ஒரு சிந்தனையை (ஐடியா) அது என்னுடையதாக இல்லாவிட்டாலும், நீங்கள் கொடுத்து வடிவத்தில் தயாரிக்க முடிந்தது. எனக்குள்ளேயே பேசி பார்த்தேன், பிறகு அலைபேசியில் பதிவு செய்து நேரம், குரல் வாக்கிய அமைப்பு எல்லாவற்றையும் பயிற்சி செய்து பார்த்தேன். இருந்தும், மேடைக்கு சென்றதும் என்னுடைய சிந்தனை, ஞாபகத்தில் இருந்து அடுத்து பேச இருப்பத்தை எடுப்பது, பேசுவது, நேரத்தை கவனிப்பது, நீங்கள் கொடுத்த வடிவத்தில் அமைப்பது என்ற எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. இது முதல் முறை மிதிவண்டி கற்றுக்கொள்வது போல இருந்தது, ஒரே நேரத்தில் வண்டியும் நாமும் சமநிலையில் இருக்க வேண்டும், நம்மை சுற்றி நடப்பவற்றை கவனித்து அதற்கேற்றவகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும், நிறுத்தியோ, வேகத்தை குறைத்தோ, கூட்டியோ மிதித்து உத்தேசித்த இடத்தை அடைய வேண்டும். நேரமின்மயால் முடிவை சரியாக முன்வைக்க முடியவில்லை, நீங்கள் நேரம் முடிந்தது என்றதும், ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை, பாதி தான் சொல்லியிருந்தேன், மீதி பாதியை முழுங்கிவிட்டு, முடிவை அரைகுறையாக சொல்லி முடித்தேன். நீங்கள் பின்னூட்டமாக என்னுடைய பேச்சின் வேகம் ரொம்பவும் குறைவாக இருந்தது என்றும், தேவையில்லாத சில வாக்கியங்களை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னீர்கள், பரவாயில்லை ஆரம்பத்தில் இப்படி தான் இருக்கும் என்று சொல்லியது ஆறுதலாக இருந்தாலும் சிறிது ஏமாற்றம் தான். அதை தயாரிக்கும் பொழுது நீங்கள் அறிவித்து மூன்று மணி நேரத்தில் ஒரு வரைவும், மற்றவர்கள் உரையாற்றி கொண்டிருக்கும்பொழுதும் மூன்று, நான்கு மணி நேரத்தில் அந்த உரையை மேம்படுத்த முடிந்தது மிகவும் நிறைவாக இருந்தது, அது என்னுள் உருவாகி திரண்ட விதமும் நிறைவை அளித்தது.
மேலும் ஒரு உரை இருக்கும் என்றதும் மறுபடியும் பதட்டம் வந்துவிட்டது, ஏற்கனவே இருந்ததையும் பயன்படுத்தியாகிவிட்டது, புதிய சிந்தனை வருமா, எப்படி தயாரிப்பது என்ற பயமும் வந்துவிட்டது, 7 நிமிடம் என்றதும் கொஞ்சம் ஆறுதல். மதிய உணவு இடவேளை இருக்கிறது செய்துவிடலாம் என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன். தயாரிக்க ஆரம்பித்தவுடன் பதட்டம் அதிகமாகிவிட்டது, சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என்று 30 நிமிடங்கள் தூங்கி எழுந்தேன், அப்படியும் ஒன்றும் வரவில்லை. ஒரு மணி நேரத்தில் ஒரு ஐடியா பிடிபட்டது, ஆரம்பம் மட்டும் வந்தது, முழுமையாக்க முடியவில்லை. அடுத்த வந்த நேரங்கள் நான் நிறைவாக உணர்ந்த தருணங்கள். அந்த ஐடியா எப்படி முழுமையாகும், எப்படி பேச போகிறேன், எப்படி அது எல்லாவையும் கவரும், நீங்களும் அதை அங்கீகரிப்பீர்களா என்று யோசிப்பதை விட்டுவிட்டேன். எது எப்படி ஆனாலும் பரவாயில்லை, இந்த ஐடியா பிடிபட்டு, வளர்ந்து, என்னை யோசிக்க வைத்த மணித்துளிகள் விலை மதிப்பில்லாதது. என்னுள் இது போல் ஒரு உரையை சில மணி நேரங்களுக்கும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தந்தது சாதாரணமானதல்ல. ஆனாலும் மற்றவர்கள் உரையற்ற, நீங்கள் பின்னூட்டம் கொடுக்க, என்னுடைய உரையின் போதாமையை உணர்ந்தேன், மேலும் அது வலுவாக இருக்க வேண்டும் என்ற பதட்டம் வந்துவிட்டது. நல்ல வேளையாக அன்று என்னுடைய முறை வரவில்லை. இரவு தூங்கும் முன் வேறு வேறு முடிவுகளை யோசித்து வைத்தேன்.
காலை எழுந்து உங்களிடம் இதை சொல்லி சரியாக வருமா என்று கேட்கலாம் என்று நினைத்தேன், அது முறையாக இருக்காது என்றும் உணர்ந்தேன், மற்றவர்களுடன் விவாதித்து மேம்படுத்தலாம் என்றும் சொல்லியிருந்தீர்கள், நான் எடுத்த தலைப்பை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்ற குழப்பமும், அவர்கள் என்னை மேலும் குழப்பக்கூடும் அல்லது நம்பிக்கை இழக்க காரணமாகலாம் என்ற எண்ணமும் இருந்தது. நானே இதை முயற்சிக்கவேண்டும் என்று முடிவெடுத்து 3-4 வேறு வேறு முடிவுகளை எழுதி பார்த்தேன், எது சரியாக அதுவும் கேட்பவரை கொஞ்சமாகவேனும் நம்பும் படியாக இருக்கும் எனக்கும் சொல்லி பார்த்துக்கொண்டேன். 4-5 முறை அலைபேசியில் பேசி பதிவு செய்து நேரக்கணக்கை சரி பார்த்து போதவில்லை என்று மேலும் உள்ளடக்கத்தை கொஞ்சம் அதிகப்படுத்திக்கொண்டேன். முதல் உரையில் செய்த தவறை மறுபடியும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று கை கடிகாரத்தில் 4-5 நிமிடத்தில் எச்சரிக்கும் வகையில் செய்து கொண்டேன்.
நேரம் ஆக ஆக என்னுடைய முறை வர 11:00 ஆக ஆரம்பித்தவுடனே ஒரு விதமான பரவசம், நான் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்றார்போல நேரமும் ஒத்துழைக்கிறது என்றும் நான் எடுத்த தலைப்புக்கு அது ஒப்புதல் அளிப்பது போன்றும், கண்டிப்பாக இது சரியாக வரும் என்றும் தோன்றியது, கடைசி வரை மேம்படுத்திக்கொண்டும் ஒத்திக்கை பார்த்துக்கொண்டும் இருந்தேன், மற்ற நண்பர்கள் உரையாற்றுவதை சரியா கவனிக்கவில்லை, உங்களின் பின்னூட்டத்தை மட்டும் கவனித்து என்னுடைய உரையை சரி பார்த்துக்கொண்டேன்.
என்னுடைய முறை வந்ததும் நேரம் 11:08, நான் மேடையில் என்னுடைய அனுபவத்தின் ஆரம்ப வாக்கியங்களை பேசி உள்ளடக்கத்தின் உள்ளே செல்லும் பொழுது சரியாகா நேரம் 11:11, பேசும் பொழுது நண்பர்களும் உற்சாகமாக கேட்டார்கள். முடித்துவிட்டு உங்களை பார்த்ததும் நீங்கள் தலையாட்டியதும் நிறைவை அளித்தது. கை கடிகாரத்தில் நேரம் காட்டுவது மறைந்து விட்டது, எவ்வளவு நேரம் ஆனது என்று கணிக்கமுடியவில்ல, நீங்கள் ஒன்று சொல்லாததால் சரியாக வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். நண்பர்களை அந்த தலைப்பு கவர்ந்திருப்பது அவர்கள் தந்த பின்னுட்டங்களிருந்து தெரிந்து கொள்ள் முடிந்தது. அவர்களே எனக்கு அளிக்கப்பட்ட வரிசை எண்ணுக்கும் தலைப்பிற்கும் உள்ள தொடர்பை சுட்டினார்கள்.
இரண்டு நாட்களில் இரண்டு உரையை தயாரித்து அதை மற்றவர்களுக்கு புதியதாக அதே சமயம் ஒரு ஐடியாவாக மாற்ற முடிந்தது நிறைவாக என்னுள் மிக நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்பது உறுதி. அதை ஏற்படுத்தி ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும். இந்த பயிற்சி மேலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நண்பர்களும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நிறைவுடன்,
திரு
பி.கு. என்னுடைய உரை நீங்கள் சொன்ன வடிவத்தில் இருந்தது, ஆனால் உள்ளடக்கமும் முடிவும் தர்க்க ரீதியாக பொருந்தி வந்ததா என்று உறுதியாக தெரியவில்லை. தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.
அன்புள்ள திரு
உங்கள் பேச்சு தொடர்ச்சியும் ஒருமையும் கொண்டிருந்தது. உள்ளடக்கமும் தொடக்கமும் முடிவும் இசைவுகொண்டிருந்தன.
ஆனால் என் எதிர்வினையை விட கேட்டிருந்தவர்களின் எதிர்வினையே முக்கியம். இது மேடைப்பேச்சு அல்லவா?
ஜெ