அன்புள்ள ஜெ
நாவல் போட்டியை அறிவித்து, கூடவே மாணவிகளை எழுதவைப்பதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறீர்கள். மிகச்சிறப்பான ஒரு முயற்சி. ஆனால் நம் கல்விமுறையில் ஆங்கில அறிவு மிகமிகக் குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகள் ஆங்கிலம் பேசுகின்றன. ஆனால் ஒரு 700 வார்த்தைகள் மட்டுமே கொண்ட ஆங்கிலம் அது. அதைக்கொண்டு அவர்களால் உணர்ச்சிகளையோ நிகழ்ச்சிகளையோ எழுத முடியாது. அத்துடன் ஒரே வகையான சொற்றொடர்களை மட்டும் தான் அவர்களால் உருவாக்க முடியும். அதற்கு மேல் மொழியறிவு வேண்டுமென்றால் ஆங்கிலம் அனுதினம் செவியில் விழும் ஒரு சூழலில், அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ ஆஸ்திரேலியாவிலோ வாழவேண்டும்.
இங்கே தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளும் அரைகுறையாகவே தெரிந்திருக்கின்றன. நான் சொல்வது தொழில்நுட்பக்கல்வி பெறும் மாணவர்களைப் பற்றி அல்ல. ஆங்கில இலக்கியக் கல்வி பெறும் மாணவிகளே அந்த தரத்தில்தான் இருக்கிறார்கள். என் மகள் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று மேற்படிப்புக்கு பெங்களூரில் இருக்கிறாள். இந்த அறிவிப்பைப் படித்ததும் அவளிடம் ஒரு நாவலை எழுதும்படிச் சொன்னேன். அவள் வாசித்ததெல்லாம் ஹாரிபாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ், அமிஷ் நாவல்கள்தான். சரி, அதைப்போலவாவது எழுதட்டுமே என்று நினைத்தேன்.
நான் உந்தி தள்ளி அவள் இரண்டு அத்தியாயம் எழுதினாள். பள்ளிக்கூட நடையில் இருந்தது. அத்துடன் பல சொற்றொடர்கள் ஒட்டாமல் வேறு இருந்தது. கேட்டால் அவள் பல புத்தகங்களில் இருந்து நிறைய வரிகளை தேடி எடுத்துச் சேர்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இணையத்தில் போய் இடியம்ஸ் தேடி அதையெல்லாம் எந்த புரிதலும் இல்லாமல் ஆங்காங்கே சேர்த்துவிட்டிருந்தாள். ஏ.ஐ. பயன்படுத்தக்கூடாது, கண்டுபிடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். ஆனாலும் கொஞ்சம் பயன்படுத்தியிருந்தாள். மொத்தத்தில் ஆங்கிலத்தில் எழுதும் திறன் பூஜ்யம். இத்தனைக்கும் அவள் அந்தக் கல்லூரியின் நட்சத்திர மாணவியாக இருந்தவள். எல்கேஜி முதல் மிகத்தரமான பள்ளிகளில் மட்டுமே படித்தவள்.
இதுதான் இங்கே உள்ள தரம். நம் கல்வித்தரம் பற்றி தெரிந்தும் இந்தப் போட்டி வைக்கப்படுகிறது. எத்தனைபேர் எழுதுவார்கள் என்று தெரியவில்லை.
அன்புடன்
அ