
அன்புள்ள ஜெ
இன்றைய அரசியலை தீர்மானிப்பவர் சீமான் என்று உங்கள் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். அதை ஆதரித்தும் எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்தோம். அது உண்மை என்பதற்கான சான்று இது. வேட்டி கட்டிய மார்க்ஸ். இது ஒரு தொடர்பு உத்தி இல்லை. இளைஞர்கள் இன்று மார்க்ஸியத்தை விரும்பவில்லை. அது பழையது என நினைக்கிறார்கள். அவர்கள் தமிழ்த்தேசியத்தையே விரும்புகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டுதான் திமுக திராவிடத்தை கைவிட்டு விட்டு தமிழ்த்தேசிய உரையாடல்களை கையில் எடுக்கிறது. திமுகவின் ஒட்டுண்ணியான கம்யூனிஸ்டுக் கட்சி சீமான் அரசியலையே எடுக்கிறது. தமிழ்த்தேசியம் வழியாக கொஞ்சம் மார்க்சியத்தைக் கடத்த முயல்கிறது.
மார்க்ஸ் பேசிய சர்வதேசியமெல்லாம் இன்று அர்த்தமே இல்லை என்று புரிந்துகொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தேசிய நம்பிக்கை கொண்டவர்களை எல்லாம் தேடித்தேடி கட்சியை விட்டு துரத்தினார்கள். இன்றைக்கு இவர்களின் நிலைமை இது. பின் தொடரும் நிழலின் குரல் நாவல் படித்துள்ளேன். அதில் இப்படி எவரை எதிரி என நினைக்கிறார்களோ அவர்களையே காப்பி அடிப்பதைப் பற்றி எழுதியிருக்கவில்லை என்று நினைக்கிறேன்.
ராஜூ பாண்டியன்