பாலியலும் உரிமையும்

அன்புள்ள ஜெ

நுகர்வுக்கலாச்சாரமும் பாலியல் விடுதலையும் பற்றிய உங்கள் காணொளியைக் கண்டேன்.

பாலியல் உரிமை என்பது உண்மையில் ஒட்டுமொத்தமான உரிமையின் ஒரு பகுதி மட்டுமே. ஒருவர் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிப்பதில் அது ஒரு சிறு பங்கை வகிக்கிறது. அதற்கு அப்பால் அதற்கு எந்த வகையான முக்கியத்துவமும் இல்லை .ஆனால் இளம் வயதில் அது மட்டுமே வாழ்க்கை என்று அடுத்த தலைமுறை நினைப்பது இயல்பானதே. நாம் அனைவரும் அவ்வாறு தான் இருந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இளவயதில் அது மட்டும் அல்ல முழுவாழ்க்கையும் என்று அவர்களிடம் சொல்வது பொருள் இல்லை .மாறாக அவ்வாறு அவர்கள் உணரும்படியான வாய்ப்புகளை உருவாக்குவதுதான் நாம் அனைவரும் செய்யக் கூடியது. கலை, இலக்கியம், அறிவியல என்று என்றபல்வேறு துறைகளில் தீவிரமான ஈடுபாடுகளை உருவாக்குவது மட்டுமே அத்தகைய ஒரு குறுகிய பார்வையில் இருந்து அவர்களை வெளியே கொண்டு செல்லும் வழி.

பாலுறவுகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தனி மனிதனின் சுதந்திரத்துடனும் உணர்ச்சிகளுடனும் ஆழமாகச் சம்பந்தப்பட்டவை. ஒருவர் சரியான உறவுத்தொடர்பை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அதற்கு விலையாக அவர் அளிப்பது தன் ய தனி மனித சுதந்திரத்தையும் உணர்வுகளின் கட்டுப்பாட்டையும்தான். இவ்வாறு வாழ்க்கையை அளித்த பலரை நாம் அறிவோம் அந்த எச்சரிக்கைதான் நமக்கு அடுத்த தலைமுறையினரிடம் இதைச் சொல்வதற்கு காரணமாக அமைகிறது.

 காணொளியில் சொல்லப்பட்டது போல நாம் நம் குழந்தைகளுக்கு கலைகளை, இலக்கியத்தை அதைப்போன்ற பல துறைகளை அறிமுகம் செய்வது மட்டும்தான் ஒரே வழி. வாழ்க்கையின் ஒட்டுமொத்தச் சாதனைதான் முக்கியம் என்றும், அதில் ஒரு பகுதி மட்டுமே பிற அனைத்தும் என்றும் கற்பிக்கவேண்டும். பிள்ளைகளை நுகர்வுக்கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடும் பெற்றோர் அவர்களின் உடலை மட்டும் அல்ல உள்ளத்தையும்தான் அழிக்கிறார்கள்.

சா. சுப்ரமணியம்

முந்தைய கட்டுரைதாவரங்கள், வனம் அறிமுக வகுப்புகள்