ஆலயப்பயணம், ஆலயக்கலைப் பயிற்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் சென்ற செப்டம்பரில் ஆலயக்கலை முதல்நிலை வகுப்புக்குப்பின்இந்த ஆண்டு இரண்டாம்நிலை முடித்துபுதுக்கோட்டை பயணத்துக்கு என் குடும்பத்தினருடன் கலந்து கொண்டேன்.பல்வேறு காரணங்களால் எங்கள் வகுப்புக்குரிய  பயணம் தள்ளிப்போய்இறுதியாக ஓராண்டுக்குப்பின் இந்த செப்டம்பரில் அமைந்தது.இந்த ஓராண்டு இடைவெளி,உண்மையிலேயே என்னை பயமுறுத்தியது.ஒன்றும் தெரியாத,நினைவில் எதுவும் இல்லாதவனாக போய் நிற்கப்போகிறேனே என நினைத்தேன்.ஆனால்ஒரு குருவின் கீழ் நம்மை முழுக்க ஒப்புக்கொடுத்து நாம் பயிலும்போதுநாம் பயின்ற தகவல்கள் எத்தனை தூரம் அகத்திலும் ,ஆழ்மனதிலும் கூழாங்கற்களாக பதிந்து கிடக்கிறது என்பதை அனுபவித்து உணர்ந்தேன்.வகுப்புக்குப்பின் ஆசிரியரின் கீழ் ஒருங்கமைத்த ஆலயக்கலைப்பயணம் என்பது அறிதலின் உச்சம்.ஆசிரியருடைய வழிகாட்டுதலின் கீழ்அருகே நெருங்கிப்பார்க்கும்தோறும்ஒவ்வொரு கற்ற  தகவலும் கண்ணாடியில் பனி விலகுவதுபோல மெதுமெதுவாக அளித்த துலக்கும் ஒரு இனிய அனுபவம்.

என் பதினொருவயது மகனுக்கு ஆசிரியர் திரு.ஜெயக்குமார் அவர்களை பொன்னியின் செல்வனில் பணியாற்றியவர் என்ற ஒரு சிறு அறிமுகம் மட்டுமே செய்திருந்தேன்.எங்களின் அதிர்ஷ்டம்திரு.ஜே.கே முழுப்பயணத்திலும் எங்கள் வாகனத்தில் உடனிருந்தார்.அவர் உரையாடலில் மெல்லமெல்ல உள்சென்று,கடைசிநாளில் அவர் அருகிலேயே அமர்ந்துபயணம் முடியும்போது அவ்வளவுதானா என கண்கலங்கினான்.அதன்பிறகான இரண்டு வார உரையாடலின்போது  ஏதேனும் ஒரு கணத்தில் அவன் அப்பயணத்தை நினைவுகூராத நாளே கிடையாது.மெல்ல ஒரு விதை ஊன்றப்பட்டுவிட்டது.என் மனைவியும்,மூன்று வயது மகளும் பெரும்பாலும் எட்ட நின்று கவனிக்கும் பொது  பார்வையாளர்களாகவே முழுப்பயணத்திலும் உடனிருந்தார்கள்.ஆனால்,என் மனைவியின் கூரிய உள்வாங்கும் திறனையும்,அவதானிப்பையும் நானறிவேன்.இவ்வளவு அமைதியான ஆலயங்களை தேடிச்சென்று பார்தததே ஒரு மாபெரும் வேண்டுதல் போல இருந்தது  என்றாள் .அதைவிடதிரு ஜே.கே ஒருங்கமைத்திருந்த படிப்படியான ஆலய அறிமுக வரிசையாகிய குடைவரை கோயில்கள்,மிகச்சிறிய தனி ஆலயங்கள்,சிறிய தனி ஆலயங்கள்,வெவ்வேறு கட்டுமானநிலையிலிருந்த மற்ற ஆலயங்கள்,இறுதியாக பெருஞ்சிற்பங்கள் மற்றும் குறுஞ்சிற்பங்களின் தொகையாகிய சீனிவாசநல்லூர் கோரங்கநாதர் ஆலயம் போன்றவை மிக எளிதாக வகுப்பில் கற்பதுபோன்று உள்வாங்க முடிந்தது என்றாள்.கொடும்பாளூர் மூவர் ஆலயத்திலும்,சீனிவாசநல்லூர் ஆலயத்திலும் சில சிற்பங்களை காட்டி நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி என்னை அதிர வைத்தாள்.இந்தப்பயணத்தில் எங்குமே அவர்கள் சலிப்படையாமல் உற்சாகமாகவே இருந்தார்கள்.

எனக்கு தெரியும்ஆசிரியர் ஜே.கே அள்ளிக்கொட்டிய ஆலயங்களைப்பற்றிய தகவல்களும்,குறிப்புகளும் ஏராளம்அதனை என் மூளையில் சேகரிப்பதும்,நிலைநிறுத்துவதும் மிகக்கடினம் என்று.அனால்,ஏதேனும் ஒரு ஆலயத்தில் ,ஒரு சிற்பத்தின் முன் நிற்கையில் என்னால் என் ஆழ்மனதிலிருந்து , ஒரு சிறுமுயற்சிக்குப்பின் அதைப்பற்றிய தகவலை தேடியெடுக்கமுடியும்,தொடர்ந்து பயிற்சிசெய்தால் இன்னும் விரிவாகவே விளக்கி கொள்ளமுடியும்.இதுவே இந்த ஆலயக்கலை வகுப்பிலும்,பயணத்திலும் பெற்ற  பெரும் கொடை.எந்த தலைமுறையிலும் ஒரு ஆலயத்தை பற்றிய அடிப்படை அறிமுகபயிற்சி  வகுப்புக்கு வாய்ப்பு கிடைக்காத எங்கள் குடும்பத்தில்இந்த தலைமுறையில் எனக்கும் என் அடுத்த தலைமுறைக்கும் கிடைத்தது ஒரு நல்லூழ்.இந்த பேரனுபவத்தை எங்களுக்கு அளித்த ஆசிரியர் ஜே.கே அவர்களுக்கும்உங்களுக்கும்உடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள்.

மாணிக்குமார்

மதுரை.

முந்தைய கட்டுரைஇயற்கையோகம்
அடுத்த கட்டுரைசுற்றம் இன்றியமையாததா?