கலையின் அருவுருவம்

அன்புள்ள ஜெயமோகன்,

சேலம் கட்டண உரை பற்றிய அறிவிப்பில் இரண்டு ஓவியங்களைக் கொடுத்திருந்தீர்கள். ஒன்று தொல்பழங்கால ஓவியம். இன்னொன்று சமகால நவீன ஓவியம். இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு அல்லது ஒற்றுமை பற்றித்தான் பேசப்போகிறீர்களா?

ஆர். கண்ணபிரான்

 

அன்புள்ள கண்ணபிரான்,

உண்மையில் எனக்கு இப்போது என்ன பேசப்போகிறேன் என்று  அவ்வளவு தெளிவேதுமில்லை. பேசும்போது என்ன வருகிறதென்று பார்க்கலாம் என்றே நினைக்கிறேன். இதுவரை மேடை என்னை கைவிட்டதில்லை.

முதல் ஓவியம் மத்தியப்பிரதேசத்திலுள்ள பச்மார்ஹி குகை ஓவியங்களில் ஒன்று. 20000 ஆண்டு தொன்மையானதாக இருக்கலாம். இரண்டாம் ஓவியம் சமகால நவீன ஓவியம். முதல் ஓவியத்திலுள்ளது ஆண்பெண் நடனக்காட்சி. இரண்டாம் ஓவியத்திலுள்ளது ராதாகிருஷ்ண நடனபாவம்.

முதலில் வரையப்பட்ட ஓவியத்தில் உள்ளது அருவம். அப்ஸ்டிராக்ட். அதை வரைந்தவன் எப்படி உணர்ந்தானோ அப்படி. அதன்பின் பல ஆயிரமாண்டுகளாக அதை ஓவியமாக திருத்திக்கொண்டே வந்திருக்கிறான். ஆகவே தான் ஓவியங்கள் தெளிவான உருவம் கொண்டன.

இந்த தெளிவு அந்த ஆதி உள்ளுணர்வின் தெளிவு அல்ல, அது  அந்தக் கலைவெளிப்பாடு தொழில்நுட்ப ரீதியாக தெளிவாக ஆனதுதான் என்ற பார்வையில் இருந்தே அந்த தெளிவை மீண்டும் தொன்மையான தெளிவின்மைக்கு கொண்டுசெல்ல முயல்கிறார்கள். நவீன அருவ- அப்ஸ்டிராக்ட் ஓவியங்களின் முயற்சி அதுவே.

நான் இந்த கருத்துக்குள் அலைந்துகொண்டிருக்கிறேன். என் அகத்தே. வெளியே விருந்திருக்கும் இந்தியாவில்.

ஜெ

முந்தைய கட்டுரைசைவம், அறிமுக வகுப்புகள்
அடுத்த கட்டுரைமதம் தேவையா?