நம்முள் எழும் புரவி

அன்புள்ள ஜெ

நான் சமீபகாலமாக என்னை கவனிக்கிறேன். நான் எதிலும் தீவிரமாக இருக்கிறேன். எனக்கு ஒன்று திணிக்கப்பட்டாலோ நானே அதை தேடிக் கொண்டாலோ அதை நோக்கி நான் தீவிரமாக செயல்படுகிறேன். இன்பமோ துன்பமோ அதை தீவிரமாக உள்வாங்குகிறேன். எந்த அளவு தீவிரமாக என்றால் வெய்யோன் சூரிய வெப்பம் என்னை சுடும் போது அது கொஞ்சநேரத்தில் சுகமாகிறது வெய்யோன் ஒலி என்னை இன்னும் தீவிரமாக எரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இரவின் கருமையை இன்னும் ஆழமாக உள்வாங்க நினைக்கிறேன். ரகுமானின் இசையிலும் சில சமயம் அவ்வாறு ஊடுருவிகிறேன். ஒரு விளையாட்டில் நான் பங்கு கொள்ளும் போதுகூட என் முழு சக்தியையும் வெளி காட்டுகிறேன் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் மீளுவதில்லை. என் கேள்வி என்னவென்றால் இது வெறும் வெற்று உணர்வா ? இதுபோன்ற தீவிர உணர்வுகளின் ஆழத்திலோ உட்சியிலோ அடைவது என்ன? இந்த தீவிரத்தை இலக்கியத்திலோ மற்ற கலையிலோ வெளிகாட்டினால் அடையப்படுவது விடுதலையா?

 

ராசாத்தி

அன்புள்ள ராசாத்தி

தீவிரம் என்பது ஓர் உணர்வுநிலை. உள்ளம் தன் உச்சநிலையில் விரைவது. அதற்கு இன்று பல நரம்பியல் சார்ந்த காரணங்களையும் சொல்கிறார்கள். மூளையின் செயல்பாட்டுரசாயனங்களின் சுரப்பு சார்ந்தது. நான் அதை உளம்சார்ந்த ஒரு நிலை என்றே சொல்வேன். அத்தகைய நிலையில்தான் பெரும்பாலும் நான் இருந்துகொண்டிருக்கிறேன். என்னால் அதிதீவிரமாகச் செயலாற்றாமல் இருக்கமுடியாது. இயற்கையில் இருக்கையிலும் அதன் உச்சநிலைகளையே விரும்புவேன். இயல்பான அன்றாடம் என்பதே என் வாழ்வில் இல்லை. 

ஆனால் அந்த மனநிலையைச் சரியானபடி ஒழுங்குபடுத்தி ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடாவிட்டால் அந்த உளவிசை வெறும் பரபரப்பாகவே எஞ்சும். அது துயிலின்மையை, சோர்வை உருவாக்கும். அந்த விசை சோர்வால் அடங்கியதும் சோர்வு மறு உச்சம் நோக்கிச் சென்றுவிடும். உங்கள் உள்ளம் தீவிரமாக உள்ளது என்றால் நீங்கள் செய்யவேண்டிய செயல் என்ன என்று சிந்தியுங்கள். கலைகளா, இலக்கியமா, அறிவுத்துறையா அன்றி வேறா? அங்கே உங்கள் முழுவிசையையும் குவியுங்கள். முழுவீச்சடன் செயல்படுங்கள்.

நான் ஒரு நாளில் இருபத்துநான்கு மணிநேரம்கூட தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக 38 மணிநேரம் எழுதியதுமுண்டு. அந்த உளவிசையை எனக்கு நிறைவும் மகிழ்ச்சியும் ஊட்டும் ஒரு களத்தில் குவித்திருப்பதனால் அது எனக்கு விடுதலையை அளிக்கிறது. சாதனையுணர்வை அளிக்கிறது. ஆகவே சோர்வும் சலிப்பும் எஞ்சுவதில்லை.

குதிரைக்கு ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டர்  எடையுடன் ஓடியாகவேண்டும், அப்போதுதான் அது ஆரோக்கியமாக இருக்கும். நம் அகமும் அப்படியே. அதன் ஆற்றலுக்கேற்ப நாம் பணியை அளிக்கவேண்டும். ஆனால் அந்தப்பணி நமக்குரியதாக, நம்மை முன்னெடுத்துச்செல்வதாக, படைப்புத்தன்மைகொண்டதாக இருக்கவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஅஜிதன், மேலைத்தத்துவ வகுப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைஒத்திசைவு, கடிதம்