விபாசனாவில் மலர்தல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

மூன்றாவது முறையாக நித்யவனத்தில் ஆசிரியர் அமலன் ஸ்டேன்லி நடத்திய விபசனா வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. மூன்று வக்ப்புகளிலும் வெவ்வேறு கோணங்களில் தியானப் பயிற்சியும் புத்த தரிசனமும் அனுகப்பட்டிருந்ததை அறியும் அனுபவம் வாய்த்தது என் நற்பேறு. அதைத் தாண்டி ஒவ்வொரு வகுப்பிலும் அவர் வெவ்வேறு வண்ணங்களில் நிகழ்வதைப் பார்ப்பது தான் முதன்மைக் குறிக்கோள். கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் அவரைப் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாலும் வகுப்புகளின் போது தனி நெறுக்கம் ஏற்படுவதை, உடலோடு உடலாக நாளெல்லாம் அருகிருக்க முடிவதை, இரண்டரை நாட்களை தியானத்திற்கென அளிப்பதன்வழி அடையும் அனுபவத்தை எண்ணி ஏக்கம் எழுவதை அறியமுடிகிறது.

மூன்று வகுப்புகளின்பின்பும் எழுதிவைத்த குறிப்புகளை மீண்டும் வாசித்தேன். முதல் வகுப்பில் மூச்சில் நிலைகொள்ளுதல் எனும் பயிற்சி முதன்மையாக இருந்திருக்கிறது. இரண்டாவது வகுப்பின்போது அபிதம்ம பிடகத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டினார். மூன்றாவது வகுப்பில் மாணவர்களோடான உரையாடல்கள் மிகுதி. இம்முறை வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் நித்யவனத்திற்கு முதல்வரவென்று அறிந்தேன்.

பயிற்சிக்கு வெளியில் கேட்கப்படும் கேள்விகளை எப்போதும் அவர் ஊக்குவிப்பதில்லை. அவரிடம் கேள்வி கேட்பது எப்படி என்று தெரிந்துகொள்ளவே எனக்கு ஒன்றரை வருடம் பிடித்தது. ஆனால் இம்முறை அவர் வேறாக இருந்தார். தத்துவார்த்தமான கேள்விகளில் இருந்து புத்தர் பற்றி பொதுவாக நம்பப்படும் செய்திகள் வரை, தெளிவற்ற அந்தரங்கமான கேள்விகள் முதல் ஆன்மீக அரட்டை என்று சொல்லத்தக்கவை வரை அவர் ஒன்றையும் விடாமல் எதிர்கொண்டார். எங்கிருந்து இவருக்கு இத்தனை ஆற்றல் வந்தது என்று வியந்துதான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

முதல் நாள் அலை அலையாக எழுந்த கேள்விகள் எல்லாம் இரண்டாம் நாள் குறைந்தன. மூன்றாம் நாள் முடிவில் ‘ஏதேனும் கேள்விகள் உண்டா?’ என்று அவர் கேட்டபோது வகுப்பு சில நிமிடங்களுக்கு அமைதியில் மூழ்கியது. அவ்வமைதியை அவர் சற்று நேரம் இருக்கவிட்டார்.

ஆசிரியருக்கும் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்குமான உறவு செயலூக்கம் மிக்கதாகவும் ஒன்றையொன்று சார்ந்து பின்னூட்டச் சுற்றுகள்வழி அக்கணத்தில் ஆகிவருவதாகவும் இருப்பதைப் புரிந்துகொண்டேன். அங்கிருக்கும் மாணவர்களின் நிரைக்கு ஏற்ப தம் உள்ளுணர்வால் வகுப்புகளில் மாற்றங்கள் செய்கிறார் ஆசிரியர். முதல் இரண்டு வகுப்புகளிலும் நடைத்தியானம் குறித்து அவரது வழிகாட்டுதலும் மூன்றாவது வகுப்பில் அவர் காண்பித்ததும் நுட்பமாக வேறுபட்டிருக்கின்றன. அவ்வகுப்புகளில் உரைப்பவை அங்கிருப்பவர்களுக்கானது.

எப்போதும்போல இந்த வகுப்பிலும் ஆசிரியர் அமலன் ஸ்டேன்லி பௌத்தத்தையோ புத்தரையோ கறாராகப் பற்றியிருக்கவில்லை. விபசனா என்பதைவிட அகவிழிப்புநிலைப் பயிற்சிகள் என்றே இவ்வகுப்புகளைக் கூறவேண்டும். அத்வைதம் முதல் சித்தர் மரபு வரை பல வண்ணங்களிலாக அமைந்தது வகுப்பு. மூன்று விதங்களில் புத்தரை, பௌத்தத்தை ஆசிரியர் கைக்கொள்கிறார்.

ஒன்று, வகுப்பில் கற்பிக்கப்படும் அடிப்படையான உடற்கூராய்வு தியானம். இதிலும் ஆசிரியரின் முத்திரை கலந்திருக்கும் என்றாலும் புத்த சூத்திரங்களில் இருந்தும் தமது ஆசிரியர்களிடமிருந்தும் அவர் கற்றது இது. இரண்டாவதாக பயிற்சிக்கு அடிப்படையான கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் புத்தத்தினுடையவை. அக்கருத்துக்களை விளக்காமல் பயிற்சியின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள இயலாது. புத்தரின் சார்புறு கொள்கையை சூழியல் கோட்படுகளோடு பிணைத்து ஆசிரியர் விவரிக்கும் இடம் முக்கியமானது. அவ்வண்ணமே தன்னின்மை, நான்கு உன்னத உண்மைகள், துக்கம் என புத்தத்தின் தரிசனங்களை எல்லாம் அவரது பாணியில், யதார்த்தத்தில் ஆழக் காலூன்றி விவரிக்கிறார். மூன்றாவதாக தியானத்தின் அனுபவங்களுக்குப் பின் என்ன என்ற கேள்விக்கு விடையாக பிரம்ம விகாரங்கள், சீலங்கள் என புத்தரின் பார்வையைக் கைக்கொள்கிறார்.

ஆனால் பயிற்சிகளும் பாடங்களும் இந்த எல்லைக்குள் மட்டும் அமைவதில்லை என்பதை மீளமீள அறிகிறேன். வழிகாட்டும் தியானப் பயிற்சிகளில் அவர் அத்வைதத்தையும் ஜென்னையும் தொடாமல் இருந்ததில்லை. திறந்த மனதோடு வகுப்பிற்கு வரும் நண்பர்கள் அத்தனைபேரும் தியானத்தின் இனிமையை சிறிதேனும் சுவைக்காமல் சென்றதில்லை என்பதை இந்த மூன்று வகுப்புகளிலும் காண்கிறேன். இவ்வகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.

 “மூனு நாள்ல இதோட ஒரு சின்ன சுவைய குடுத்துடனும்ப்பா. அப்பறம் அவங்க அன்றாடத்துக்குள்ள போய்டுவாங்க. இந்த அனுபத்த வச்சிக்கிட்டு என்ன பன்றதுங்குறது அவங்கவங்க பாடு” என்றார் ஒரு முறை. ஆனால் வகுப்பிலேயே அவ்வனுபவங்களை என்னதான் செய்வது என்பது குறித்து தெளிவாகவே வழிகாட்டினார்.

இந்த இரண்டரை நாள் வகுப்பில் ஒரு முழுமையை உணர்கிறேன். தியானம் என்பது என்ன என்ற தீவிரமான தேடலில் இருக்கும் எவருக்கும், அவர் தியானம் எனும் சுவையை அறிந்தேயிராதவராக இருந்தாலும், அல்லது பல்லாண்டுகளாக பயிற்சியிலூறி நிலைகொண்டவராக இருந்தாலும் இம்முழுமையிலிருந்து பெற்றுக்கொள்ள சில உண்டு.

அச்சுவையை எங்கேனும் தற்செயலாகவோ வாழ்வனுபங்களினூடோ முயன்று தட்டுத் தடுமாறியோ சிறிதேனும் எல்லோரும் அனுபவித்திருப்போம்தான். ஆனால் அதற்குள் ஆழ்ந்து செல்ல, அதன்வழி பயணிக்க ஆசிரியரின் வழிகாட்டுதல் அத்தியாவசியம் என்றெண்ணுகிறேன். அதனாலேயே அவரோடு அமர்ந்து தியானம் செய்வதை விழைகிறேன்.

விபசனா பயிற்சி உடலையும், அதன்வழியே மனதையும் பகுத்துப் பிரித்தெடுத்துப் பார்க்கச் செய்கிறது. இப்பயிற்சிக்குள் படைப்பூக்கத்தோடு பயணிக்க வழி இருப்பினும் அடிப்படையில் இது கற்பனைகளுக்கு எதிரானது. எண்வழிப்பாதையில் ஒன்றான சம்ம திட்டி (நண்ணோக்கு) அல்லது ‘வாழ்வை இவ்வாறாகப் பார்க்கவேண்டும்’ என்று புத்தர் காட்டிய பாதையில் மட்டுமே தத்துவத்துக்கும் அறிவுப்பூர்வச் செயல்பாட்டுக்கும் இடமிருக்கிறது. இது அன்றாடத்தில் நிலைகொண்டெழும் வாழ்க்கைமுறை.

எனவே பயிற்சி வாழ்வின் ஒரு பகுதியாக அல்ல, பயிற்சியை மையமாக வைத்தே வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. காலையில் செய்யும் பயிற்சி நாளின் எல்லா கணங்களிலும் ஊடுறுவி நிறைக்கிறது. அதனால் விபசனாவைத் தொடர்ந்து பயில்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதை ஆசிரியர் முதல் நாளிலேயே கூறிவிடுகிறார். கருவிகளைத் தந்து பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்து தனியே அனுப்பிவிடுவதுதான் இவ்வகுப்புகள். இருந்தும் தொடர்ந்து பயிற்சி செய்யும் நண்பர்கள் பகிரும் செய்திகள் உற்சாகம் அளிக்கின்றன.

இம்முறை வகுப்பு முடிந்த பிறகு தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் நெகிழ்ந்துபோய் நன்றி கூறினர். பயிற்சி சார்ந்து ஆசிரியர் அளிக்கும் திருத்தங்களை ஆர்வத்தோடு மேற்கொண்டனர். அவர்தம் எண்ணங்கள், கருத்துநிலைகள், புரிதல்கள் சார்ந்து ஆசிரியர் அளித்த வழிகாட்டுதல்கள் அவர்களுள் நிகழ்த்திய மாற்றங்கள் என்னவென்பது வெளித்தெரிய காலம்பிடிக்கும் என்றெண்ணுகிறேன்.

ஜென் குரு திக் நாட் ஹான் ஃப்ரான்ஸில் அமைத்த ப்ளம் வில்லேஜ் தியான மைத்திற்குச் சென்று பயிலும் அருண், தீவிர உரையாடல்களில் ஈடுபட்ட நுண்கலைக் கலைஞர் கோபால் சார், மிக இலகுவாக நட்பாகிப்போன அப்துல் சார், வகுப்புக்குப் பிறகு உள்ளுணர்வின் வழிகாட்டுதலில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் லதா மேடம் என இவ்வகுப்பில் வண்ணமயமான நண்பர்குழாம் வாய்த்தது.. ஆசிரியர் எங்கே நின்று யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் உற்றுக் கவனித்து தீவிரமான கற்றல் நிலையிலேயெ இருந்தனர் நண்பர்கள் யாவரும்.

இவ்வகுப்புகளை அனுபவிக்க வழிசெய்த உங்களுக்கும் மணி அண்ணாவிற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. ஆசிரியருக்கு எனது நன்றி என்பது தினந்தோறும் செய்யும் பயிற்சிதான்.

 

  • பன்னீர் செல்வம்

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவத்தை ஏன் கற்கவேண்டும்?