யோகமுகாம், அனுபவம்- சாம்ராஜ்

அன்புமிக்க ஜெ,

நான் நான்கு வருடங்களாக செளந்தரின் மாணவன். 2020யின் தொடக்கத்தில் அவரை சந்தித்தேன். அப்பொழுது முதல் விட்டு விட்டு யோக பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன்.

பெந்தேகோஸ்தே ஆவி எழுப்புதல் கூட்டங்களில் இடையில் தேவ சாட்சியங்களை மேடைக்கு அழைத்து வருவார்கள். “குருடர்கள் பார்க்கிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள்.” என்ற விவிலிய வாசகத்தில் பொழிப்புரையாக இருக்கும் அது.

ஒரு கணக்கில் நான் செளந்தரின் தேவசாட்சிதான். இந்த நான்கு வருடங்களில் எனக்கு நடந்த எல்லா நன்மைகளிலும் செளந்தருக்கும் பங்குண்டு.

கொடைமடம் நாவலின் நன்றியில் அதை நான் குறிப்பிட்டிருப்பேன். “இந்த நாவலை எழுதுவதற்கான உடல் வலிமையையும் மனவலிமையையும் வழங்கிய என் யோக ஆசிரியர் செளந்தருக்கும்” என

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மீட்டர் வட்டியென்று ஒன்றுண்டு. பின்னால் அது மின்னல் வட்டியென மாறியது. காலை 4 மணிக்கு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் பதினொரு மணிக்கு 1400ஆக திருப்பி கொடுக்க வேண்டும். அன்றைக்கே பலன்,

நான் யோக செய்யும் நாட்களில் அதை உணர்ந்திருக்கிறேன். அன்றே அப்பொழுதே பலன். யோக செய்யும் நாட்களுக்கும் செய்யாத நாட்களுக்கும் பெரும் வேறுபாடு உண்டு.

யோகா செய்வதில் உள்ள ஒரே சிக்கல். அதை ஒருநாள் செய்யாது விட்டால், பின் மறுபடியும் தொடங்குவது பெரும் சிக்கல். அந்த ஒருநாளில் அந்த ரயில் போய்விடும். அது போவது மாத்திரமல்ல கூடவே தண்டவாளத்தையும் சுருட்டிக்கொண்டு போய்விடும். பின் வேறு நிலையம் வேறு ரயில் என்று அலைய வேண்டும்.

நீங்கள் யோக வகுப்பை பற்றி எழுதுகையில் “இடையில் நிறுத்தியவர்களும் வரலாம்” என்று சொல்லியிருப்பீர்கள். அது இன்னும் என்னை உத்வேகப்படுத்தியது. ஏப்ரலில் செளந்தரிடம் வகுப்புக்கு போன பொழுது முடிந்தால் யோக முகாம்க்கு வாருங்கள் என்றார்.

இந்த யோக முகாமில் மிக முக்கியமான ஒன்று, செளந்தர் இந்த வகுப்பை நடத்தும் விதம். மிக மிக நிதானமாக நடத்துகிறார். எவ்வளவு சந்தேகங்கள் கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்கிறார். வகுப்பை பெரும் சிரிப்போடு நடத்திக்கொண்டு போகிறார்.

கற்றலின் முக்கியத்துவம் அதையறிந்த மனிதர்களோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து பயிலும்போது இன்னும் அதை இனிமையானதாக மாற்றுகிறது.

வழக்கறிஞர் வேலு, வேளாண் அதிகாரி கற்பகம், மென்பொறியாளர்கள் ஜானகிராமன், சக்திராஜ், லட்சுமிகாந்த் – ஜெயஸ்ரீ, திலீப், ராமமூர்த்தி, நிரஞ்சன், நவீன், ஆசிரியர்கள், வேலுமணி, தமிழ்ச்செல்வி, பழைய EROS ஆதரவாளர் பாலசுப்பிரமணியமும் அவரது துணைவியாரும், கணித ஆசிரியர் தூத்துக்குடி பிரபு, சிங்கப்பூர் சர்வா மற்றும் அவரது குடும்பம், வயதில் மூத்த சிவபிரசாத், மின்பொறியாளர் சண்முகநாதன், கவிஞர் மோகனரங்கனின் துணைவியார் கல்பனா, ஓவியர் லலிதா, பத்தனம் திட்டாவிலிருந்து கலையரசன், சேலத்திலிருந்து பரதன், முன்னாள் வங்கி ஊழியரும் தற்போது வழக்கறிஞருமான பழைய மதுரை ரவிச்சந்திரன், காரைக்குடியிலிருந்து மருத்துவர் அறிவழகனின் தாய்மாமா கணேஷ் சார் என இன்னும் நிறையபேர் கூடி ஒன்றாக கற்றோம்.

எல்லோரும் சரியாக செய்கிறோமா என்று கவனிக்க செளந்தரின் துணைவியார் சாரதாவும் கூடுதலாக கவிதாவும்

கடந்த காலத்தில் யோகா, பலவிதமான பள்ளிகள், யூ ட்யூபில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான யோக செய்முறை வீடியோக்கள், நாம் எதை பின்பற்றுவது? எதை தேர்ந்தெடுப்பது? உண்மையான அதன் பயன்மதிப்பென்ன? ஒரு தனிமனித மன/ உடல் ஆரோக்கியத்திற்கும் சமூக ஆரோக்கியத்திற்குமான தொடர்பு, யோகா மந்திர வித்தையல்ல மாயஜாலமுமல்ல, அன்றாடம் பயிலவேண்டியது எனப்பல தளங்களில் தெளிவாய் பயிற்றுவித்தார் செளந்தர்.

வாழ்வின் அனுபவங்கள் கூடும்பொழுது அற்புதங்கள் மீதான நம்பிக்கை குறைந்து செயல்படுதல் மீதான பற்றுதல் கூடுகிறது. அதை இந்த வகுப்பு உறுதிபடுத்தியது.

செயலூக்கம் மிக்க இந்த வகுப்பை நிகழ்த்திய ஆசிரியர் செளந்தருக்கும், உடன் இணக்கமாய் பயின்று நல்லதொரு சூழலை உருவாக்கிய நண்பர்களுக்கும் அக்கரையோடு எங்களை பேணிய நண்பர் அந்தியூர் மணிக்கும் உணவு வழங்கிய அம்மாவிற்கும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமான உங்களுக்கும் மாறா நன்றியும் அன்பும் சார்.

மீத வாழ்வில் இருட்டுக்கு இடமேயில்லை என்று தோன்றுகிறது சார்.

 

வணக்கத்துடன்

சாம்ராஜ்

முந்தைய கட்டுரைகாணொளிகள்- கடிதம்
அடுத்த கட்டுரைஇஸ்லாமிய – சூஃபி மரபை ஏன் கற்கவேண்டும்?