அருமருந்து

அன்புநிறை ஜெ.

பிப்.28, மார்ச் 1,2 தேதிகளில் உளக்குவிப்பு பயிற்சி வெள்ளிமலையில் என்ற அறிவிப்பு உங்கள் தளத்தில் கண்டேன். சென்ற வருடமே கிளம்ப ஆயத்தமாகி இந்த முறை கைகூடியது. நெடுநாட்களாக தூக்கமின்மை, மனம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். புதுவையில் இருந்து யார் யார் வருகிறார்கள் என்று தெரியாத நிலையிலும் தனி ஒருத்தியாக வெள்ளிமலை கிளம்பிவிட்டேன். வாட்ஸ்அப் குழு 5 நாட்கள் முன்னதாக Open ஆனபோது யாருமே புதுவையில் இருந்து வெள்ளிமலைக்கு கிளம்புவதாக அதில் தகவல் இல்லை. கணவரும் மகனும் போருக்கு அனுப்புவது போல இரவு 11.00 மணிக்கு Sleeper Coach பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். ஏறி உட்கார்ந்ததும் போனைப் பார்த்தால் வாட்ஸ்அப் குழு பரபரத்து கிடந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் இருந்து அந்தியூர் வரை TT-ல் யாரெல்லாம் வருகிறீர்கள் என் ஓட்டெடுப்பு வேறு போய்க் கொண்டிருந்தது. சென்னை, பெங்களுர், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், சேலம், காஞ்சிபுரம் இடங்களில் இருந்து வருகிறோம் எனப் பலரும் பதிவிட, ஒருவர் நான் பைக்கில் வரேன் என்கூட யார் வரீங்க…. என்பன போன்ற தகவல்களால் தகித்தது குழு. அட்மினும் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாருங்கள் என எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார், நான் ஒருத்தி மட்டும், “ஹலோ! யாராவது என்னை பைபாஸில் Pickup பண்ணிக்கிறீர்களா” எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன். பவானி பைபாஸ் எங்கே இருக்கு? அந்தியூர் எங்கே இருக்கு? ஈரோடு ரயில்வே ஸ்டேசன் எங்கிருக்கு? என எதுவும் தெரியாமல் போகும் இடம் பற்றிய கனவுகளோடு 4.15 மணிக்கு பவானி பைபாஸில் வந்து இறங்கினேன். வாயிலே இருக்கு வழி என்பார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான். (நான் என்ன Sixteen ஆ Just Sixty!) ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’. தெய்வம் போலீஸ்காரர் வடிவில் வந்து அந்தியூருக்கு பஸ் ஏற்றிவிட்டது. காந்தியடிகள் சொன்னது போல் (என்றைக்கு ஒரு பெண் தன்னந்தனியாக…) 28.02.25 அன்றுதான் இந்திய சுதந்திர தினம். அந்தியூர் இறங்கினால் அங்கே நித்யவனம் செல்லும் தெய்வங்கள் எனக்கு உதவி பண்ண, அந்தியூரிலிருந்து வெள்ளி மலைக்கு  பேருந்தில் ஏறி அமர்ந்து பெருமையோடு முதல் பஸ் பிடித்துவிட்டேன் என்று குழுவில் பதிவிட்டேன்.

விரையும் தோட்டங்களை, பனியில் நனைந்த மரங்களை, பனிப்படலத்தின் ஊடே தெரியும் சின்னஞ்சிறு ஊர்களை, ஷேவ் செய்யப்பட்டது போன்ற பெயர் தெரியாத மரங்களை, பூமியிலிருந்து  மேலே கிளம்பி வானத்திற்கு சாமரம் வீசும் மரங்களை, கரையும் காகங்களை, கூவும் குயில்களை, ‘தண்டலை மயில்களின் நடனத்தை, தாமரைகள் விளக்கம் தாங்குவதை, குவளைக்கண் விழித்து நோக்குவதை’ வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வெள்ளிமலை நித்யவனத்தில் கால்பதித்தேன்.

ரம்மியமான இயற்கைச்சூழல், அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடம், சரஸ்வதி அம்மாவின் கைப்பக்குவத்தில் அருமையான உணவு, இனிப்பும் புளிப்பும் கலந்த அந்தப் பானகம், அந்தியூர் மணியின் அனுசரணையான பேச்சு…. நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு நித்யவனம் சொர்க்கபூமிதான். தியானம், யோகா, தத்துவம், மனஅமைதி, இலக்கியம் இவைகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்த இந்த இடத்தை நீங்கள் ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதற்கான காரணம் அங்கு சென்றவர்களுக்கே தெரியும்!

இறை வழிபாடு முடிந்து குருநித்யா அரங்கில் நுழைந்தோம். நெடிய தோற்றத்தில், தூய வெண்ணிற ஆடையில், நிலம் அதிராமல் நடந்து வந்து அமர்ந்தார் குரு தில்லை செந்தில்பிரபு. சுய அறிமுகம்  முடிந்தது. வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள். 50, 60 வயதுகளில் இருந்தோர் கால்வாசி. இந்த இளைஞர்களுக்குத்தான் என்னென்ன பிரச்சினைகள்? தொழில் முனைவோர், தனியார், அரசு அலுவலகங்களில்   உயர்பதவியில் இருப்போர், காவலர்கள், இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தோடு வந்திருந்தோர் எனப் பலரகத்தினர். இவர்கள் என்ன காரணத்திற்காக உளக்குவிப்பு பயிற்சிக்கு வந்தார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தூக்கமின்மை, கவனச்சிதறல், மனஅழுத்தம், செல்போன் பாதிப்பு இவைகள்தான் எனலாம்.

வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் குரு மனம், விழிப்புணர்வு, கவனக்குவிப்பு, இக்கணத்தில் வாழ்தல் முதலான விசயங்களைக் கூறினார். வகுப்புக்கு நேரத்தோடு வருதல், செல்போன் தடை இதனை கவனிப்புடனும் கண்டிப்புடனும் செயல்படுத்தினார். கேள்விகளும் பதில்களுமாக வகுப்பு சென்றது. 2 மணியிலிருந்து 5.30 மணிவரை Break. இரவு 9.00 மணி வரை வகுப்பு நீண்டது. சிறப்பாக, சாப்பாடு பற்றி சொல்லியே ஆகவேண்டும். வீட்டில் கூட நாம் சாப்பிடுகிறோம்தான். இங்கு சாப்பிட்டதுதான் சாப்பாடு. வாயார, வயிராற சோற்றை அள்ளி, அள்ளி உண்டோம்! பசித்துப் புசி என்று சும்மாவா சொன்னார்கள்? சரஸ்வதியம்மாள் நல்ல உடல் நலத்துடன்  வாழ இறை அருள்புரியட்டும்! இங்கிருந்த மூன்று நாட்களும் குருவாலும் இயற்கை சூழலாலும், அகமும் புறமும், அடியோடு மாறிவிட்டது. அதிர்ந்த பேச்சரவம் கூட கேட்கவேயில்லை.

சனிக்கிழமையன்று பிரணாயாம, தியானப் பயிற்சிகள் முடிந்த பிறகு குரு இன்னும் சில பயிற்சிகளை பயிற்றுவித்தார். அதாவது, நின்ற நிலை, கிடந்த நிலை, அமர்ந்த நிலை மட்டுமன்றி உடலசைவுகள் மூலமான பயிற்சியும் நாடி நரம்புகளை புத்துணர்ச்சி அடையச்செய்யும் என்று கூறினார். அடுத்து தூக்கமின்மை பிரச்சனைக்காகத்தான் பலபேர் இங்கு வந்திருந்தோம். அந்தப் பயிற்சி  முடியும் தருவாயில் பலரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதை ‘கொர் கொர்’ குறட்டையொலியால் உணரமுடிந்தது. இப்பயிற்சிக்குப் பின்னர் நான் எப்போதும் நித்ரா தேவியின்  அணைப்பிலேயே இருந்தேன். யாராவது ஒருவர் தேவியின் பிடியிலிருந்து என்னை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். எதற்காக நான் இங்கே வந்தேனோ அது நிவர்த்தியானதை உணர்ந்தேன்.

நான் அன்று மதியம் உங்கள் புத்தகங்களை அந்தியூர் மணியிடம் வாங்கிக் கொண்டு வந்ததைப் பார்த்து பலரும் ஆர்வமுடன் சென்று வாங்கினர். இரவு உணவு முடிந்தவுடன் அந்தியூர் மணி, ‘இசை மழையில் நனையத் தயாரா’ குங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்க, மதியம் வாங்கிய புத்தக வாசம் என்னை அறைக்கு அழைக்க, நான் புத்தகத்தில் மூழ்கினேன். இங்கே இசை மழையில் நனைந்து, அனைவரும் தலை துவட்டும் நேரத்தில் நான் அங்கு செல்ல ‘வாங்க வாங்க நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க’ என்றவுடன் மங்களம் பாடி இசைக் கச்சேரியை முடித்துவைத்தேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியோடு வகுப்பு நிறைவடையும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. அன்றைய வகுப்பில் இதுவரை கற்றுக்கொடுத்த பயிற்சிகள், தியானமுறைகள், சந்தேக நிவர்த்திகள் மறுபடியும் நினைவூட்டப்பட்டது. மூன்று நாட்களாக நடைபெற்ற பயிற்சியின் பின்னூட்டம் பற்றி பலர் பேசினர். பின்பு குரு அனைவரையும் கண்களை மூடி அமரக் கேட்டுக் கொண்டார். இறுதியாக அவர் உபதேசித்த ‘அந்த மந்திரம்தான்’ அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இதுதான் இந்தப் பயிற்சியின் உச்சம்! அந்தக் குரலின் சக்தியும், அமைதியும், அந்த இடத்தின் சூழலும் எப்படிப்பட்டவரையும் அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்வேன். மூன்று நாட்களாக எடுத்துக்கொண்ட பயிற்சியில் மனம் பண்படுத்தப்பட்ட நிலம்போல் அவ்வளவு இலகுவாக இருந்ததால் அவரவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், விசும்பலும், சன்னமான அழுகையொலியும், அவ்விடத்தை நிறைத்தது. மனதில் உள்ள குப்பைக்கூளங்களைத் தூர்வாரி, சரிசெய்துவிட்டு அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார் குரு. ‘கல்லுதல்’ என்ற சொல்லுக்கு ‘அகழ்தல்’ எனப் பொருள். ஒரு ஆசிரியராக எங்களின் அகத்தே இருந்து என்னென்ன அகழ்ந்தெடுத்தார் என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம். கலங்கிய விழிகளுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். ‘கண்டும் கேட்டும் உறவாடிய நாங்கள் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்தோம்’.

ஏன் சார் எங்களை அழ வைச்சீங்க?

நித்யவனத்தின் அருமருந்தை உட்கொண்டு வீடு திரும்பிய நான் நானாக இல்லை! யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை. மனதின் கசடுகள் நீங்கி, எண்ணஅலைகள் ஏதுமற்றவளாக, அமைதியாக என்னை நானே உள்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!  குறையொன்றுமில்லை!

பயிற்சிக்கு வந்த அனைவரின் சார்பாக குருவுக்கும், தங்களுக்கும், மற்ற வர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்!

இராச மணிமேகலை

முந்தைய கட்டுரைஒத்திசைவு, கடிதம்
அடுத்த கட்டுரைமொழி, கடிதம்