அன்புள்ள ஜெ
முழுமையறிவு நிகழ்ச்சியில் நீங்கள் நடத்தும் பல வகுப்புகள் இன்றைய தொழிற்சூழலில் மிக அவசியமானவை. அலுவலகச்சூழலில் அவை இல்லை என்பதனால் உருவாகும் பிரச்சினைகள் ஏராளம். உதாரணமாக நீங்கள் விவாதக்கல்வியை அளிக்கிறீர்கள். இங்கே நம் மக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு விவாதம் என்பதே தெரியாது. இஷ்டத்துக்கு தோன்றியதை எல்லாம் பேசுவார்கள், பிரிமைஸ் என்பதே தெரியாது. லாஜிக் என்பதே தெரியாது. இதையெல்லாம் கல்விநிறுவனங்களில் சொல்லிக்கொடுக்கவும் ஆளில்லை. அதேபோல ஏழுநிமிடம் பேசும் கலை. புத்தகங்களை ஆழ்ந்து வாசிக்கும் பயிற்சி. இதெல்லாம் இன்று ஒரு வேலையில் முன்னேறுவதற்கு மிக அவசியமானவை. இவற்றை நீங்கள் அலுவலகங்களுக்குச் சென்று கற்றுக்கொடுக்கலாமே.
செந்தில்குமார் சீரங்கன்
அன்புள்ள செந்தில்குமார்,
நான் பயிற்சியாளன் அல்ல. உங்கள் நிறுவன சி.இ.ஓ என்ன சம்பாதிக்கிறாரோ அதைவிட இரு மடங்கை அதைவிட பத்தில் ஒரு மடங்கு உழைப்பில் சம்பாதிக்கும் சினிமா எழுத்தாளன். எனக்கு பணம் தேவை இல்லை. தொழில்களத்தை வளர்ப்பதன் அவசியமும் எனக்கில்லை. நான் நடத்தும் வகுப்புகள் அறிவியக்கம் ஒன்றை மெல்ல கட்டி எழுப்ப முடியுமா என்னும் நோக்கில் முன்னெடுக்கப்படுபவை. என் இலக்கு அத்தகைய இளைஞர்கள்தான். அதன்பொருட்டே இந்த வகுப்புகளை இலவசமாக நடத்துகிறேன். இங்கே கற்பிப்பவர்கள் எல்லாருமே அந்த துறைசார் நிபுணர்கள். ஆனால் இலவசமாக வந்து கற்பிக்கிறார்கள். உதாரணமாக மாரிராஜ் தமிழகத்தின் முக்கியமான மருத்துவநிபுணர். ஆனால் அவர் இருபது பேருக்கு மருத்துவ அறிமுகத்தை மூன்றுநாட்கள் இலவசமாக நடத்துகிறார். அதே வகுப்பை உங்கள் அலுவலகத்தில் நடத்த சில லட்சங்கள் அவருக்குக் கட்டணம் அளிக்கவேண்டியிருக்கும். அறிவியக்க ஆர்வமே அனைவரையும் செயல்படச் செய்கிறது. இதற்கு பணமதிப்பு போட்டால் பல மடங்கு செலவிடவேண்டியிருக்கும்.நம்மவர் அதை உணர்வதே இல்லை. உணரக்கூடிய காலம் வரும்.
ஜெ